×

ஆழியாற்றின் குறுக்கே குறுகலான தரைமட்ட பாலத்தால் மக்கள் அச்சம்-உயர்மட்ட பாலம் அமைக்க கோரிக்கை

பொள்ளாச்சி :  பொள்ளாச்சி  அருகே கா.க.புதூர் கிராமத்துக்கு செல்லும் வழியில், ஆழியாற்றின் குறுக்கே  உள்ள குறுகலான  தரைமட்ட பாலத்தால் மக்கள் அச்சமடைகின்றனர். இங்கு  உயர்மட்ட மேம்பாலம் கட்ட வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.பொள்ளாச்சி அடுத்த காளியப்பகவுண்டன்புதூர் (கா.க.புதூர்) மற்றும்  ஆத்துபொள்ளாச்சி கிராமத்தில் சுமார் 3500க்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர்.  இதில் கா.க.புதூர் கிராமத்துக்கு செல்லும் முக்கிய வழித்தடமான,  மீன்கரை ரோட்டிலிருந்து இரண்டு கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள ஆழியாற்றில்  குறுக்கே சுமார் 250மீட்டர் நீளம், சுமார் 15 அடி அகலத்தில் தரைமட்ட பாலம்  அமைந்துள்ளது. இந்த வழித்தடத்தில் தினமும், இருசக்கர வாகனம்  முதல்  கனரக வாகனங்கள் சென்று வருகிறது. மேலும், மக்கள் நடந்து செல்லும் முக்கிய  வழித்தடமாக அமைந்துள்ளது. ஆனால், கா.க.புதூர் மற்றும் அதனை அடுத்த  ஆத்துப்பொள்ளாச்சி கிராமத்துக்கு செல்ல வசதியாக பல ஆண்டுகளுக்கு முன்பு  ஆழியாற்றில் கட்டப்பட்ட தரைமட்ட பாலத்தின் இருபுறமும் தடுப்புகள் இல்லாமல்  இருப்பது பெரும் குறையாக உள்ளது.பகல் மற்றும் இரவு நேரத்தில் அந்த  வழியாக வாகன போக்குவரத்து இருப்பதால், சில நேரங்களில் கனரக வாகனங்கள்  தரைமட்டபாலத்தில் வேகமாக வரும்போது, பொதுமக்கள் அச்சப்படுகின்றனர். மேலும்,  ஆழியாற்றில் இருந்து கேரளாவுக்கு தண்ணீர் திறக்கும்போது நீர் பாலத்தைதொட்டு  செல்கிறது. இந்த தரைமட்ட பாலமானது தாழ்வாக உள்ளதால்,  பருவமழைக்காலங்களில் ஆழியாற்றில் தண்ணீர் அதிகளவு வரும்போது இந்த தரைமட்ட  பாலமானது மூழ்கிவிடுவதுடன், இந்த வழித்தடத்தில் வாகன போக்குவரத்து  துண்டிக்கப்படுகிறது.இதனால்  அந்நேரத்தில், கா.க.புதூர் மற்றும்  ஆத்துப்பொள்ளாச்சி கிராமத்துக்கு, அம்பராம்பாளையம் அல்லது நல்லூத்துக்குளி  வழியாக சுமார் 5 கிலோ மீட்டர் வரையிலும் சுற்றி வரவேண்டிய நிலை  ஏற்பட்டுள்ளது. ஆண்டுதோறும் கன மழை பெய்யும்போது தண்ணீர் அதிகளவு வருவதால்,  தரைமட்டபாலத்தில் பல நாட்களுக்கு போக்குவரத்து தடைப்படுவது  தொடர்ந்திருக்கும். இந்த ஆண்டில் தொடர்ந்த பருவமழையால், தற்போது பாலத்தை  தொட்டவாறு தண்ணீர் கரைபுரண்டு ஓடுகிறது.ஆத்துப்பொள்ளாச்சி மற்றும்  கா.க.புதூர் கிராமத்துக்கு செல்லும் முக்கிய வழித்தடமாக இருப்பதால்,  இந்த தரைமட்ட பாலத்தின் இருபுறமும் தடுப்புச்சுவர் அமைத்து, பாதுகாப்பு  நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும். மழைக்காலத்தில் போக்குவரத்து  தடைப்படுவதை தவிர்க்க, அதன் அருகேயே உயர்மட்ட பாலம் கட்ட, சம்பந்தபட்ட   துறை அதிகாரிகள்  நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பல ஆண்டகளாக பொதுமக்கள்  கோரிக்கை விடுத்துள்ளனர்.இந்த தரைமட்ட பாலம் அருகேயே உயர்மட்ட பாலம்  அமைப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என, கா.க.புதூர் கிராம மக்கள்  எண்ணியிருந்தனர். ஆனால், கடந்த அதிமுக ஆட்சி காலத்தில், அதற்கான எந்த  நடவடிக்கையும் எடுக்காமல் கிடப்பில் போடப்பட்டது. மேலும், இந்த  வழித்தத்தில் உயர்மட்டம் பாலம் அமைப்பதற்கான தொகைகேட்டு கருத்தூரு  அனுப்பப்பட்டதாக கூறப்படுகிறது.  ஆனால், இதற்கு பதிலாக, வேறு பகுதியில்  உயர்மட்ட பாலம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டதாக, பொதுமக்கள்  வேதனையடைந்தனர். இனிமேலாவது கா.க.புதூர் கிராமத்துக்கு செல்லும்  வழியில் ஆழியாற்றை கடக்கும் தரைமட்ட பாலத்தை அப்புறப்படுத்தி, உயர்மட்ட  பாலம் அமைக்க சம்பந்தபட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என,  பலரும் கோரிக்கை விடுத்துள்ளனர். …

The post ஆழியாற்றின் குறுக்கே குறுகலான தரைமட்ட பாலத்தால் மக்கள் அச்சம்-உயர்மட்ட பாலம் அமைக்க கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Azhiyar ,Pollachi ,K.K.Budur ,
× RELATED ஆழியாறு தடுப்பணையில் தடைமீறிய...