×

ஆவியின் கனி -9 இச்சையடக்கம்!

பிறனுடைய வீட்டை இச்சியாதிருப்பாயாக. பிறனுடைய மனைவியையும், அவனுடைய வேலைக்காரனையும், அவனுடைய வேலைக்காரியையும், அவனுடைய எருதையும், அவனுடைய கழுதையையும், பின்னும் பிறனுக்குள்ள யாதொன்றையும் இச்சியாதிருப்பாயாக. யாத்திராகமம் ( 20 : 17).இச்சை என்றால் என்ன? நமது தேவைக்கு அதிகமாக ஆசை கொள்வது இச்சை எனப் படும். இச்சை என்பதற்கு போதுமென்ற மனமின்மை அல்லது பேராசை என்றும் பொருள் கூறலாம்.நமது ஆதிப் பெற்றோராம் ஆதாமும், ஏவாளும் செய்த பாவத்தை இதற்கு நல்லதொரு உதாரணமாகக் குறிப்பிடலாம். இறைவன் அவர்களுக்காக ஏதேன் என்னும் அழகான தோட்டத்தை உண்டாக்கி, அத்தோட்டத்தில் அவர்களுக்குத் தேவையான பழங்கள், ஆரோக்கியமான குடிநீர், சுகாதாரமான காற்று, குளிர்ச்சியான சீதோஷ்ண நிலை ஆகிய அனைத்து வசதிகளையும் ஏற்படுத்திக் கொடுத்திருந்தார். எனினும் அவர்கள், அதில் மனநிறைவு கொள்ளவில்லை. மாறாக, நீங்கள் உட்கொள்ள வேண்டாம் என்று இறைவனால் விலக்கப்பட்டிருந்த மரத்தின் கனியைப் புசித்தனர். இதனையே நாம் போதுமென்ற மனமின்மை அல்லது இச்சை என்கிறோம். அதன் விளைவாக நம் ஆதிப்பெற்றோர் ஆசீர்வாதமான ஏதேன் தோட்ட வாழ்க்கையை இழந்துவிட்டனர்.பேராசை பெருநஷ்டம் என்பர். ஆம் பேராசையாகிய இச்சை நமது வாழ்வில் பெரும் நஷ்டத்தை ஏற்படுத்திவிடும்.மூன்று நண்பர்கள் மலை ஒன்றின்மேல் புதையல் இருக்கும் செய்தியைக் கேள்விப்பட்டு மலைமேல் ஏறி, புதையலைத் தோண்டிக் கொண்டிருந்தனர். அவர்களுக்கு மிகுந்த உடல்சோர்வு ஏற்பட்டது. ஒருவரையொருவர் நோக்கி, நம்மில் ஒருவர் மலைக்குக் கீழே சென்று உணவு ஏதாவது வாங்கி வரலாம். மற்ற இருவர் ஓய்வெடுத்துக் கொண்டிருக்கலாம் என்று பேசி அதன்படி, ஒரு வாலிபன் புறப்பட்டுச் சென்றான். மற்ற இருவரும், கீழே சென்று நமது நண்பன் மலைக்கு மேலே வரும்போது அவனை அடித்துக் கொன்றுவிடுவோம் எனப்பேசி, அதன்படியே செய்தனர். ஏனெனில், அவனைக் கொன்றுவிட்டால் புதையலை இரண்டு பங்காக்கி தாங்களே எடுத்துக் கொள்ளலாம் என்று எண்ணினர். தங்களுடைய நண்பன் வந்தபோது, திட்டமிட்டபடியே அவனை அடித்துக் கொன்றனர். சிறிது நேரத்தில் இரண்டு பேரும் வாயிலிருந்து நுரை தள்ளி இறந்து போயினர். ஏனெனில், உணவு வாங்கி வந்தவன், இரண்டு பேரையும் கொன்றுவிட்டு புதையலை ஒரே பங்காக்கி தானே முழுவதும் எடுத்துக் கொள்ளலாம் என எண்ணி அந்த உணவில் விஷத்தைக் கலந்து வைத்திருந்தான். ஆக மொத்தம் மூன்று பேரும் பேராசையால் தங்கள் உயிரை இழந்தனர்.ஆம்! இச்சை என்பது நமது வாழ்வில் பெரும் விபரீதத்தை ஏற்படுத்திவிடும். எனவே, போதுமென்ற மனதுடனேகூடிய தேவபக்தியே மிகுந்த ஆதாயம் (1 தீமோத்தேயு 6 : 6) உண்ணவும், உடுக்கவும் நமக்கு உண்டாயிருந்தால் அது போதுமென்றிருக்கக் கடவோம்(1 தீமோத்தேயு 6:8) என்று திருமறை வசனங்களுக்கேற்ப ஆண்டவர் நமக்குத் தருகின்ற நன்மைகளும், ஆசீர்வாதங்களும் போதும் என்று, திருப்தியடைகின்ற மனதை வளர்த்துக்கொள்ள நாம் அழைக்கப்படுகிறோம்.பிறருடைய பணம், பொருள், நிலம், வேலை ஆகிய எதுவொன்றின் மேலும் இச்சை கொள்ளாமல், கடவுள் நமக்குத் தந்துள்ள ஆசீர்வாதங்களிலே மனநிறைவு கொள்வோம். நமது தேவைக்கு அதிகமாக இருப்பதை பிறருக்கு பகிர்ந்து கொடுப்போம். அவ்வாறு செய்தால் கடவுள்தாமே நமது வாழ்வுக்குத் தேவையான அனைத்து நன்மைகளையும் தந்து நம்மை ஆசீர்வதிப்பார்.- Rt.Rev.Dr.S.E.C. தேவசகாயம், பேராயர், தூத்துக்குடி- நாசரேத் திருமண்டலம்….

The post ஆவியின் கனி -9 இச்சையடக்கம்! appeared first on Dinakaran.

Tags :
× RELATED இந்திய மகள்களின் பாதுகாப்பை விட...