×

சந்திர தோஷம் நீக்கும் சோமங்கலம் சோமநாதர்

சந்திரன் பூஜித்து சாபநிவர்த்தி பெற்ற ஓர் தலமே சோமங்கலம். தன் சாபம் தீர இங்குள்ள ஈசனைத்தான் சந்திரன் பூஜித்தார். அதனாலேயே இங்குள்ள ஈசனுக்கு சோமநாதர் என்று பெயர். அம்பிகை காமாட்சி எனும் நாமத்தோடு காட்சியருள்கிறார். சந்திரன் இங்கு தனிச்சந்நதியில் அருள்பாலிக்கிறார். தொண்டைநாட்டு நவகிரக தலங்களில் சந்திரனுக்கு உரிய தலமாக விளங்குகிறது. சிறிய கோயில். அழகான கோயில். சந்திராஷ்டமத்தால் அவஸ்தைப்படுபவர்கள், ஜாதகத்தில் ராகு-கேதுக்களோடு சந்திரன் இருந்தால் இத்தலத்தை தரிசிப்பது நல்லது. குலோத்துங்கச் சோழன் கஜபிருஷ்ட விமான அமைப்போடு அமைத்த அற்புதமான கோயில் இது. நான்கு வேதங்களையும் ஓதிய அந்தணர்களுக்கு இறையிலியாக  இவ்வூர் வழங்கப்பட்டதாக கல்வெட்டுச் செய்திகள் தெரிவிக்கின்றன. இக்கோயிலிலுள்ள சிலைகள் மிகவும் எழில் வாய்ந்தவையாகும். சோழர்களின் கைவண்ணத்தில் அழகு தெறித்து, மிளிர்ந்து கிடக்கிறது. பார்த்துப் பார்த்து செதுக்கியிருக்கிறார்கள். அதில் பாலசுப்ரமணியரின் சிலை ஒன்று காணக் கிடைக்காதது. பிரம்மாவின் படைப்புத் தொழிலை சிறிது நாழிகை ஏற்றதால் பிரம்மசாஸ்தா என்று அழைக்கப்படுகிறார். நந்திகேஸ்வரர் ஈசனுக்கு நேராக இல்லாது எதிர்புறமாய் திரும்பியிருக்கிறார். ஏனெனில் அவ்வூர் மீது திடீரென்று படையெடுத்து வந்தபோது ஓர் ஹுங்காரமாய் படையைப் பார்த்துச்சீற, படை பின்வாங்கியதாம். அப்பொழுது திரும்பிய நந்தி இன்றும் அப்படியே உள்ளது.     சென்னை, தாம்பரத்திலிருந்தும், குன்றத்தூரிலிருந்தும் செல்லலாம். இரண்டு ஊர்களிலிருந்தும் பதினைந்து கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.தொகுப்பு – எஸ்.கிருஷ்ணஜா

The post சந்திர தோஷம் நீக்கும் சோமங்கலம் சோமநாதர் appeared first on Dinakaran.

Tags : Somangalam Somanadar ,Dinakaran ,
× RELATED ஒளிமயமான வாழ்விற்கு இந்த நாமம்!