தண்ணீருக்கு அதிபதியாக இருக்கும் வருண தேவன், திருமாலிடம் வந்து ஒரு பிரார்த்தனையை முன் வைத்தார். “இறைவா! மக்கள் எல்லோரும் தங்களது பாபங்களைக் கழித்துக் கொள்ள எனது வடிவமாய் இருக்கும் புண்ணிய நீர்நிலைகளில் வந்து நீராடுகிறார்கள். அந்தப் பாபங்கள் அவர்களை விட்டு நீங்கினாலும், எனது வடிவமான நீர்நிலைகளில் இப்போது அந்தப் பாபங்கள் அப்படியே தங்கி விட்டன. அதனால் தண்ணீரின் அதிபதியான நானும் தோஷம் உடையவனாக ஆகி விட்டேன். எனது தோஷங்களைப் போக்கி என்னை நீ தூய்மையாக்கி அருள வேண்டும்!” என்று திருமாலிடம் வேண்டினார் வருணன்.அதற்குத் திருமால், “வரும் மாசி மாதம் பௌர்ணமியன்று மக நட்சத்திரத்தோடு கூடிய நன்னாளில் நான் நீர்நிலைகளிலேயே மிகப் பெரிதாக இருக்கும் கடலில் வந்து நீராடுவேன். நான் நீராடியவாறே, தண்ணீரில் உள்ள அனைத்துப் பாபங்களும் தோஷங்களும் நீங்கி, நீ தூய்மையானவனாக ஆகி விடுவாய்!” என்று வருணனுக்கு வரும் அளித்தார். அதன்படி மாசி மகத்தன்று திருமால் கடலில் நீராட்டம் கண்டருள, பரம பவித்திரமான இறைவனின் திருவடி சம்பந்தத்தால் அத்தனை நீர்நிலைகளும் தூய்மை அடைந்தன.
மாசி மகத்தின் தத்துவம்:மாசி மக நீராட்டத்தில், நதிகளில் நீராடி அவற்றில் உள்ள பாபங்களை இறைவன் போக்குகிறார். ஆனால் அந்த நதிகளில் உள்ள பாபங்கள் இறைவனிடம் ஒட்டுவதே இல்லை. தோஷமுள்ள ஒரு பொருள் நம்முடன் தொடர்பு கொண்டால், அப்பொருளில் உள்ள தோஷங்கள் நம்மிடம் வந்து ஒட்டிக்கொள்கிறது அல்லவா? ஆனால் தோஷமுள்ள ஒரு பொருள் இறைவனோடு தொடர்பு கொள்ளுகையில், இறைவனிடம் அந்த தோஷங்கள் ஒட்டுவதில்லை. மாறாக, அந்தப் பொருள் இறைவனைப் போலவே தூய்மையானதாக ஆகிவிடுகிறது. அவ்வாறு இங்கே மாசி மக நீராட்டத்தில் நதிகளில் உள்ள பாபங்கள் இறைவனைத் தீண்டுவதில்லை அல்லவா? எனவே இறைவன் ‘அகில ஹேய ப்ரத்யனீகன்’ (தோஷங்களால் தீண்டப்படாமல் இருப்பவன்) என்று இந்த மாசி மக நீராட்டத்தின் வாயிலாக அறிய முடிகிறது.அதே சமயம், அந்த நதிகளுக்கு இறைவன் தூய்மையைக் கொடுக்கிறார் அல்லவா? நாம் நதிகளில் நீராடுகையில், நம் பாபங்கள் அந்த நதிகளில் சேர்கின்றன. ஆனால், அதே நதிகளில் இறைவன் நீராடும்போது, அந்த நதியைப் பிடித்த பாபங்கள் நீங்குகின்றன. நாம் புண்ணிய நதிகளில் நீராடுவதால் நாம் தூய்மை அடைகிறோம். அதே புண்ணிய நதிகளில் இறைவன் நீராடும் போது, அந்தப் புண்ணிய நதிகள் தூய்மை அடைகின்றன. இதைக் கொண்டு இறைவன் ‘கல்யாணைக தானன்’ (மங்கள குணங்களுக்கெல்லாம் இருப்பிடம்) என்றும் அறிய முடிகிறது.இவ்வாறு பிரம்ம சூத்திரங்கள் கூறும் இறைவனின் இருபெரும் அடையாளங்களை நம் கண்முன் காட்டுவதே மாசி மக நீராட்டம் ஆகும்.மாசி மகத்தன்று தான்,1. வராகப் பெருமாள் பூமிதேவியைப் பிரளயக் கடலில் இருந்து மீட்டெடுத்தார்.2. வருணனின் பிரம்மகத்தி தோஷத்தைப் பரமசிவன் போக்கினார்.3. தட்சனின் மகள் சதி தேவி தோன்றினாள்.4. முருகன் சிவனுக்குப் பிரணவத்தின் பொருளை உபதேசித்தார்.கும்பகோணத்தின் அக்னி மூலையில் உள்ள மகாமகக் குளம் பற்றிய ஒரு வரலாறு சைவ புராணங்களில் காணக் கிடைக்கிறது. புனித நதிகளான கங்கை, யமுனை, கோதாவரி, சரஸ்வதி, நர்மதை, சிந்து, காவிரி, சரயூ, தாமிரபரணி ஆகிய ஒன்பது நதிகளும் சிவபெருமானிடம் சென்று, “மக்கள் எல்லோரும் எங்களிடம் வந்து நீராடித் தங்களது பாபங்களை எங்களிடம் கழித்து விட்டுச் செல்கிறார்கள். அப்பாபங்களை நாங்கள் எங்கே சென்று கழிப்பது?” என்று வினவின.அப்போது சிவபெருமான், “கும்பகோணத்தின் அக்னி மூலையில் உள்ள மகாமதக் குளத்தில் குரு சிம்ம ராசியில் இருக்கும் போது வரும் மக நட்சத்திரத்தோடு கூடிய பௌர்ணமி நாளில் நீங்கள் நீராடினால் உங்களது பாபங்கள் அனைத்தும் நீங்கும்!” என்று வரம் அளித்தார்.மக நட்சத்திரத்தோடு கூடிய பௌர்ணமி ஒவ்வொரு வருடமும் மாசி மாதத்தில் வரும். ஆனால் பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை தான் குரு சிம்ம ராசிக்கு வரும். எனவே தான் பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை, அதாவது சிம்ம ராசியில் குரு இருக்கும் போது வரக்கூடிய மாசி மகம் ‘மகாமகம்’ என்று கொண்டாடப்படுகிறது. 2016-ல் குரு சிம்ம ராசியில் இருந்த போது மகாமகம் கொண்டாடப் பட்ட நிலையில், அடுத்து 2028-ம் ஆண்டு மகாமகம் கும்பகோணத்தில் கொண்டாடப்பட உள்ளது.அந்நாளில் மகாமகக் குளத்தில் ஒன்பது புனித நதிகள் வந்து நீராடுவதால், அந்தக் குளத்தில் நீராடுபவர்களின் பாபங்கள் நீங்குவதோடு மட்டுமின்றி, ஒரே நேரத்தில் ஒன்பது புனித நதிகளில் நீராடிய பலனும் கிடைக்கிறது என்று சைவ புராணங்கள் கூறுகின்றன.அதுமட்டுமின்றி, ஒவ்வொரு ஆண்டுமே மாசி மகத்தன்று குடந்தையில் பல்வேறு சிவாலயங்களில் உள்ள சிவபெருமான்கள், ரிஷப வாகனத்தில் மகாமகக் குளக்கரைக்கு வந்து நீராட்டம் காண்பது வழக்கம்.குருவின் பெருமை:குடந்தை கடைவீதியில் எழுந்தருளி இருக்கும் நடாதூர் அம்மாள் உடனுறை ராஜகோபால சுவாமிக்கு மாசி மகத்தன்று திருக்கோவிலிலேயே தீர்த்தவாரி நடைபெறும். மகாமகத்தன்று (பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை) காவிரியில் தீர்த்தவாரி நடைபெறும்.அந்தத் தீர்த்தவாரியின் போது, ராஜகோபால சுவாமி தனியாகச் செல்லாமல், தன்னோடு எழுந்தருளி இருக்கும் வைணவ குருமாரான ஸ்ரீநடாதூர் அம்மாளோடு சேர்ந்து சென்று தீர்த்தவாரி கண்டருள்வது வழக்கம். ஏனெனில், நீராட்டம் என்பது ஜீவாத்மாவுக்கும் பரமாத்மாவுக்கும் இடையே நடைபெறும் ஒருவித பரிமாற்றம் ஆகும். இறைவனின் குணங்களாகிய குளத்தில் ஒரு ஜீவாத்மா நீராடுவது தான் உண்மையான நீராட்டம். அது குருவின் துணையால் தான் சாத்தியமாகும் என்பதை நமக்கு உணர்த்தவே, ‘வாத்ஸ்ய வரத குரு’ என்று பெயர் பெற்ற நடாதூர் அம்மாளோடு இணைந்து தீர்த்தவாரிக்குச் செல்கிறார், கடைவீதி ராஜகோபாலன்.குடந்தை வெங்கடேஷ்…
The post மகத்துவமிக்க மாசி மகம் appeared first on Dinakaran.