×

பகவானும் பாதி உடம்பும்

நன்றி குங்குமம் ஆன்மிகம் பாரத யுத்தம் முடிந்து, தர்மர் அரசாளத் தொடங்கிய நேரம். பெரியவர்களின் உபதேசப்படி தர்மர், அசுவமேத யாகம் செய்யத் தீர்மானித்தார். அதற்கான குதிரையை அலங்கரித்து, தேச சஞ்சாரம் செய்ய அனுப்பினார்கள். அந்த யாகக்குதிரையைத் தொடர்ந்து, அர்ஜுனனும் கண்ணனும் படை வீரர்களும் சென்றார்கள். தர்மரின் குதிரை, அதுவும் அர்ஜுனனும் கண்ணனும் கூடவே வருகிறார்கள் என்றால், அந்தக் குதிரையை யார் தடுப்பார்கள்?பார்த்த மன்னர்கள் அனைவரும் பணிவோடு உபசரித்தார்கள். ஆனால், ஓர் இளவரசன், அந்த யாகக்குதிரையைத் தன் நாட்டிற்கு ஓட்டிச் சென்று விட்டான். எப்படி? தர்மர் தன் யாகக்குதிரையை வலம்வரச் செய்த அதே வேளையில், ரத்தினபுரி மன்னரான மயூரத்வஜன் என்பவரும் அசுவமேத யாகம் செய்யத் தீர்மானித்து, தன் யாகக்குதிரையை வலம்வரச் செய்து இருந்தார். அவர் அதுவரை ஏழு அசுவமேதயாகங்கள் செய்து, எட்டாவதாகவும் அசுவமேத யாகம் செய்யத் தீர்மானித்துக் குதிரையை வலம்வரச் செய்திருந்தார். அந்தக் குதிரைக்குப் பாதுகாவலாக, மன்னரின் மகனான தாம்ரத்வஜன் படைகளோடு வந்திருந்தான்.இளவரசனின் பாதுகாப்பில் வந்த அந்தக் குதிரையும், கண்ணன் – அர்ஜுனன் பாதுகாப்பில் வந்த குதிரையும் ஓரிடத்தில் சந்தித்தன.தர்மரின் யாகக்குதிரையுடன் கண்ணன், அர்ஜுனன், பிரத்யும்னன், அனிருத்தன் முதலானோர் வந்ததைப் பார்த்ததும், ரத்தினபுரி இளவரசன் மகிழ்ச்சியில் குதித்தான். ‘‘இதுவரை நடந்த யாகங்களைவிட, இந்த எட்டாவது யாகத்திற்கு ஒரு பெரிய விசேஷம் உண்டாகப் போகிறது. காரணம்? இதோ! பகவானான கண்ணனே, நேருக்குநேராக வந்திருக்கிறாரே! எது எப்படியோ, இவர்களை வெல்லுவோம்! சந்தேகமே இல்லை’’ என்றான் இளவரசன்.கடும் போர் மூண்டது. முடிவில் மோகனாஸ் தி ரம் என்பதை ஏவி, கண்ணன் உட்பட அனைவரையும் மயக்கம் அடையச் செய்து கீழே வீழ்த்தினான் இளவரசன். அது மட்டுமல்ல! அவர்களின் பாதுகாப்பில் வந்த, தர்மரின் யாகக்குதிரையையும் தன் நகருக்கு ஓட்டிச் சென்றுவிட்டான் இளவரசன். சென்றவன் தன் தந்தையிடம் நடந்தவற்றை எல்லாம் சொல்லி மகிழ்ந்தான்.  மகன் சொன்னதைக் கேட்ட மன்னரோ கொதித்தார். ‘‘என்னடா இப்படிச்செய்துவிட்டாய்! யக்ஞ சொரூபி – யாகத்தின் வடிவமான பகவான் கண்ணனே நேருக்குநேராக வந்திருந்தும், இப்படிச் செய்துவிட்டாயே! விநாடி நேரம்கூட இங்கு இருக்க, எனக்கு விருப்பம் இல்லை. அவர்கள் இப்போது எங்கு இருக்கிறார்கள்? சொல்!’’ எனக் கோபத்துடன் கேட்டார் அரசர்.அதே நேரம்… போர்க்களத்தில் மயங்கிக் கிடந்த கண்ணன் முதலான அனைவரும் மயக்கம் தெளிந்து எழுந்தார்கள். கண்ணன் அர்ஜுனனை அழைத்து, “அர்ஜுனா! இவர்களை நம்மால் வெல்ல முடியாது. ஏனென்றால் இவர்களிடம் படை பலத்துடன் சேர்ந்து, தீவிரமான பகவத் பக்தியும் உள்ளது. நாம் மயக்கம் அடைந்திருந்த நேரத்தில், இளவரசன் நம் குதிரையைத் தன் நாடான ரத்தினபுரிக்குக் கொண்டு சென்றிருப்பான். நம் காரியம் நன்றாக நடக்க வேண்டுமானால், அதற்கு ஒரு வழி இருக்கிறது. நான் ஒரு கிழவனாகவும், நீ என் சீடனாகவும் உருமாறி, மயூரத்வஜனிடம் போகலாம். அவன் உத்தமமான பக்தன்; நீதி தவறாதவன்; சொன்ன சொல் மாறாதவன்’’ என்றார்.சரி! என்று அர்ஜுனன் ஒப்புக்கொள்ள, இருவருமாக மாறுவேடத்தில் மயூரத்வஜனிடம் போனார்கள். அங்கு போனதும் கண்ணன், மயூரத்வஜனுக்கு ஆசி கூறி, ‘‘மன்னா! உங்களால் எனக்கு ஒரு பெரிய காரியம் ஆக வேண்டியிருக்கிறது. அதற்காகத்தான், உங்களைப் பார்க்க வந்தேன்’’ என்றார். வந்த வேதியரின் (கண்ணனின்) கால்களில் விழுந்து வணங்கினார் அரசர். ‘‘வேத வல்லுனரே! உங்களைப் போன்றவர்களின் விருப்பம் நிறைவேறுவதற்காக, என் உயிரையும் கொடுப்பேன். ஆகையால், உங்கள் விருப்பத்தைச் சொல்லுங்கள்! தயாராக இருக்கிறேன்’’ என்றார் மன்னர்.கண்ணன் தொடர்ந்தார், ‘‘மன்னா! நான் தர்மபுரி என்ற ஊரைச் சேர்ந்தவன். என் பிள்ளைக்கு மணம் முடிப்பதற்காக, உங்கள் ஊரில் உள்ள கிருஷ்ணசர்மா என்பவரின் பெண்ணைத் தீர்மானித்து, பிள்ளையுடன் வந்து கொண்டிருந்தேன். வரும் வழியில் ஒரு சிங்கம் என் மகனைப் பிடித்துவிட்டது. நானும் என் பிள்ளையை விடுவிப்பதற்காக, எனக்குத் தெரிந்த மந்திரங்களை எல்லாம் சொல்லிப்பார்த்தேன்; பலிக்கவில்லை. கடைசியில் என்பிள்ளையை விடுவிக்க, சிங்கம் ஒரு நிபந்தனை விதித்தது. அதைச்செய்ய நீங்கள் சம்மதிப்பீர்களா? என்பதுதான் சந்தேகமாக இருக்கிறது’’ என்றார் கண்ணன்.மன்னர், தான் சொன்னதையே சொன்னார்; ‘‘சுவாமி! என் உயிரையே வேண்டுமானாலும் தருகிறேன். தயங்காமல் கேளுங்கள்!’’ என்றார்.மீண்டும் கண்ணன் தொடர்ந்தார்; ‘‘மன்னா! அந்தச் சிங்கம் சொன்னது; ‘மன்னன் மயூரத்வஜனின் உடம்பில் பாதியைக் கொண்டு வா! உன் பிள்ளையை விட்டுவிடுகிறேன்’ என்றது. அதற்காகத்தான், நான் உங்களிடம் வந்தேன். என் பிள்ளையை மீட்பது, உங்கள் கையில்தான் இருக்கிறது’’ என்றார் கண்ணன்.அதைக்கேட்ட மன்னர் மகிழ்ந்தார். ‘‘என் உடம்பைத் தலை முதல் கால் வரை, சரி பாதியாக இருக்கும் வண்ணம் இரு கூறுகளாகச் செய்து, ஒரு பாதியை இந்த வேதவல்லுனரிடம் கொடுத்துவிடுங்கள்!’’ என்று கட்டளையிட்டார். கூடியிருந்த மக்கள் கூச்சலிட்டார்கள். அரசி குமுதவதி முன்னால் வந்தாள். ‘‘கணவன் உடம்பில் சரிபாதி மனைவி என்று வேதம் சொல்கிறது. (ஆங்கிலத்திலும் ‘பெட்டர் ஹாஃப்’ என்று தானே, மனைவியைச் சொல்கிறோம்). ஆகையால், என் கணவரின் பாதி உடம்பிற்காக, நான் முழுமையாகவே சிங்கத்திற்கு இரையாகிறேன்’’ என்றாள் அரசி.கண்ணன் குறுக்கிட்டார். ‘‘மன்னா! ஒரு முக்கியமான விஷயம்! அந்தச் சிங்கம் உங்கள் உடம்பின் வலதுபாதியைக் கொண்டு வரச்சொன்னது. மனைவி என்பவள் கணவனின் இடது பாதியாகத்தான் ஆகிறாளே தவிர, வலது பாதியாக ஆக மாட்டாள். ஆகையால், உங்கள் உடம்பை அறுத்து, வலது பாதியைக் கொடுக்க வேண்டும்’’ என்றார். அப்போது மன்னரின் மகன், இளவரசன் பேசினான்; ‘‘சுவாமி! ‘ஆத்மாவை புதர நாமாசி’ என்பது வேதம். அதாவது, தந்தையே மகனாகப் பிறக்கிறான் என்பது பொருள். அதன்படி என் தந்தைக்குப் பதில், நான் பலியாகிறேன் சிங்கத்திற்கு. தயவுசெய்து என் சொல்லைக் கேட்டு, என் தந்தையை விடுவிக்க வேண்டுகிறேன்’’ என்றான் இளவரசன்.கண்ணன் அடுத்து பேசத்தொடங்கினார்; ‘‘அரசகுமாரா! நீ சொல்வது முற்றிலும் சரி. ஆனால், நீங்கள் செய்யும் இந்த அமர்க் களத்தில், சிங்கம் சொன்னதை முழுமையாகச் சொல்ல மறந்துவிட்டேன் நான். ‘மகனும் அரசியும், வாளால் அறுக்கப்பட்ட மன்னனின் பாதி உடம்பைக் கொண்டு வர வேண்டும்’ என்று சிங்கம் சொன்னது. ஆகையால் அதை மாற்றவே முடியாது’’ என்றார் கண்ணன். என்ன செய்ய முடியும்? மன்னரின் உத்தரவுப்படி, அரசியும் பிள்ளையுமாக அரசரின் உடம்பை அறுக்கத் தொடங்கினார்கள். மூவரும் அப்போது பகவான் திருநாமத்தைச் சொல்லிக் கொண்டிருந்தார்கள். மன்னரின் உடம்பு, கழுத்துவரை சரிபாதியாக அறுக்கப்பட்டது. அதைப் பார்த்த அனைவரும் கூச்சல் போட்டார்கள்.அதைக் கண்ட மன்னரின் இடது கண்ணில் இருந்து கண்ணீர் வந்தது. உடனே கண்ணன், ‘‘மன்னா! உன் இடது கண்ணில் இருந்து கண்ணீர் பெருகுகிறது. இது துக்கத்தின் அடையாளமாக உள்ளது. மனமாரக் கொடுக்கும் தானமே, ஏற்றுக்கொள்ளத் தகுந்தது. ஆகையால், இதை நான் கொண்டு போக மாட்டேன்’’ என்று சொல்லி விட்டு, சீடனாக வந்திருந்த அர்ஜுனனுடன் வெளியேறத் தொடங்கினார். அப்போது தெய்வ அருளால் பேசும் சக்தி பெற்ற மன்னர், கண்ணனை அழைத்து, ‘‘சுவாமி! என் இடது கண்ணில் இருந்து கண்ணீர் வரக் காரணம், வலது பக்க உடம்பு உங்களுக்கு உபயோகமாகிறது. இடது பக்கத்திற்கு அந்தப் பாக்கியமில்லையே’ என்றுதான், இடது கண்ணில் இருந்து கண்ணீர் வருகிறது. ஆகையால், நீங்கள் தவறாக எண்ண வேண்டாம். முழு மனதோடுதான், நான் என் உடம்பைத் தருகிறேன்’’ என்றார்.அர்ஜுனன் வியந்தான். கண்ணன், மன்னரின் தூய்மையான பக்தியை மெச்சி, தன் உண்மையான வடிவத்தைக் காட்டினார். ‘‘மன்னா! அரசர்களில் உத்தமமானவன் நீ! பெரும் பாக்கியசாலி! நீதி தவறாதவன்! உன்னை எப்படித்தான் சோதித்தாலும், நீ உன் வாக்கில் இருந்து தவறவில்லை. உன் மனைவியோ, பதிவிரதைகளில் தலைசிறந்தவள். அவள், தன் கையால் உன் உடம்பை வாளால் அறுத்தும், உனக்கு உடம்பில் நோவு உண்டாகவில்லை. பேசும் சக்தியும் மாறவில்லை. அவள் பதிவிரதைத் தன்மையை என்னவென்று சொல்வேன் நான்! உன் பிள்ளையால் நாங்கள் போர்க்களத்தில் வெல்லப்பட்டு மயக்கம் அடைந்தோம். ஆகையால் நீ, உன் மனைவி, உங்கள் பிள்ளை எனும் மூவரும், அனைவராலும் புகழத் தகுந்தவர்கள். மன்னா! மயூரத்வஜா! உன் பக்திக்காக, உன் தியாகத்திற்காக, உன் யாகத்தில் எல்லாவிதமான வேலைகளையும் செய்ய, நான் தயாராக இருக்கிறேன். பக்த பராதீனனான என்னை, உன் பிள்ளை ஜெயித்துவிட்டதால், எங்கள் குதிரையும் உன் குதிரையாக ஆகிவிட்டது. நல்லவிதமாக யாகத்தைச் செய்து இன்னும் புகழோடு வாழ்வாயாக! என் கடாட்சம் உன் உடம்பில் பதிந்து இருப்பதால், அது அறுக்கப்பட்டதாகவே தோன்றாது” என்றார் கண்ணன். மன்னரின் உடம்பு பழையபடியே ஆனது. அவர் கைகளைக் கூப்பிக் கண்ணனை வணங்கி, ‘‘பகவானே! பரம்பொருளே! நீங்களே நேருக்குநேராக வந்து அடியேனுக்கு அருள்புரிந்த பின், நான் எதற்காக யாகம் செய்ய வேண்டும்?’’ என்று துதித்தார். அதன்பின் மயூரத்வஜனின் வேண்டுகோளின்படி, கண்ணன் அங்கேயே மூன்று நாட்கள் தங்கினார். நான்காவது நாள், இரு குதிரைகளையும் கண்ணனிடம் ஒப்படைத்தார் மன்னர். அவற்றைப் பெற்ற கண்ணன், அர்ஜுனனுடன் திரும்பினார்.தூய்மையான பக்தி, இளவயது ஆற்றல், தியாகம் எனப் பலவற்றையும் விவரிக்கும் கதாபாத்திரம் – மயூரத்வஜன்.தொகுப்பு: பி.என்.பரசுராமன்

The post பகவானும் பாதி உடம்பும் appeared first on Dinakaran.

Tags : Kunkumum Spiritual Bharat War ,Dharmar Government ,Darmar ,Auswameda ,
× RELATED செல்போன் பறித்த வாலிபருக்கு தர்மஅடி கொடுத்த மாணவிகள்