என் மன வருத்தத்தை உன்னால் தீர்க்க முடியாது பகவானிடம் சவால் விட்ட கூரத்தாழ்வான்இராமானுஜரின் சீடர் கூரத்தாழ்வான்:கூரத்தாழ்வான் கண்களை இழந்தார். அன்றைக்கு இருந்த அரசியல் நிலையால், இராமானுஜர் சோழதேசத்தில் இருக்க முடியாமல், மேல்நாடு என்று சொல்லப்படும் திரு நாராயணபுரம் சென்றார். கூரத்தாழ்வான் திருவரங்கத்தில் இருக்கப் பிடிக்காமல், திருமாலிருஞ்சோலைக்கு வந்தார். திருக்கோட்டியூரிலிருந்து பல யாதவர்களை அழைத்துக்கொண்டு சென்று நந்தவனம் ஏற்படுத்தி புஷ்ப கைங்கர்யங்களைச் செய்து கொண்டிருந்தார். அது ஒரு மார்கழி மாதம். தினசரி திருப்பாவை நடக்கும். ஐந்தாவது பாட்டு ‘‘மாயனை மன்னு வடமதுரை”. எம்பெருமான் ஆயர்குலத்தில் வந்து அவதரித்த சீர்மையும், எளிய ஆயர்குல பிள்ளைகளோடு கலந்து பழகிய எளிமையும், ஆழ்வார் மனதில் படம் போல் ஓடிக்கொண்டிருந்தது. கூரத்தாழ்வான் திரும்பத் திரும்ப “மாயனை, மன்னு வட மதுரை மைந்தனை” என்று சொல்லிக்கொண்டே இருந்தார்.” இதென்ன இந்தத் திருப்பாவை, இன்று நம்மை இப்படிப் பாடாய்ப்படுத்துகிறது…ஓ….அதனால்தான் நம்முடைய ஆசாரியன் இராமானுஜர், திருப்பாவையின் சுவையிலேயே மூழ்கியதால், அதையே வாழ்வின் ஒளியாகக் கொண்டதால், அதிலேயே மூழ்கிக் கிடந்ததால், ‘‘திருப்பாவை ஜீயர்” என்று அழைக்கப்பட்டாரோ… உண்மைதான்..திருப்பாவை எப்பேர்ப்பட்ட வரையும் கரைத்துக் கொண்டு வந்து சேர்த்து விடும். சரி…சற்று கரையேறுவோம் என்று திருவாய்மொழியை நினைத்தார். ஆனால், அவருக்கு நினைவுக்கு வந்த பாசுரம், மற்றொரு பள்ளம். பத்துடை அடியவர்க்கு எளியவன் பிறர்களுக்கு அரிய வித்தகன் மலர் மகள் விரும்பும் நம் அரும் பெறல் அடிகள் மத்துறு கடை வெண்ணெய் களவினில் உரவிடை ஆப்புண்டுஎத்திறம்! உரலினோடு இணைந்து இருந்து ஏங்கிய எளிவேஇந்தப் பாசுரத்தில் அல்லவா நம்மாழ்வார் 18 மாதம் மோகித்து, மூச்சு பேச்சில்லாமல் கிடந்தார். “வேண்டாம்…வேண்டாம்… இதற்கு திருப்பாவையே பரவாயில்லை. என்று நினைத்துக்கொண்டு, அதே சிந்தனையில் தன் குடிலுக்குத் திரும்பினார். பூக்கூடையை ஒரு ஓரத்தில் வைத்துவிட்டு அப்படியே அமர்ந்தார். மறுபடி மறுபடி ‘‘மாயனை மன்னு வடமதுரை” என்கின்ற பாசுரம் மனதைச் சுற்றிச்சுற்றி வந்து அழுத்தியது. ஏதோ இழந்தது போல நெஞ்சு தவித்தது. ஏக்கம் பிறந்தது. கண்களில் கண்ணீர் சுரந்தது. இதே சமயம் திருமாலிருஞ்சோலை அழகர் கருவறையில் ஒரு காட்சி. அழகர் ஆனந்தமாக பட்டாடை உடுத்திக் கொண்டு அற்புத தேஜஸ்ஸோடு சேவை தந்து கொண்டிருந்தார். எதிரே அருமையான நிவேதனங்கள். நெய் மணக்கும் அக்கார அடிசில் என்ன… வெண்ணெய் என்ன… மணக்கும் புளியோதரை என்ன… அவருக்கே உரித்தான தோசை என்ன! அருமையான ராகத்தில் பட்டர், சகஸ்ரநாம அர்ச்சனை செய்துகொண்டு இருந்தார். இதோ ஆரத்தி நடக்க இருக்கிறது. ஆனால், அழகர் மனதில் ஒரு காட்சி.அட…இதென்ன இந்த கூரத்தாழ்வான் தன் குடிசையில் உட்கார்ந்து அழுது கொண்டிருக்கிறார். இப்பொழுது தானே நமக்கு மாலை சமர்ப்பித்துவிட்டுச் சென்றார். இப்பொழுது என்ன அழுகை? என்ன வருத்தம் அவருக்கு? அழகருக்கு மனம் கொள்ளவில்லை. என் பக்தன்… என் குழந்தை… என் உயிர்… (மச் சித்தா; மத் கத பிராணா;)நம்மையே நம்பி வந்த அவருடைய வருத்தத்தை உடனே தீர்க்க வேண்டும் என்று துடித்தார். பூஜையில், அவர் மனம் லயிக்கவில்லை. அயோத்தியில் யாரோ ஒருவர் வீட்டில் துக்கம் நடந்தால், அது தன் வீட்டில் நடந்ததாக ராமன் நினைப்பானாமே. உடனே தீர்க்கத் துடிப்பானாமே. உடனே கூரத்தாழ்வான் வருத்தத்தின் காரணம் அறிய வேண்டும்.அடுத்த நிமிடம் ஒரு முதியவராக வேடம் கொண்டார். கூரத்தாழ்வான் குடில் நோக்கிச் சென்றார்.யாரோ முதியவர் நம்மைத்தேடி வருகிறார். இத்தனை நாளாக நம்மைத் தேடி யாரும் இங்கு வந்தது இல்லையே… ஓ… அழகர் சேவைக்கு வந்திருப்பார் போலும். சிரமப்பரிகாரம் செய்து கொள்ள இந்த குடிலுக்கு வந்து விட்டார். “சரி… இன்று ஒரு அதிதி வந்துவிட்டார்…கவனிப்போம்” என்று அவருக்கு ஒரு ஆசனத்தை இட்டார். ‘‘வாருங்கள் வாருங்கள்” என வரவேற்றார். முதியவர், சுற்றி வளைக்காமல் கூரத்தாழ்வானைப் பார்த்து ஒரு கேள்வி கேட்டார். ‘‘உம்மைப் பார்த்தால் பரம சாது போல் தெரிகிறது. எல்லா சாஸ்திரங் களிலும் கரை கண்டவராக உமது முகம் வித்வத் தேஜஸோடு தெரிகிறது. ஆயினும், இன்றைய தினம் நீர் துக்கப்படக் காரணம் என்ன?” என்று கேட்டதும் கூரத்தாழ்வான் பதில் சொன்னார்.‘‘அதை தெரிந்து கொண்டு நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள்? ஏதோ என்னுடைய விசாரம். நான் அழுகிறேன். நீங்கள் வந்ததற்கு அழகரை சேவித்துவிட்டுச் செல்லுங்கள்”. ‘‘அதென்ன அப்படிச் சொல்லி விட்டீர்? உன்னுடைய அழுகையின் காரணத்தை தெரிந்து கொள்ளாமல் நான் போகமாட்டேன்” ‘‘சுவாமி… உமக்கு வயது அதிகமாகிவிட்டது. இதில் என் கஷ்டத்தை தெரிந்து கொண்டு என்ன செய்யப் போகிறீர்?” ‘‘உன்னுடைய துன்பத்தை நீக்குவதற்கு முயற்சி செய்யப் போகிறேன்”. கூரத்தாழ்வான் விரக்தியாகச் சிரித்தார்.‘‘பெரியவரே, என் துன்பம் என்னோடு இருக்கட்டும். ஏன் மேலே மேலே பேசிக் கொண்டு போக வேண்டும்? என் துன்பத்தை நீக்குவதற்கு உம்மால் முடியாது?” ‘‘சரி நீர் சொல்ல வேண்டாம். உம்முடைய துன்பத்தை யூகிக்கிறேன்” ‘‘என்னுடைய துன்பத்தை யூகிக்க முடியுமா?”‘‘ஏன் யூகிக்க முடியாது?”‘‘சரி சொல்லுங்கள்”. ‘‘இவ்வளவு பேர் இந்த அழகனை சேவித்துக் கொண்டு இருக்கிறார்கள். இவரை சேவிப்பதற்கு கண்ணில்லை என்று நீர் வருந்துகிறீர். அதுதானே?” ‘‘எதைப் பார்க்கக் கூடாதோ அதை பார்க்காமல் இருப்பதற்காகத்தான் இந்த கண் போனது. நான் எப்பொழுதுமே எம்பெருமானை மனதிலே தியானிப்பவன். அதனால் எனக்கு இந்தப் புறக்கண் இருக்க வேண்டும் என்கிற அவசியமில்லை. அது தேவையில்லாத விஷயத்தை எல்லாம் இந்த கர்ம உலகத்தில் பார்க்க வைக்கும். அழகர் என் நெஞ்சிலே இருக்கின்றார். ஆகையினால் எனக்கு புறக்கண் வேண்டிய அவசியமில்லை. அதனால் அதை இழந்ததற்கான வருத்தமும் எனக்கு இல்லை” என்று அதிரடித்தார் கூரத்தாழ்வான்.‘‘கண்ணிழந்த வருத்தம் உமக்கு இல்லையா?”‘‘இல்லை” ‘‘சரி ஒருவேளை உன்னுடைய வருத்தத்திற்கு காரணம் இப்படி இருக்குமா?”‘‘எப்படி?”‘‘அரங்கனின் அடிவாரத்தில் கிடந்தவர்கள் நீங்கள். அங்கே அரசாங்க எதிர்ப்புக்கு அஞ்சி இங்கே வந்து இருக்கும்படியாகிவிட்டதே, நாம் எப்பொழுது அரங்கனை சென்று சேவிப்பது என்கின்ற வருத்தமா?” ‘‘அதுவும் இல்லை. என்னுடைய ஆசாரியன் ராமானுஜர் அரங்கனை சேவிக்க முடியாத நிலை இருக்கும் பொழுது, நான்மட்டும் அரங்கனை சேவிப்பதால் எனக்கு என்ன கிடைத்துவிடப் போகிறது? ராமானுஜரை அங்கே இருந்து பிரிய அரங்கன் மனம் ஒப்பி விட்டான். என்னுடைய ஆசாரியனை பிரித்த அரங்கனை நான் சேவிப்பதை விட சேவிக்காமல் இருப்பது தான் நல்லது. அதனால், அரங்கனை சேவிக்காத வருத்தம் எனக்கு கொஞ்சமும் இல்லை” இதனை கேட்ட பெரியவருக்கு கோபம் வந்துவிட்டது.‘‘இதோபார். உனக்கு உதவி செய்ய வேண்டும் என்பதற்காகத்தான் நான் வந்தேன். என்னால் உன்னுடைய வருத்தத்தைத் தீர்க்க முடியும்? எந்த வருத்தமாக இருந்தாலும் என்னால் போக்க முடியும்.”மீண்டும் கூரத்தாழ்வான் சிரித்து விட்டார்.‘‘உம்மால் போக்க முடியாது என்று சத்தியம் செய்கின்றேன். பிறகு “என்னால் வருத்தத்தைத் தீர்க்க முடியும்” என்று திரும்பத் திரும்ப சொல்வதில் என்ன பொருள் இருக்கிறது? நீங்கள் போகலாம்” என்றார் கூரத்தாழ்வான். ‘‘நான் யார் தெரியுமா? நான் யார் என்று தெரிந்தால், நீ போகச் சொல்ல மாட்டாய். நான் யார் என்று தெரிந்து விட்டால், என்னால் உன்னுடைய துன்பத்தைப் போக்க முடியும் என்பதையும் தெரிந்து கொண்டு நீ பதில் சொல்வாய்” என மிகுந்த கோபம் வந்தது அந்த பெரியவருக்கு. ‘‘சுவாமி…நீர் யாராக இருந்தாலும் சரி, உம்மால் என்னுடைய துன்பத்தை போக்க முடியாது. அதற்கான வாய்ப்பே இல்லை. நீர் போகலாம்” என்றார் கூரத்தாழ்வான் ‘‘என்னை யார் என்று தெரிந்து கொண்டு போகச் சொல்கிறாயா?”‘‘ஆம்…தெரிந்துகொண்டுதான் போகச் சொல்லுகிறேன்”. ‘‘ நான் யார் என்று சொல். என்னுடைய பெயரைச் சொல்.”‘‘நீர்தான் அந்த திருமாலிருஞ்சோலை அழகன். சுந்தர பாஹூ. சுந்தரத் தோளுடையான்” என்று கம்பீரமாக கூரத்தாழ்வான் சொன்னார். ‘‘எம்மை எப்படி தெரிந்து கொண்டீர்?”‘‘நாற்றத் துழாய் முடி நாரயணனை” தெரிந்து கொள்ளவா முடியாது? காலையில், திருப்பாவை ஐந்தாம் பாசுரம். அடியேன் திருமாலையைச் சமர்ப்பித்துவிட்டு நின்ற பொழுது, தேவரீர் சூடிய மாலையின் மணம் அறிந்து கொண்டேன். அதே மணம் தான் இப்பொழுதும் இங்கே இருக்கிறது. அப்படியானால், வந்தது யார் என்று தெரிந்து கொள்வதில் என்ன சிக்கல் இருக்க முடியும்?” என பொன்சிரிப்போடு கூரத்தாழ்வான் சொன்னார்.‘‘சரி, நான் யார் என்பதை தெரிந்து கொண்டு விட்டாய் அல்லவா. நான் சர்வசக்தன் அல்லவா! இப்பொழுது சொல், உனக்கு என்ன குறை? ஏன் அழ வேண்டும்? என்ன வருத்தம்?”‘‘திருமாலிருஞ் சோலைப் பெருமானே! இந்த அடியவனைத் தேடி தேவரீர் வந்தது குறித்து மகிழ்ச்சி. அது போதும். என்னுடைய வருத்தம் குறித்து தேவரீர் கவலைப்பட வேண்டாம்.”‘‘ இல்லை, சொல்.”‘‘வருத்தத்தை நீக்க உம்மால் முடியாது. நீர் தேவாதிதேவனாக இருந்தாலும்…”‘‘என்ன இந்த ஒரு விஷயத்தை செய்ய நமக்கு சக்தி இல்லையா?”‘‘ஆம்”.‘‘ காரணம்?”‘‘நீர்தான் காரணம். நீர் கொடுத்த வாக்கு தான் காரணம்.”‘‘முதலில் உன்னுடைய துயரத்தைச் சொல்”. ‘‘விட மாட்டீர் போலிருக்கிறதே. சரி சொல்கிறேன். நீர் ஆயர்குலத்து அணி விளக்காகத் தோன்றினீர் அல்லவா”. ‘‘ஆமாம் கண்ணனாக தோன்றினோம்”.‘‘அப்பொழுது உம்மோடு எத்தனை எத்தனை ஆயர்குல பிள்ளைகள் விளையாடினார்கள்?” ‘‘ஆமாம்… “தன்னேராயிரம் பிள்ளைகளோடு தளர் நடை இட்டு வருவான்பொன் ஏய் நெய்யோடு பால் அமுதுண்டொரு புள்ளுவன் பொய்யே தவழும்மின்னேர் நுண் இடை வஞ்ச மகள் கொங்கை துஞ்ச வாய் வைத்த பிரானேஅன்னே உன்னை அறிந்து கொண்டேன்என்று பெரியாழ்வார் தான் இதையெல்லாம் பிள்ளைத் தமிழாகப் பாடியிருக்கிறாரே”.‘‘அதைக் கேட்கும் பொழுதுதான் அடியேனுக்கு அந்த ஏக்கம் வந்தது. தாங்கள் அவதரித்த போது, ஒரு பிறவி வாய்க்கப் பெற வில்லையே என்கிற வருத்தம் தான் அடியேனை துன்புறுத்துகிறது. அப்படி பிறந்திருந்தால், ஆழ்வார் சொன்னதையெல்லாம் நேரில் அனுபவித்திருக்கலாமே என்கிற ஏக்கம் தான் காரணம்”.‘‘இவ்வளவுதானே, உன்னுடைய ஏக்கத்தை நிறைவேற்றி வைப்போம். உனக்கு வேண்டியது ஆயர்குல பிறவி. கொடுத்து மகிழ்விப்போம்.” என்று மகிழ்ச்சியோடு அழகர் சொன்னார். ‘‘தேவரீரால் முடியாது” என்று பலத்த சிரிப்புடன் கூரத்தாழ்வான் சொன்னார்.‘‘ஏன் முடியாது? நான் சர்வ சக்தன்”.‘‘அதனால்தான் சொல்லுகின்றேன். அடியேன் ராமானுஜர் சீடன். ராமானுஜருக்கு யாரெல்லாம் சீடர்களோ அவர்களுக்கு மறு ஜென்மம் கிடையாது என்று நீர் தானே வாக்கு தந்தீர். “புனர் ஜென்ம ந வித்யதே ந ச புனர் ஆவர்த்ததே ந சபுனர் ஆவர்த்ததே” என்பது தானே உண்மை. சத்தியம். உம்மாலும் மீற முடியாத சத்தியம். பிறவி இல்லாத ஒருவரை எப்படி மறுபடியும் பிறக்க வைப்பீர்? எனவே ராமானுஜர் அடியாராய் ஆனபிறகு நான் நினைத்தாலும் பிறக்க முடியாது. நீர் நினைத்தாலும் பிறக்க வைக்க முடியாது. அப்படி இருக்கும் பொழுது, ஒரு பிறவி எடுத்து, ஆயர் குலத்தில் பிறக்க வேண்டும் என்கின்ற அடியேன் எண்ணத்தை, ஆசையை, எப்படி உம்மால் நிறைவேற்ற முடியும்?” என கூரத்தாழ்வான் சொன்னதும், அழகர் வாய் பேச முடியாமல் மௌனமாகக் கேட்டுக் கொண்டிருந்தார்.“அதனால்தான் சொன்னேன். அந்த எம்பெருமான் ஆனாலும் அடியேன் துக்கத்தைப் போக்க முடியாது. நாமே தான் கொஞ்சம் கொஞ்சமாக ஆறுதல் பட்டுக் கொள்ள வேண்டும்” என்று கூரத்தாழ்வான் சொன்னதும், அழகரின் முகத்தைப் பார்க்க வேண்டுமே.‘‘ஆழ்வான்.. உம்மிடம் நாம் தோற்றோம். நீர் சொன்ன வார்த்தை சத்திய வார்த்தை” என்று சொல்லி விட்டு அழகர் அங்கிருந்து தன்னுடைய ஆஸ்தானத்துக்கு சென்றார். இந்த அழகரின் அழகின் மீது தான் 132 பாடல்களால் சுந்தர பாஹூஸ் தவம் என்கின்ற நூலை இயற்றினார் கூரத்தாழ்வான். இப்படி எண்ணற்ற திருவிளையாடல்களை திருமாலிருஞ்சோலை சுந்தரராஜன் நடத்தி இருக்கின்றான். நம்முடைய மனமும் அவரிடத்தில் ஈடுபட்டால் நம்மையும் அவன் ஆட் கொள்வான்….
The post அழகரின் அற்புத லீலைகள் appeared first on Dinakaran.