×

பாஜ முக்கிய பிரமுகர் எஸ்.வி.சேகர் வெளியிட்ட பகீர் தகவல் தமிழகத்தில் 20 தொகுதிக்கு 260 கோடி செலவு செய்த பாஜ: வருமானவரித்துறை, சி.பி.ஐ., அமலாக்கத்துறை, தேர்தல் ஆணையம் மவுனம் ஏன் என சமூக ஆர்வலர்கள் கேள்வி

சென்னை: பாஜ தான் போட்டியிட்ட 20 தொகுதிக்கு 260 கோடி வரை செலவு செய்ததாக அக்கட்சியின் முக்கிய பிரமுகர், நடிகர் எஸ்.வி.சேகர் பரபரப்பு தகவல் வெளியிட்டுள்ளார். கட்சியின் முக்கிய தலைவரே வெளிப்படையாக தெரிவித்திருக்கும் நிலையில் வருமானவரித்துறை, சி.பி.ஐ., அமலாக்கத்துறை, தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்காமல் மவுனம் காப்பது  ஏன்? என்று சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.  சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று தமிழகத்தில் பாஜ எப்படியாவது காலூன்ற வேண்டும் என்று நினைத்து அதிமுகவுடன் கூட்டணி அமைத்தது. இதற்காக அதிமுக அரசை தனது கட்டுப்பாட்டில் மத்திய பாஜ அரசு வைத்திருந்தது.  தொடர்ந்து தமிழக சட்டப்பேரவை தேர்தலில் 60 தொகுதிகள் வரை போட்டியிட பாஜ சீட் கேட்டது. ஆனால், அவ்வளவு சீட்டை தர அதிமுக சம்மதிக்கவில்லை. காரணம், பாஜவுக்கு மக்களிடம் செல்வாக்கு  கிடையாது. இவ்வளவு தொகுதிகளை அளித்தால்,  படுதோல்வியை தான் பாஜ அடையும். என்று கூறி அதிக தொகுதி என்ற கதவை அதிமுக மூடிவிட்டது. ஆனால்,  மத்திய ஆட்சி, அதிகாரத்தை பயன்படுத்தி மிரட்டி பார்த்தது பாஜ. மேலும் பிரதமர், உள்துறை அமைச்சர் மற்றும் மத்திய அமைச்சர்கள் என்று அதிக சீட் கேட்டு அதிமுக முக்கிய நிர்வாகிகளிடம் பலகட்ட பேச்சுவார்த்தை நடத்தினர். இதுவும் தோல்வியில் தான் முடிந்தது. இதனால், அதிர்ந்து போன பாஜ ஒரு கட்டத்தில் எந்த அணியுடனும் கூட்டணி அமைக்க முடியாது. தனித்தும் போட்டியிட முடியாது என்ற நிலைக்கு பாஜ தள்ளப்பட்டது. இதனால், அதிமுக தரும் சீட்டை வாங்கி போட்டியிட முடிவு செய்தது. கடைசியில் 20 தொகுதிகளை மட்டும் பாஜவுக்கு அதிமுக ஒதுக்கியது. குறைவான சீட் வழங்கியது பாஜ மேலிடத்தை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. தமிழகத்தில் அதிமுக ஆட்சி பாஜவின் தயவால்தான் நடந்து கொண்டிருக்கிறது. அப்படியிருக்கும் போது குறைவான தொகுதிகளை ஒதுக்கிய அதிமுகவை தேர்தலுக்கு பிறகு பார்த்துக்கொள்ளலாம் என்று கொடுத்த சீட்டை பாஜ வாங்கிக் கொண்டது. அதிமுக வழங்கிய 20 தொகுதிகளில் எப்படியாவது வெற்றி பெற்று தமிழக சட்டசபைக்குள் நுழைய வேண்டும் என்று பாஜ சபதம் ஏற்றது. இதற்காக என்ன விலையையும் கொடுக்க பாஜ முன்வந்ததாக கூறப்படுகிறது. 20 தொகுதிகளில் பிரதமர், உள்துறை அமைச்சர் உள்ளிட்ட அமைச்சர்கள், பாஜ ஆட்சி செய்யும் மாநில முதல்வர்கள், முக்கிய பிரமுகர்கள் என்று ஒரு பட்டாளமே பிரசாரத்தில் ஈடுபட்டது. எவ்வளவு தான் பிரசாரத்தில் ஈடுபட்டாலும் பாஜவால் 4 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற முடிந்தது. 16 தொகுதிகளில் தோல்வியை சந்தித்தது. இந்நிலையில் பாஜ முக்கிய பிரமுகர், நடிகர் எஸ்.வி.சேகர் தனது டிவிட்டர் பக்கத்தில் பாஜ குறித்து வெளியிட்ட பதிவு வைரலாக பரவி வருகிறது. அதில் எஸ்.வி.சேகர் மற்றும் பாஜ முன்னணியினர் கலந்து கொண்டு விவாதம் நடத்தினர். அப்போது எஸ்.வி.சேகர் பாஜ தோற்றது குறித்து பேசியுள்ளார். அதில், தமிழகத்தில் பிரதமர் மோடி படத்தை கூட போடாமல் பிரசாரம் செஞ்சாங்க. நானா இருந்தால் பிரசாரம் செய்யாம வேனிலிருந்து கீழே இறங்கியிருப்பேன். ஒவ்வொரு பாஜ வேட்பாளருக்கும் தேர்தல் செலவுக்காக ₹13 கோடி கொடுத்திருக்காங்க. அதில் இப்ப தோல்வி அடைந்தவங்களும், வெற்றி பெற்றவர்களும் கணக்கு கொடுத்து இருக்காங்களா என்று கேள்வியும் எழுப்பி இருந்தார்.  ஒரு வேட்பாளருக்கு 13 கோடி கொடுக்கப்பட்டுள்ளது என்றால், பாஜ 20 தொகுதிகளில் போட்டியிட்டது. அப்படி என்றால் மொத்தம் 260 கோடி ரூபாய் பாஜ செலவு செய்துள்ளது. ஒரு தொகுதிக்கு 13 கோடி செலவு செய்ய தேர்தல் ஆணையத்தின் அனுமதி கிடையாது. இதனால் இந்த பணம் கருப்பு பணமாகதான் வந்துள்ளது.  கருப்பு பணம் ஒழிக்கப்படும் என்று கூறி வந்த பாஜ, கருப்பு பணத்தை வைத்தே தேர்தலை சந்தித்துள்ளது எஸ்.வி.சேகரின் பேச்சின் மூலம் அம்பலமாகியுள்ளது. தேர்தலில் பண நடமாட்டத்தை கட்டுப்படுத்த வருமானவரித்துறை, அமலாக்கத்துறை என்று களத்தில் இறங்கியிருந்தது தேர்தல் ஆணையம். அதுமட்டுமல்லாமல் போலீசார் மூலம் வாகன சோதனையும் நடத்தப்பட்டது. இவ்வளவுக்கும் மத்தியில் பாஜ தலைமையிடம் இருந்து பாஜ வேட்பாளர்களுக்கு எப்படி பணம் போய் சேர்ந்தது என்பதுதான் கேள்விக்குறியாக உள்ளது. எதிர்க்கட்சி பிரமுகர்களை குறிவைத்து அவர்களின் வீடுகளில் வருமானவரித்துறை சோதனை நடத்தியது. ஆனால், ஒரு தொகுதிக்கு 13 கோடி ரூபாய் பாஜ வேட்பாளர்களுக்காக தரப்பட்டதை தேர்தல் ஆணையமும், வருமான வரித்துறையும் கண்டுக்காமல் இருந்தது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது.வெற்றி பெறவே முடியாது என்று கணிக்கப்பட்ட தமிழகத்திலேயே பாஜ ஒரு வேட்பாளருக்கு 13 கோடி வரை செலவு செய்துள்ளது. அப்படி என்றால் ஆட்சியை பிடித்தே தீர வேண்டும் என்று நினைத்து முழு கவனத்தையும் செலுத்திய மேற்கு வங்கம், அசாம், புதுச்சேரி மற்றும் கேரளாவில் பாஜ எவ்வளவு கோடியை ஒரு வேட்பாளருக்காக செலவு செய்திருக்கும் என்று கேள்வி எழுந்துள்ளது. மேற்கு வங்கத்தில் 294 தொகுதியிலும், அசாமில் 92, புதுவையில் 9, கேரளாவில் 115 தொகுதியிலும் பாஜ போட்டியிட்டது. தமிழகத்தையும் சேர்ந்து 530 தொகுதிகளில் போட்டியிட்டது. அப்படி என்றால் தமிழக தேர்தல் அளவுக்கு செலவு செய்தால் கூட 6,890 கோடி ரூபாய் செலவு செய்திருக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இந்த பணம் முழுவதும் கருப்பு பணமாகத்தான் செலவிடப்பட்டிருக்க வேண்டும். பாஜ இவ்வளவு செலவு செய்து தேர்தலை சந்தித்துள்ளதாக கூறப்படுவது மலைக்க வைத்துள்ளது.அதுவும் பாஜ பிரமுகர் ஒருவரே, தமிழகத்தில் பாஜ வேட்பாளர் ஒருவருக்கு 13 கோடி வரை செலவுக்காக ஒதுக்கப்பட்டது. மொத்தம் ₹260 கோடி வரை பாஜ செலவிட்டுள்ளது என்று வெளிப்படையாக தெரிவித்துள்ளார். இப்படி வெளிப்படையாக தகவலை அளித்த பின்னரும், வருமானவரித்துறை, சிபிஐ, அமலாக்கதுறை, தேர்தல் கமிஷன் இன்னும் நடவடிக்கை எடுக்காமல் மவுனம் காப்பது ஏன் என்று  சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.  குறைந்தபட்சம் எஸ்.வி.சேகர் வெளியிட்ட தகவல் பற்றியாவது, வருமானவரித்துறையினர் அவரிடம் விசாரணை நடத்த வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர். மேலும், எஸ்.வி.சேகர் இப்படி வெளிப்படையாக பேசுவது தற்போது விவாதப் பொருளாகி அரசியல் வட்டாரத்திலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.தேர்தலில் வேட்பாளர் 30.80 லட்சம்தான் செலவு செய்ய முடியும்சட்டசபை தேர்தலில் ஒரு வேட்பாளர் 30.80 லட்சம் வரை செலவு செய்யலாம் என்று தேர்தல் ஆணையம் வரையறை வகுத்துள்ளது. அதுமட்டுமல்லாமல் தேர்தலில் செலவு செய்த கணக்கை தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பிக்க வேண்டும். அவ்வாறு சமர்ப்பிக்காதவர்கள் அடுத்த தேர்தலில் போட்டியிட முடியாது. அப்படியிருக்கும் போது பாஜ வேட்பாளர் ஒருவர் இவ்வளவு தொகை செலவு செய்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. அதே நேரத்தில் செலவு செய்தது நிரூபிக்கப்பட்டால் வெற்றி பெற்ற பாஜ வேட்பாளர்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று கோரிக்கை வலுத்துள்ளது.* தமிழகத்தில் போட்டியிடும் ஒவ்வொரு பாஜ வேட்பாளருக்கும் தேர்தல் செலவுக்காக ₹13 கோடி கொடுத்திருக்காங்க. அதில் இப்ப தோல்வி அடைந்தவங்களும், வெற்றி பெற்றவர்களும் கணக்கு கொடுத்து இருக்காங்களா என்று எஸ்.வி.சேகர் கேள்வி எழுப்பி இருந்தார்.* தமிழக  சட்டப்பேரவை தேர்தலில் 60 தொகுதிகள் வரை போட்டியிட பாஜ சீட் கேட்டது. அதிக தொகுதிகளை அளித்தால், பாஜ படுதோல்வி அடையும் என்று கூறி கூட்டணி கதவை அதிமுகமூடிவிட்டது….

The post பாஜ முக்கிய பிரமுகர் எஸ்.வி.சேகர் வெளியிட்ட பகீர் தகவல் தமிழகத்தில் 20 தொகுதிக்கு 260 கோடி செலவு செய்த பாஜ: வருமானவரித்துறை, சி.பி.ஐ., அமலாக்கத்துறை, தேர்தல் ஆணையம் மவுனம் ஏன் என சமூக ஆர்வலர்கள் கேள்வி appeared first on Dinakaran.

Tags : BJP ,Income Tax Department ,CBI ,Enforcement Department ,Election Commission ,SV Sekhar ,Chennai ,Dinakaran ,
× RELATED நிதி மோசடியை விசாரிக்க வருமான...