×

வேழ முகத்தோனின் வியத்தகு ஆலயங்கள்

விநாயகப்பெருமான் பல தலங்களில் திருவிளையாடல்கள் புரிந்து சிறப்புப்பட்டப் பெயருடன் விளங்கி வருகிறார். அப்படிப்பட்ட ஆலயங்களில் அருட்பாலிக்கும் விநாயகப் பெருமானைக் கண்டு தரிசிப்போம் வாருங்கள்.விகடச் சக்கர விநாயகர்‘விகடச் சக்கர விநாயகர்’ காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர் ஆலயத்தில் அருட்பாலித்து வருகிறார். ஒரு சமயம் விஷ்வக் சேனரின் சக்கராயுதத்தை எடுத்து வைத்துக் கொண்ட விநாயகர் தனக்கு முன்னால் நடனம் ஆடினால் தான் சக்கரத்தைத் தர முடியும் என்று நிபந்தனை விதிக்க, அவர் நடனமாடி சக்கரத்தைப் பெற்றாராம். சக்கரத்தில் ஒரு விகடம் நிகழ்த்திய காரணத்தால் இவர் ‘விகடச் சக்கர விநாயகர்’ ஆனார்.விருச்சிக விநாயகர்தஞ்சை மாவட்டம் ஆடுதுறைக்கு அருகே உள்ள மருத்துவக்குடி என்ற ஊரில் அபிராமியம்மை சமேத ஐராவதீஸ்வரர் கோயில் உள்ளது. இங்குள்ள விநாயகரின் திருமேனி தேளின் செதில் போன்ற அமைப்பில் இருப்பதால் இவரை ‘விருச்சிக விநாயகர்’ என்கின்றனர். விருச்சிக ராசிக்காரர்கள் இங்கு வந்து வழிபட்டு நலம் பெறலாம்.முக்குறுனி விநாயகர்மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் எட்டடி உயரத்தில் நான்கு திருக்கரங்களோடு அமர்ந்த கோலத்தில் பிரமாண்டமாகக் காணப்படுபவர் முக்குறுனி விநாயகர். மதுரை தெப்பக்குளத்தில் திருமலை நாயக்கரால் கண்டெடுக்கப்பட்ட இந்த விநாயகருக்கு முக்குறுணி அரிசியில் பிரம்மாண்டமான கொழுக்கட்டை தயாரித்து படைக்கிறார்கள் (ஒரு குறுணி என்பது 6 படி 3 முக்குறுணி என்பது 18 படி) எனவே இவர் முக்குறுணி விநாயகர் என அழைக்கப்பட்டார்.ஹேரம்ப விநாயகர்திருத்தணி அருகில் உள்ள மின்னல் கிராமத்தில் இருக்கும் ஆலயத்தில் ஐந்து முகங்களோடு கருவறையில் சிம்ம வாகனத்தின் மீது அமர்ந்த நிலையில் பிரதான மூர்த்தியாக ‘ஹேரம்ப விநாயகர்’ அருளாட்சி புரிகிறார். இந்த சிம்ம வாகனத்தின் பார்வை பட்டால் விபத்துக்களிலிருந்து தப்பிக்கலாம் என்பது இங்குள்ளோரின் நம்பிக்கையாகும்.கச்சேரி விநாயகர்மதுராந்தகம் அருகே செய்யூர் என்ற ஊரின் மார்க்கெட் பகுதியில் அமைந்துள்ள கோயிலில் வீற்றிருக்கும். விநாயகருக்கு கச்சேரி விநாயகர் என்று பெயர். இந்தப் பிள்ளையார் ஒருபுறம் சற்றே சாய்ந்து தாளம் போடுவது போன்ற பாவனையுடன் காணப்படுவதால் இவருக்குக் கச்சேரி விநாயகர் எனும் பெயர் வந்தது. ‘கோடை அபிஷேகம் ’என்ற பெயரில் சித்திரை மாதம் முழுவதும் தினசரி இளநீர் அபிஷேகமும் தயிர் அபிஷேகமும் நடைபெறுகிறது.பாஸ் போர்ட் விநாயகர்பிள்ளையார் பட்டி விநாயகர் கோயிலின் கிழக்கு ராஜ கோபுரத்தின் வலது பக்கத்தில் மருத மரத்தின் அடியில் இருக்கும் விநாயகர் ‘பாஸ் போர்ட் விநாயகர்’ என்றழைக்கப்படுகிறார். வெளிநாட்டுக் கனவில் இருப்பவர்கள் இவரை வழிபட்டுப் பயன் பெறுகிறார்கள்.சுவேத விநாயகர்கும்பகோணம் அருகில் உள்ள திருவலஞ்சுழியில் புகழ் பெற்ற வெள்ளை வாரண விநாயகர் ஆலயம் உள்ளது. இவர் கடல் நுரையால் செய்யப்பட்ட விநாயகர் என்பதால் இவருக்கு அபிஷேகம் கிடையாது. பச்சைக் கற்பூரப் பொடிமட்டுமே சாத்தப்படுகிறது. இவரை சுவேத விநாயகர் என்றும் சொல்வர்.சர்ப்ப விநாயகர்தஞ்சை மாவட்டம் பாபநாசத்தில் உள்ளது. ஸ்ரீசர்ப்பவிநாயகர் கோயில். இவருக்கு சர்ப்பம் தன் ஐந்து தலைகளுடன் குடையாக விளங்குகிறது. விநாயகரின் உடலில் ஐந்து பாம்புகள் அணிகலன்களாக உள்ளன. ராகு கேது தோஷங்கள் இவரை வழிபட நீங்கும்.தலை வெட்டி விநாயகர்திண்டுக்கல் அருகேயுள்ள மேலைக் கோட்டையூர் ஆலயத்தில் ‘தலை வெட்டி விநாயகர்’ உள்ளார். ஒரு காலத்தில் இந்த பிள்ளையாரின் சிரசில், ‘‘தன் தலையை நீக்கித் தனத்தை எடு’’ என்று ஒரு வாசகம் இருந்ததாம். அதன் படி விநாயகரின் தலை துண்டிக்கப்பட்டதாம். அதற்குள்ளே இருந்த வெள்ளிக் காசுகளையெல்லாம் எடுத்து குளம், கோயில் கிணறு வெட்டவும் பயன்படுத்தினார்களாம். அதனால் அவர் தலைவெட்டி விநாயகர் எனப் பெயர் பெற்றார்.கூப்பிடு விநாயகர்திருப்பூருக்கு அருகில் உள்ளது திருமுருகன் பூண்டி திருமுருக நாதர் ஆலயம். ஒரு சமயம் சுந்தரமூர்த்தி நாயனார் வந்த போது அவரைக் கூப்பிட்டு அவருக்கு உதவிய காரணத்தால் இங்குள்ள விநாயகரை ‘கூப்பிடு விநாயகர்’ என்கின்றனர். இன்றைக்கும் இழந்த பொருட்களை மீண்டும் பெறுவதற்கு இவரை வணங்கிப் பலன் பெறுகின்றனர்.உயிர் மீட்ட விநாயகர்கும்பகோணத்திற்கு அருகில் உள்ளது. திருப்பனந்தாள் இங்கு வாழ்ந்தவர் குங்குலியக்கலய நாயனார். திடீரென இவர் மகன் இறந்து விடவே அவனை தகனம் செய்வதற்காக மயானத்திற்கு எடுத்துச் சென்றனர். இத்தல விநாயகர் வழி மறித்து, அங்குள்ள நாககன்னித்தீர்த்தத்தில் நீராடி விட்டு மகனின் உடலை வீட்டுக்கு எடுத்துச் செல்லுமாறு கூறினார். அங்கு சென்றதும் இறந்த மகன் உயிர்த்தெழுந்தான். அதனால் இத்தலத்து விநாயகப் பெருமான் ‘உயிர் மீட்ட விநாயகர்’ எனப் போற்றப்படுகிறார்.ஆனந்த விநாயகர்வள்ளி மலை முருகப்பெருமான் வள்ளியை மணம் புரிய வேண்டி, இத்தல ஈசனை வழிபட்டார். பின்னர் அண்ணன் கணேசனோடு வள்ளிமலை சென்று வள்ளியைக் கண்டு திருவிளையாடல்கள் புரிந்து அவளை கைப் பிடித்தார். தம்பிக்கு உதவிய களிப்பில் கணபதி இங்கு ஆனந்த நடனம் புரிந்ததால் இத்தல விநாயகர் ‘ஆனந்த விநாயகர் என்று அழைக்கப்படுகிறார்.– டி.எம். இரத்தினவேல்

The post வேழ முகத்தோனின் வியத்தகு ஆலயங்கள் appeared first on Dinakaran.

Tags : Vela Mukhathon ,Lord ,Vinayaka ,Thiruvilyadals ,Ganesha ,
× RELATED கற்பக விநாயகா பொறியியல் கல்லூரியில்...