×

பிரகலாதனுக்கு வந்த பேராபத்து !

எல்லாம் வல்ல இறைவன் ஸ்ரீமன் நாராயணன், ஐந்து நிலைகளில் இருப்பதாக பெரியவர்கள் கூறுகிறார்கள். பரம், வியூகம், விபவம், அந்தர்யாமித்துவம், அர்ச்சை என்று இந்த ஐந்து நிலைகளைச் சொல்வார்கள். இதை சுவாமி நம்மாழ்வார்,விண்மீது இருப்பாய்! மலைமேல் நிற்பாய்! கடல் சேர்ப்பாய், மண்மீது உழல்வாய் இவற்றுள் எங்கும் மறைந்து உறைவாய்,எண்மீது இயன்ற புற அண்டத்தாய்! எனது ஆவி,உண் மீது ஆடி உருக் காட்டாதே ஒளிப்பாயோ?என்று மிக அழகாகப் பாடுகிறார்.எம்பெருமானுடைய இருப்புக்கும், அவருடைய பிறப்புக்கும் (அதாவது அவதாரத்திற்கும்) அடிப்படையான காரணம், பக்தர்களைக் காப்பாற்ற வேண்டும் என்பதே. எல்லா ஆபத்துகளிலிருந்தும் தன்னுடைய பக்தர்களைக் காப்பாற்றி அருள் புரிவது ஒன்றே பகவானுக்கு குறிக்கோள்.‘‘எம்பெருமான் குடும்பத்துக்கு நான் ஏன் கவலைப்பட வேண்டும்?”:மிகவும் நுட்பமாக ஆராய்ந்தால், இதற்கான காரணத்தையும் நாம் எளிமையாகச் சொல்லிவிடலாம். பகவான் தன்னுடைய லாபத்திற்காக இதனை முனைப்பாகச் செய்கின்றான். வைணவத் தத்துவத்தில் “சேதன லாபம் ஈஸ்வரனுக்கு” என்று சொல்வார்கள். பகவானை உணர்ந்து கொண்ட ஒரு ஆத்மா, பகவானுக்கு கிடைப்பது அரிது. மண்ணில் கலந்துள்ள தங்கத்துகளை, சலித்துச்சலித்துச் சேர்ப்பது போல, கர்ம வசப்பட்ட ஆன்மாவை, பக்குவப்படுத்தி, தனக்குரியதாக தான் பெறவே, எம்பெருமான் அவதாரம் எடுக்கிறான் என்று சொல்வார்கள். அதனால்தான் பகவானை “ஸ்வாமி” என்று அழைக்கின்றனர். ஸ்வாமி என்றால் ஸ்வத்தை உடையவன். ஸ்வம் என்றால் சொத்து. ஸ்வத்தை உடையவன் ஸ்வாமி. ஸ்வம் (சொத்து) என்பது பரிசுத்தமான ஆன்மாக்களைக் குறிக்கும். சொத்தை உடையவன் தானே சொத்தைப் பற்றிக் கவலைப்பட வேண்டும்.அதனாலதான் ஸ்வத்தை உடைய ஸ்வாமியான பகவான், ஜீவாத் மாக்களை பற்றிக் கவலைப்படுகின்றான். இதற்கு ஒரு உதாரணம் சொல்லலாம்;கூரத்தாழ்வான், தமது புதல்வர்களுக்கு திருமண வயது வந்தும், அதைப் பற்றிக் கவலைப்படாமல், எந்த ஏற்பாடும் செய்யாமல் இருந்தார். ‘‘என்ன, இப்படி பிள்ளைகளுக்கு கல்யாணம் காட்சி எதுவும் செய்யப் போவதில்லையா? அதற்கான அறிகுறியே தெரியவில்லையே? கவலைப் படாமல் இருக்கிறீர்களே? ஊரில் பாருங்கள்… பெண்ணுக்கும் பிள்ளைக்கும், படிப்பு, கல்யாணம், உத்தியோகம், வீடு, வசதி என்று ஏற்படுத்தித்தர கவலையோடு அலைகிறார்கள். நீங்கள் என்னடாவென்றால், எல்லாவற்றையும் விட்டுவிட்டு இந்த ரங்கநாதப் பெருமாளிடம் வந்து சதா உட்கார்ந்து கொண்டு இருக்கிறீர்களே?” என்று கேட்ட பொழுது மகாஞானியான கூரத்தாழ்வான் அமைதியாகச் சொன்னாராம்.‘‘எம்பெருமான் குடும்பத்துக்கு நான் ஏன் கவலைப்பட வேண்டும்?” பதில் எப்படி இருக்கிறது, பாருங்கள்! ‘‘இதென்ன… நம் பொறுப்பில் கட்டிவிட்டு இவர் கவலைப்படாமல் இருக்கிறாரே” என்று அடுத்த நிமிஷம், பகவான் ஸ்ரீரங்கநாதன் கவலைப்பட ஆரம்பித்து விட்டாராம். பலப்பல அவதாரங்கள் எடுக்கிறார் பகவான். புராண இதிகாச நிகழ்ச்சிகளைப் பார்க்கிறோம். பக்தர்களின் விரோதிகளைப் போக்குவதற்காகவே, பலப்பல அவதாரங்கள் எடுக்கிறார் பகவான்.வேதத்தை மீட்டெடுக்க அவதாரம். (மச்ச அவதாரம்) தேவர்கள் பாற்கடலைக் கடைந்து அமுதம் எடுப்பதற்கு ஒரு அவதாரம் (கூர்மாவதாரம்) அதை அசுரர்கள் பக்கம் போகாமல் தடுக்க அவதாரம் (மோகினி அவதாரம்) இரணியனை அழிக்க ஒரு அவதாரம் (நரசிம்ம அவதாரம்) இராவணனை அழிக்க அவதாரம் (ராம அவதாரம்) இந்திரனுக்கு பட்டம் பதவி தர ஒரு அவதாரம் (வாமன அவதாரம்).இப்படிச் சொல்லிக்கொண்டே போகலாம். ‘‘ஆபத்பாந்தவன்” ‘‘அநாத ரட்சகன்” என்று எம்பெருமானைச் சொல்வார்கள். ஆபத்து நேரத்தில் கைகொடுத்து காப்பாற்றுபவர், அவரைத் தவிர வேறு யார் இருக்க முடியும்?ஆபத்தும் பேராபத்தும் பக்தர்களுக்கு வரும் துன்பங்களை இரண்டு விதமாகச் சொல்லலாம். ஒன்று ஆபத்து, இன்னொன்று பேராபத்து. ஆபத்தை ஓரளவு சமாளித்து விட முடியும். பேராபத்து…? கண்ணனும், ராமனும் அவதரித்த அடுத்த கணம், கம்சனையும், ராவணனையும், அழித்து விடவில்லை. கொஞ்சம் விட்டுப் பிடித்துதான் முடித்தார்கள். எனவே அவர்கள் ஆபத்து. ஆனால், பேராபத்து வரும்போது, உடனே காரியம் செய்ய வேண்டும் தாமதம் கூடாது. தற்போதுள்ள உலகில் ஒரு உதாரணத்தைப் பார்க்கலாம். மருத்துவமனைக்குப் போகிறோம், மருத்துவரைப் பார்க்க ‘‘டோக்கன்” போட்டுக் காத்திருக்கிறோம். பல நேரங்களில், அவரைப் பார்க்க சாயங்காலம் ஆகிவிடும். ஏன் இரவும் ஆகிவிடும். சிலர்  அடுத்தநாள் கூட வரச் சொல்வார்கள். மணிக்கணக்காக நாம் காத்திருக்கும் பொழுது, ஒரு ஆம்புலன்ஸ் வரும். அடுத்த வினாடி உள்ளேயிருந்து டாக்டர் ஓடி வருவார். நம் துன்பம் ஆபத்து அவ்வளவுதான் காத்திருக்கலாம். பின்னது பேராபத்து, உடனே வைத்தியம் பார்க்க வேண்டும். புராண இதிகாசங்களை அலசி ஆராய்ந்த நம் பெரியவர்கள், பக்தர்களுக்கு வந்த எத்தனையோ ஆபத்துக்களைச் சொல்லி, ஆபத்பாந்தவனான எம் பெருமான் காப்பாற்றிய சரித்திரங்களைச் சொல்லி இருந்தாலும், பக்தர்களுக்கு வந்த பேராபத்து என்று மூன்று விஷயங்களைச் சொல்வார்கள்.அந்த பேராபத்துகள் என்ன? யார் யாருக்கு வந்தது? ஒன்று, கஜேந்திர ஆழ்வானுக்கு வந்த பேராபத்து. இரண்டாவது, திரௌபதிக்கு வந்த பேராபத்து. மூன்றாவது, பிரகலாதனுக்கு வந்த பேராபத்து.கஜேந்திரனுக்கு வந்த பேராபத்துதிருமங்கையாழ்வாரின் திருவல்லிக்கேணி பாசுரம் இது;“மீன் அமர் பொய்கை நாள்மலர் கொய்வான்  வேட்கையினோடு சென்று இழிந்த கான் அமர் வேழம் கைஎடுத்து அலறகரா அதன் காலினைக் கதுவஆனையின் துயரம் தீரப் புள் ஊர்ந்து சென்று நின்று ஆழிதொட்டானை தேன் அமர் சோலை மாட மா மயிலைத்  திருவல்லிக்கேணிக் கண்டேனே”அழகான பொய்கை. அதில் மீன்கள் துள்ளி விளையாடுகின்றன. அழகான தாமரை பூக்கள் மலர்ந்து இருக்கின்றன. தினம்தோறும் எம்பெருமானுக்கு புதிய பூக்களைப் பறித்து சமர்ப்பிக்கும் கஜேந்திரன் என்ற பெயருடைய காட்டுயானை, இந்தப் பொய்கையில் மலர்ந்திருக்கும் தாமரை பூக்களைப் பார்த்ததும் உற்சாகமடைந்தது. அதனை எம்பெருமானுக்கு பறித்து சமர்ப்பிக்க வேண்டும் என்று எண்ணியது. ஆர்வத்தோடு பொய்கையில் இறங்கியது. அடுத்த நொடி அதன் காலை பற்றி முதலை ஒன்று இழுக்கிறது.யானைக்கு தரையில் சக்தி அதிகம். முதலைக்கு தண்ணீரில் சக்தி அதிகம். உயிர்ப் போராட்டம் அங்கே நடைபெறுகிறது. ‘‘ஆதிமூலமே” என யானை அலறிக்கொண்டே எம்பெருமானைச் சரணடைந்தது. அடுத்தகணம் எம்பெருமான் யானையைக் காக்கும் வேகத்தோடு கருடன் மீது ஆரோகணித்து வந்து தன் ஆழிப்படையைத் தொடுகிறார்.எம்பெருமானின் ஆணை கிடைத்த மகிழ்ச்சியில் சக்கரத்தாழ்வார் விரைந்து சென்று, முதலையைக் கொன்று, கஜேந்திரனை பேராபத்தில் இருந்து விடுவிக்கிறார்.அப்படிப்பட்ட எம்பெருமானை, அதாவது பேராபத்திலிருந்து யானையின் துயரை தீர்த்த பெருமானை, ” தேனமர் சோலை மாடமா மயிலைத் திருவல்லிக்கேணி கண்டேனே” என்கிறார். இதில் ஒரு நிமிடம் தாமதித்தாலும் யானையின் கதை முடிந்திருக்கும். இந்த பாசுரத்தில் ஒரு அற்புதச்சுவை ‘‘கான் அமர் வேழம் கையெழுத்து அலர” என்பது முதல் பதம். முதலை காலை கவ்வியது இரண்டாம் பதம். நிகழ்ச்சி மாறி வந்து இருக்கிறதே, என்ன காரணம்? முதலில் யானை அலறியது. பிறகு முதலை அதன் காலைக் கவ்வியது என்றல்லவா இருக்கிறது?ஒரு உதாரணம்; ஒரு குழந்தை விளையாடிக் கொண்டிருக்கும் பொழுது, யாரோ தள்ளி விடுகிறார்கள். குழந்தை அலற ஆரம்பிக்கிறது. முதலில் அலறல் தான் நமது செவிகளில் விழும். அதற்கு பிறகுதான், அதன் காரணமான நிகழ்வு குறித்து கவனிப்போம். முதலில் ஒலி. அப்புறம்தான் ஒளி. அதைத்தான் ஆழ்வார் இப்பாசுரத்தில், முன்பின்னாகச் சொல்கிறார்.திரௌபதிக்கு வந்த பேராபத்துதிரௌபதிக்கு வந்த பேராபத்து குறித்து திருமங்கை ஆழ்வார் திருவல்லிக்கேணி பாசுரத்திலேயே பாடுகிறார். அந்தகன் சிறுவன் அரசர் தம் அரசற்கு இளையவன்  அணி இழையைச் சென்று`எந்தமக்கு உரிமை செய்’ என தரியாது `எம் பெருமான் அருள்!’ என்னசந்தம் அல் குழலாள் அலக்கண் நூற்றுவர்தம்  பெண்டிரும் எய்தி நூல் இழப்ப இந்திரன் சிறுவன் தேர் முன் நின்றானை  திருவல்லிக்கேணிக் கண்டேனே என்பது பாசுரம். பாண்டவர்கள் சூது போரில் தோற்று விட்டார்கள். ‘‘கொண்டுவா திரௌபதியை” என்று தம்பி துச்சாதனனை, துரியோதனன் ஏவுகிறான்.அவன் சென்று அவளிடம் தகாதன பேசுகிறான். ‘‘ஆடி விலைப்பட்ட தாதி நீ, எமக்கு அடிமை செய், வா…” என்று அவள் கூந்தலைப் பற்றி இழுத்து, அவைக்கு கொண்டு வந்து, ‘‘தாதிகளுக்கு ஏதடி மேலாடை?” என்று அவள் ஆடையைப் பற்றி இழுக்க, அவள் கதறுகிறாள்.ஆறாகி இரு தடங் கண் அஞ்சன வெம் புனல் சோர, அளகம் சோர,வேறான துகில் தகைந்த கை சோர, மெய் சோர, வேறுஓர் சொல்லும் கூறாமல், `கோவிந்தா! கோவிந்தா!’ என்று அரற்றி,குளிர்ந்து நாவில் ஊறாத அமிழ்து ஊற, உடல் புளகித்து, உள்ளம் எலாம் உருகினாளே.என ஆண்டாள் கூறியது போல், ‘‘கோவிந்தா என்பது பெரும் பேர் அல்லவா! குறை ஒன்றும் இல்லாத பெயர் “கோவிந்தா”. மானம் குறைவுபடாது, வள்ளலாக ஆடைகளை வாரி வழங்குகின்றான். கொஞ்சம் தாமதித்தாலும் மானம் போயிருக்கும் என்பதால் இந்த ஆபத்து பேராபத்து.பிரகலாதனுக்கு வந்த பேராபத்துஇதுவும் திருவல்லிக்கேணி பாசுரத்திலேயே உள்ளது. பள்ளியில் ஓதி வந்த தன் சிறுவன்வாயில் ஓர் ஆயிரம் நாமம் ஒள்ளிய ஆகிப் போத ஆங்கு அதனுக்கு  ஒன்றும் ஓர் பொறுப்பு இலன் ஆகி பிள்ளையைச் சீறி வெகுண்டு தூண் புடைப்ப  பிறை எயிற்று அனல் விழிப் பேழ் வாய் தெள்ளிய சிங்கம் ஆகிய தேவை  திருவல்லிக்கேணிக் கண்டேனே. ஊரெல்லாம் இரணியனின் பெயரை அச்சத்தால் உச்சரிக்கிறது. சொந்த பிள்ளை பிரகலாதனோ  ‘‘ஓம் நமோ நாராயணாய” என்ற எட்டெழுத்து மந்திரத்தை எப்பொழுதும் சொல்பவனாக இருக்கின்றான். இதைக்கண்டு இரணியனுக்கு பொறுக்கமுடியவில்லை. பிரகலாதனுக்கு எத்தனையோ தொல்லைகளையும், தண்டனைகளையும் தொடர்ந்து தருகின்றான். கடைசியில் கேட்கிறான்.‘‘ஹரி என்று சொல்கிறாயே, எங்கே உன் ஹரி, சொல்”‘‘அவன் தூணிலும் இருக்கிறான் துரும்பிலும் இருக்கிறான்” என்கிறான் பிரகலாதன்.‘‘அதெல்லாம் வேண்டாம். இந்த தூணில் இருக்கிறானா? சொல். இல்லை எனில் என் கதாயுதத்தால் உன் மண்டையை உடைத்து விடுவேன்” என்று வானம் இடி படும்படியாக கூச்சலிடுகின்றான் இரணியன். ‘‘எங்கும் இருக்கும் இறைவன், இந்தத் தூணில் மட்டும் இல்லாமல் இருப்பானா? ஆகையினால் இருக்கிறான்” என்று பிரகலாதன் சொன்ன அடுத்த நிமிடம், அவனே செங்கல் செங்கலாக எடுத்துக் கட்டிய தூணை, அவனே தன் கதாயுதத்தால் உடைத்தான் என்கிறார் ஆழ்வார்.“அளந்திட்ட தூணை அவன் தட்ட ஆங்கே வளர்ந்திட்டு வாளுகிர்ச் சிங்க உருவாய்உளந்தொட்டு இரணியன் ஒண்மார்வகலம்பிளந்திட்ட கைகளால் சப்பாணி,பேய்முலையுண்டானே! சப்பாணி”தூணிலிருந்து, “ஆகா என்று எழுந்தது பார் செங்கட் சீயம்” என்றபடி  நரசிம்மர் அவதரித்தார். “பிள்ளையைச் சீறி” என்ற பதத்திற்கு அற்புதமாக உரை செய்தார்கள் ஆச்சாரியர்கள். ஆழ்வார்கள் எம்பெருமான் பெயரையே “உண்ணும் சோறு, பருகு நீர், தின்னும் வெற்றிலை” என எப்பொழுதும் ஜெபித்துக் கொண்டிருப்பவர்கள். அதுபோலவே பிரகலாதனும், இருந்ததைக் காரணமாக வைத்து, தங்கள் குழுவில் பிள்ளையாக சேர்த்துக் கொண்டார்களாம். தன்னையே நம்பியிருக்கும் ஒரு பரம பக்தன் சொன்ன வாக்கியத்தின் தூய்மையையும் உண்மையையும் நிரூபிக்கவே நரசிம்மர் தோன்றினார். பிரகலாதனின் பேராபத்தை தடுத்துக் காத்தார்.யாருக்கு வந்த ஆபத்து?இந்த மூன்று பேராபத்துக்களைப் பற்றி ஆசாரியர்களிடையே ஒரு சுவையான விவாதம் நடந்தது. இந்த பேராபத்துகள் கஜேந்திரனுக்கும், திரௌபதிக்கும், பிரகலாதனுக்கும்,  வந்தது. பக்தர்களுக்கு வந்த இந்த மூன்று ஆபத்துக்களைப் பற்றி ஆழ்வார் பாசுரத்தை முன்னிட்டுக் கொண்டு உரையாடிக்கொண்டிருந்தபோது, எம்பார் என்ற ஆச்சாரியர் சொன்னார்.‘‘நீங்கள் இந்த மூன்று ஆபத்துக்களும் இறைவனை நம்பியவர்களுக்கு வந்ததாக சொல்கிறீர்களே, அப்படி அல்ல.”‘‘பிறகு?”‘‘இது பக்தர்களுக்கு வந்த பேராபத்து கிடையாது. பகவானுக்கு வந்த பேராபத்து” என்று புதுமையாக விளக்கம் தந்தார். ஈஸ்வரனுக்கு மூன்று ஆபத்துகள் வந்து கழிந்தது என்பது அவருடைய விளக்கம். அதற்கான காரணத்தையும் சொன்னார்.‘‘கஜேந்திர ஆழ்வாருக்கும், திரௌபதிக்கும், பிரகலாதனுக்கும் ஆபத்து ஏற்பட்ட சமயத்தில் அந்தந்த இடங்களில் உதவி, அவர்களுக்கு வந்த ஆபத்தை போக்கித் தனக்கு அதாவது, தன்னுடைய ஈஸ்வரர் தத்துவத்திற்கு வந்த ஆபத்துக்களை பகவான் போக்கிக் கொண்டார் என்பது அவருடைய நிர்வாகம். “கஜேந்திரனுக்கும், திரௌபதிக்கும், பிரகலாதனுக்கும் ஆபத்து ஏற்பட்ட சமயங்களில், இறைவன் கைவிட்டு விட்டான்” “எனவே ஈஸ்வரன் இல்லை” என்று இந்த உலகத்தவர்கள் பழிச்சொல் பேசுவர் என்பதற்காகவே, அதை தனக்கு வந்த ஆபத்தாகக் கருதித் தீர்த்தான் என்கிறார் எம்பார்.“சடக்கென்று பேராபத்தில் காப்பவனை நரசிம்மர்” என்று போற்றுவது வைணவ மரபு. ‘‘நாதனை, நரசிங்கனை, நவின்று ஏத்துவார்கள் உழக்கிய பாத தூளி படுதலால்” என்பது பெரியாழ்வார் பாசுரம். இந்த மூன்று பேராபத்துக்களைத் தடுத்த பகவானின் பெருமையைப் பேசும் பக்தர்களின் பாத தூளி, நமக்கு வரும் பேராபத்தைப் போக்கும்.முனைவர் ஸ்ரீராம்…

The post பிரகலாதனுக்கு வந்த பேராபத்து ! appeared first on Dinakaran.

Tags : Pragalathan ,Lord Sriman Narayan ,
× RELATED தஞ்சாவூர் வடவாற்றங்கரையில் ராகவேந்திர சுவாமிகளின் 429ம் ஆண்டு ஜெயந்தி