×

சடலங்களை புதைக்க இடமில்லாததால் மந்தைவெளி கிறிஸ்தவ மயானபூமி மூடல்: மாநகராட்சி அறிவிப்பு

சென்னை: மந்தைவெளி செயின்ட் மேரிஸ் சாலையில் உள்ள கிறிஸ்தவ மயான பூமியில் சடலங்களை புதைக்க இடமில்லாத காரணத்தினால் நிரந்தரமாக மூடப்படுவதாக மாநகராட்சி அறிவித்துள்ளது. சென்னை மாநகராட்சி, தேனாம்பேட்டை மண்டலம், பகுதி-25, வார்டு-124க்கு உட்பட்ட மந்தைவெளி, செயின்ட் மேரிஸ் சாலையில் கிறிஸ்தவ மயான பூமி, 6 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. மாநகராட்சி கட்டுப்பாட்டில் உள்ள இந்த மயானபூமி, கடந்த 2013ம் வருடம் (அவர் லேடி ஆப் கெய்டன்ஸ் சர்ச்) நிறுவனம் மூலம் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டு பராமரிக்கப்பட்டு வந்தது. ஆனால், 2014ம் ஆண்டில் கல்லறை பராமரிப்பு நீட்டிப்பிற்காக அந்த நிறுவனம் மூலம் பலமுறை அப்போதைய அதிமுக  அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டும் அதற்கு அதிமுக அரசு சார்பில் எந்தவொரு அனுமதியும் வழங்கப்படவில்லை. மேலும், மயானபூமியில் 1998ம் ஆண்டு முதல் தற்போது வரை உரிய ஆவணங்களுடன் விண்ணப்பித்த 2500க்கும் மேற்பட்டோருக்கு கல்லறை கட்ட அனுமதி அளிக்கப்பட்டு, கல்லறைகள் கட்டப்பட்டுள்ளன. கடந்த கொரோனா பாதிப்பு நேரத்தில் அதிக எண்ணிக்கையிலான உடல்கள் இங்கு புதைக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.இந்த கல்லறையை பராமரித்து வந்த நிறுவனம், திமுக ஆட்சிக்கு வந்த பின்னர்,  கடந்த ஆண்டு அக்டோபர் மற்றும் இந்த ஆண்டு ஏப்ரல் ஆகிய மாதங்களில் சென்னை மாநகராட்சி ஆணையருக்கு கடிதம் அனுப்பியது. அதில், இந்த மயான பூமியில் இறந்தவர்களின் உடலை புதைக்க இடம் இல்லை. எனவே, சென்னை மாநகராட்சியே பராமரிப்பு பணியை மேற்கொள்ள வேண்டும், என தெரிவித்து இருந்தது. இதுகுறித்து மண்டல சுகாதார குழு மூலம் இந்த மயான பூமியில் ஆய்வு செய்யப்பட்டது. அதில், இங்கு அதிக எண்ணிக்கையில் கல்லறை கட்டப்பட்டதாலும், அதிக எண்ணிக்கையில் உடல்கள் புதைக்கப்பட்டதாலும் தற்போது புதிய கல்லறை கட்டவும், மேற்கொண்டு சடலங்களை புதைக்கவும் இடமில்லை என்பது உறுதி செய்யப்பட்டது. மயானத்தின் பராமரிப்பு புரிந்துணர்வு ஒப்பந்தம் புதுபிக்கப்படாததால் சென்னை மாநகராட்சி மூலம் பராமரிக்கலாம் என முடிவு செய்யப்பட்டது. மேலும், இந்த மயானத்தில் சடலங்களை அடக்கம் செய்ய இடம் இல்லாததால் சுற்றுப் பகுதியை சேர்ந்த கிறிஸ்துவர்கள், அவர்களின் நம்பிக்கைக்கு ஏற்ப மாநகராட்சியின் பிற கிறிஸ்துவ கல்லறைகளுக்கு இறந்தவர்களின் சடலங்களை அடக்கம் செய்யலாம்,  எனவும் முடிவு செய்யப்பட்டது. இதுதொடர்பாக, சென்னை மாநகராட்சி மாமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, இந்த  மயானபூமி நிரந்தரமாக மூடப்படுகிறது. இந்த மயானபூமிக்கு மாற்றாக சடலங்களை அடக்கம் செய்வதற்கான மயான பூமி குறித்த விவரங்கள் பொதுமக்கள் அறியும் வகையில்  மயானபூமியின் அறிவிப்பு பலகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.   அதன்படி, மந்தைவெளி கிறிஸ்தவ மயான பூமிக்கு மாற்றாக அண்ணாநகர் மண்டலம் 101வது வார்டில் உள்ள மாநகராட்சி கிறிஸ்தவ மயானபூமி, கல்லறை சாலை, கீழ்ப்பாக்கம், அடையாறு மண்டலத்திற்குட்பட்ட ஒய்.எம்.சி.ஏ. கல்லறை, மவுண்ட் சாலை, நந்தனம் வளாகம், சின்னமலை கிறிஸ்தவ கல்லறை, எல்.டி.ஜி சாலை, சாந்தோம் நெடுஞ்சாலை பட்டினப்பாக்கம் கிறிஸ்துவ கல்லறை, அட்வன்ட் கிறிஸ்தவ கல்லறை வேளச்சேரி ஆகிய இடங்களில் உள்ள மயான பூமியை பயன்படுத்தலாம் என மாநகராட்சி அறிவித்துள்ளது. ஏற்கனவே மாநகராட்சியின் அனுமதி பெற்று செயின்ட் மேரிஸ் சாலையில் உள்ள கிறிஸ்தவ மயானபூமியில் கல்லறை கட்டியிருக்கும் நபர்களின் குடும்பத்தினருக்கு சென்னை மாநகராட்சி முனிசிபல் சட்டப்பிரிவு 349 (22) துணை விதி எண் 14ன்படி 14 ஆண்டுகளுக்கு கழித்து வரும் அதே குடும்பத்தின் உறவினர் சடலங்களை அதே கல்லறையில் தோண்டி மீண்டும் அடக்கம் செய்ய விண்ணப்பம் செய்பவருக்கு அனுமதி அளிக்கப்படும், என மாநகராட்சி தெரிவித்துள்ளது….

The post சடலங்களை புதைக்க இடமில்லாததால் மந்தைவெளி கிறிஸ்தவ மயானபூமி மூடல்: மாநகராட்சி அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Manthivela ,Christian Cemetery ,Chennai ,Christian ,St. Mary's Road ,Manthaivela ,Dinakaran ,
× RELATED தொழில்நுட்ப கோளாறால் சென்னையில்...