219. உதாரதியே நமஹ (Udhaaradhiye namaha)திருமால் மத்ஸ்யாவதாரம் எடுத்ததன் பின்னணியை, வேதாந்த தேசிகன் என்னும் வைணவக் குரவர் புதிய கோணத்தில் விளக்கியுள்ளார்: ஒருமுறை வேதாந்த தேசிகன், திருவஹீந்திரபுரத்தில் தமது சீடர்களுக்குத் திருமாலின் தசாவதாரங்களைப் பற்றி விளக்கிக் கொண்டிருந்தபோது, ஒரு சீடர் எழுந்து, “சுவாமி! ஓர் ஐயம்! தசாவதாரங்களில் முதல் அவதாரமாக மத்ஸ்யாவதாரத்தைக் கொண்டாடுகிறோம். அந்த முதல் அவதாரத்தில் திருமால் ஏன் மனித வடிவில் தோன்றாது, மீன் வடிவத்தோடு அவதரித்தார்?” என்று கேட்டார்.“நம் சீடர்களில் யாரேனும் இதற்கு விடையளிக்க இயலுமா?” என்று கேட்டார் வேதாந்த தேசிகன். கோஷ்டியிலிருந்து ஒரு சீடர் எழுந்திருந்து, “அது வேறொன்றுமில்லை! பிரளயக் கடலில் நீந்திச் சென்று வேதத்தைத் தேடுவதற்கு வசதியாய் இருப்பதற்காக மீன் வடிவத்தில் திருமால் அவதரித்தார்!” என்று கூறினார். ஆனால் கேள்வி எழுப்பிய சீடரோ, “சர்வ சக்தி வாய்ந்தவரான திருமாலால் மனித வடிவுடனேயே பிரளயக் கடலில் நீந்தி வேதங்களைக் காக்க இயலுமே! அவ்வாறிருக்க எதற்காக அவர் மீன் வடிவம் ஏற்க வேண்டும்?” என்று கேட்டார். அதற்கு வேதாந்த தேசிகன், கதையும் கவிதையும் இணைந்த அற்புதமான ஒரு பதிலை அளித்தார்:“அவதரண விசேஷை: ஆத்ம லீலாபதேசை:அவமதிம் அநுகம்பே! மந்த சித்தேஷு விந்தன் |வ்ருஷப சிகரி நாத: த்வத் நிதேசேன நூனம்பஜதி சரணபாஜாம் பாவினோ ஜன்ம பேதான் ||”ஒரு மனிதன் வாழ்வு முழுவதும் உண்மையே பேசாமல், பொய் சொல்லிக் கொண்டே வாழ்ந்து வந்தான். ஒருநிலையில் அவன் மனம் திருந்தி, தனது தவறை உணர்ந்து, இனி பொய் கூற மாட்டேன் என்று சபதம் செய்துவிட்டு, திருமகளின் திருவடிகளிலும் திருமாலின் திருவடிகளிலும் தஞ்சமடைந்தான். இதுவரை செய்த தவறுகளில் இருந்து தன்னைக் காத்து, தனக்கு முக்தியளிக்குமாறு திருமாலிடம் வேண்டினான்.அப்போது திருமால், “நீ நிறைய பொய் பேசி இருக்கிறாய். அதனால் அதற்குத் தண்டனையாக ஏழு பிறவிகள் மீனாகப் பிறக்க வேண்டும். அதன்பின் உனக்கு முக்தி அளிக்கிறேன்!” என்றார். ஆனால் மகாலட்சுமியோ, “சுவாமி! இவன் இதுவரை தவறு செய்திருந்தாலும், இப்போது திருந்தி நீங்களே கதி என்று வந்துவிட்டான். இனி இவனைத் தண்டிப்பது முறையல்ல! உடனடியாக இவனுக்கு முக்தியளித்து விடுங்கள்!” என்று கருணையோடு கூறினாள். “இப்போதே இவனுக்கு முக்தியளித்தால், இவன் செய்த தவறுக்கென்று சாஸ்திரம் விதித்துள்ள தண்டனையை யார் அனுபவிப்பது?” என்று கேட்டார் திருமால். அதற்கு மகாலட்சுமி, “இவன் ஏழு பிறவிகள் மீனாய்ப் பிறப்பதற்குப் பதிலாக நீங்களே ஒரு பெரிய மீனாக ஒரு அவதாரம் எடுத்து விட்டால், இவனது பாபத்துக்கான தண்டனை நிறைவேறி விடும். எனவே தாமதிக்காமல் இப்போதே இவனுக்கு முக்தியளியுங்கள்!” என்று தாய்ப்பாசத்தோடு கூறினாள்.அதனால் திருமால் மத்ஸ்யாவதாரம் எடுத்து அந்த பக்தனின் பாபங்களைத் தீர்த்தார். அந்த பக்தனும் விரைவில் முக்தியடைந்தான். இவ்வாறு பக்தர்களின் பாபங்களைக் கழுவுவதற்காகத் திருமாலையே மிருக வடிவங்களில் அவதரிக்க வைக்கிறாள் மகாலட்சுமி என்று புதிய கோணத்தில் விளக்கம் அளித்தார் வேதாந்த தேசிகன். பக்தர்களின் பாபங்களைத் தீர்ப்பதற்காகவும், பக்தர்கள் இனி பிறவாமல் காப்பதற்காகவும், திருமால் கருணையோடு பூமிக்கு இறங்கி வந்து மீன் போன்ற வடிவங்களில் அவதாரங்கள் எடுக்கிறார். இத்தகைய அவதாரங்கள் செய்ய வேண்டுமென்றால், அந்த இறைவனுக்கு எவ்வளவு பரந்து விரிந்த கருணை இருக்க வேண்டும்? அதனால் தான் மத்ஸ்யமூர்த்தி ‘உதாரதீ:’ என்றழைக்கப்படுகிறார்.பரந்த மனப்பான்மையை வடமொழி யில் ‘உதாரம்’ என்று சொல்வார்கள். ‘உதாரதீ:’ என்றால் விசாலமான கருணை உள்ளத்தை உடையவர் என்று பொருள். அதுவே விஷ்ணு ஸஹஸ்ரநாமத்தின் 219-வது திருநாமம்.“உதாரதியே நமஹ” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்களின் மீது திருமால் தனது விசாலமான கருணையைப் பொழிவார்.220. அக்ரண்யே நமஹ (Agranye namaha)ஒரு மன்னர் தனது மந்திரியோடும் இளவரசனோடும் ஒரு படகில் பயணித்துக் கொண்டிருந்தார். மன்னரின் பரிவாரங்கள் எல்லோரும் இரண்டு படகுகளில் மன்னரைப் பின்தொடர்ந்து சென்று கொண்டிருந்தார்கள். அப்போது மன்னர் மந்திரியிடம், “அமைச்சரே! இறைவன் ஏன் பூமியில் வந்து அவதாரங்கள் செய்கிறார்?” என்று கேட்டார். அதற்கு மந்திரி, “பரித்ராணாய ஸாதூனாம் விநாசாய ச துஷ்க்ருதாம் |தர்ம ஸம்ஸ்தாபனார்த்தாய ஸம்பவாமி யுகே யுகே || என்று இறைவனே கீதையில் கூறியுள்ளாரே! நல்லோர்களைக் காப்பதற்காகவும், அசுர சக்திகளை அழிப்பதற்காகவும், தர்மத்தை நிலைநாட்டுவதற்காகவும் இறைவன் யுகந்தோறும் அவதரிக்கிறார்!” என்று விடையளித்தார்.ஆனால் மன்னரோ, “இல்லை அமைச்சரே! இறைவன் நினைத்தால், வைகுண்டத்தில் இருந்தபடியே தனது சக்கராயுதத்தை அனுப்பி, ராவணன், கம்சன், இரணியன் உள்ளிட்ட அசுர சக்திகளின் தலைகளைக் கொய்து விடலாமே! அல்லது அனைத்துலகுக்கும் சக்கரவர்த்தியான அவர், கருடன், ஆதிசேஷன் போன்ற தனது பணியாட்களுள் ஒருவரைப் பூமிக்கு அனுப்பி, அவர்களின் மூலம் இந்த அசுர சக்திகளை அழிக்கலாமே! இறைவனே ஏன் பூமிக்கு இறங்கி வர வேண்டும்?” என்று கேட்டார். இவ்வாறு மன்னர் பேசிக் கொண்டிருந்தபோதே திடீரென்று படகு ஆட்டம் கண்டது. படகின் விளிம்பில் அமர்ந்திருந்த இளவரசன் ஆற்றில் தவறி விழுந்துவிட்டான். “ஐயோ! என் மகனே!” என்று துடித்தார் மன்னர். பின்னால் வந்த படகிலிருந்த மன்னரின் காவலாளிகள் எல்லோரும் இளவரசனை மீட்கத் தண்ணீரில் குதித்தார்கள். ஆனால் அவர்களுக்கு முன், மன்னர் தானே ஆற்றில் குதித்துத் தன் மகனை மீட்டுக் கொண்டு வந்து படகில் சேர்த்தார். இதை எல்லாம் அமைதியாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த மந்திரி, “மன்னரே! தங்களது கேள்விக்கான பதில் கிடைத்துவிட்டது போலிருக்கிறதே!” என்று கேட்டார். “என்ன சொல்கிறீர் அமைச்சரே?” என்று கேட்டார் மன்னர். “ஆம் மன்னா! உங்களது மகன் ஆற்றில் விழுந்தபோது, நீங்கள் ஏன் உங்களது காவலாளிகளை ஏவி உங்கள் மகனை மீட்காமல், நீங்களே ஆற்றில் குதித்தீர்கள்?” என்று கேட்டார் மந்திரி.அதற்கு மன்னர், “என் காவலாளிகள் மூலம் என் மகனைக் காத்திருந்தால், இந்நாட்டுக்கு நல்ல சக்கரவர்த்தி என்று நான் பெயர் எடுக்கலாமே ஒழிய, என் மகனுக்கு நல்ல தந்தையாக ஆக மாட்டேன். நானே ஆற்றில் குதித்து என் மகனை மீட்டால் தானே தந்தை என்ற ஸ்தானத்துக்கே மரியாதை! இது உங்களுக்குப் புரியவில்லையா?” என்று கேட்டார். அதற்கு மந்திரி, “அதுபோலத் தான் இறைவனும்!! பூமியில் அடியார்கள் துன்பப்படும் போது, இறைவன் மேலே வைகுண்டத்தில் இருந்து கொண்டு, தனது ஏவலாட்களை அனுப்பி அந்த அடியார்களைக் காத்தால், அது பெரிய சக்கரவர்த்திக்குரிய லட்சணமாக இருக்குமே ஒழிய, கருணையே வடிவெடுத்த இறைவனுக்குரிய லட்சணமாக இருக்காது. இளவரசருக்கு ஆபத்து என்றவுடன், நீங்கள் ஒரு சக்கரவர்த்தி என்பதையும் மறந்து எப்படி ஆற்றில் குதித்து இளவரசனை மேலே கொண்டுவந்தீர்களோ, அதுபோல் இறைவனும் பிறவிப் பெருங்கடலில் அழுந்தித் துயரப்படும் மக்களை, அதிலிருந்து மேலே கொண்டுவரும் நோக்கில் தானே கீழே இறங்கி வருகிறார்!” என்று விடையளித்தார்.இக்கருத்தையே மணவாள மாமுனிகள், ஆர்த்திப் பிரபந்தம் என்னும் நூலில், “கூபத்தில் வீழும் குழவியுடன் குதித்து அவ் ஆபத்தை நீக்கும் அந்த அன்னை போல்” என்று பாடியுள்ளார். இவ்வாறு நம் ஒவ்வொருவரையும் மேலே உயர்த்துவதற்காக இறைவன் செய்த அவதாரங்களுள் முதன்மையானது மத்ஸ்யாவதாரம். பிரளயக் கடலில் காணாமல் போன வேதங்களை மீட்டதோடு மட்டுமின்றி, பிறவிக் கடலில் சிக்கித் தவிக்கும் நம்மையும் மீட்டு மேலே உயர்த்திட எண்ணி, வேத ரகசியங்களை விளக்கும் மத்ஸ்யபுராணத்தை உபதேசித்தார் மத்ஸ்யமூர்த்தி. ‘அக்ரம்’ என்ற சொல் முதன்மையான ஸ்தானமாகிய வைகுண்டத்தைக் குறிக்கும். ‘அக்ரணீ:’ என்றால் அந்த வைகுண்டத்தை நோக்கி நம்மை முன்னேற்றி அழைத்துச் செல்பவர் என்று பொருள். அனைத்துயிர்களும் முன்னேறி மேலே வர வேண்டும் என்ற நோக்கில் கீழே இறங்கி வந்தபடியால், மத்ஸ்யமூர்த்தி ‘அக்ரணீ:’ என்றழைக்கப்படுகிறார். அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 220-வது திருநாமம். “அக்ரண்யே நமஹ” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்கள் வாழ்வில் மேன்மேலும் முன்னேற்றம் அடையத் திருமால் அருள்புரிவார்.221. க்ராமண்யே நமஹ (Graamanye namaha)(211-வது திருநாமமான ‘குருதமோ குரு:’ முதல், 225-வது திருநாமமான ‘ஸமீரண:’ வரையுள்ள 15 திருநாமங்கள் மத்ஸ்ய அவதாரத்தின் பெருமைகளை விளக்கவந்தவை.) சைவ சமயக் குரவர்களுள் ஒருவரான திருஞானசம்பந்தர், முருகப் பெருமானின் அம்சமாகச் சீர்காழியில் தோன்றினார். இளம் வயதிலேயே பார்வதி தேவியால் ஞானப் பால் ஊட்டப்பெற்று, மிகச்சிறந்த பண்டிதராகவும், கவிஞராகவும் விளங்கினார். மதுரையை ஆண்ட மங்கையர்க்கரசியின் அழைப்பை ஏற்றுப் பாண்டிய நாட்டுக்குச் சம்பந்தர் புறப்பட்ட போது, “கிரக நிலைகள் சரியாக இல்லாமையால் இப்போது செல்ல வேண்டாம்!” என்று தடுத்தார் திருநாவுக்கரசர் சுவாமிகள். ஆனால் சம்பந்தரோ, “பார்வதியின் கேள்வனும், ஆலகால நஞ்சை உண்டு தேவர்களைக் காத்தவனும், சடையில் சந்திரனையும் கங்கையையும் ஏந்தியவனுமான சிவபெருமான் என் உள்ளத்தில் இருக்கும் போது, நான் அஞ்சத் தேவையில்லை!” என்று கூறினார். மேலும் ஞாயிறு, திங்கள், செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி, சனி, இரு பாம்புகள் (ராகு, கேது) என்று கோள்களை வரிசைப்படுத்தி விட்டு, அந்த ஒன்பது கோள்களும் சிவனடியார்களுக்குத் துணைநிற்கும் என்று பொருள் படும்படி, “வேயுறு தோளி பங்கன் விடமுண்ட கண்டன் மிகநல்ல வீணை தடவி மாசறு திங்கள் கங்கை முடிமேல் அணிந்து என் உளமே புகுந்ததனால் ஞாயிறு திங்கள் செவ்வாய் புதன் வியாழன் வெள்ளி சனி பாம்பு இரண்டும் உடனே ஆசறு நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியார் அவர்க்கு மிகவே” என்ற பாடலில் தொடங்கி, கோளறு பதிகம் என்றழைக்கப்படும் பத்துப் பாடல்களைப் பாடிவிட்டுத், தங்குதடையின்றி மதுரையை நோக்கிப் பயணம் மேற்கொண்டார் சம்பந்தர்.சம்பந்தர் தோன்றிய சீர்காழிக்கு அருகிலுள்ள திருவாலி திருநகரியில், திருமாலின் சார்ங்க வில்லின் அம்சமாகத் தோன்றிய திருமங்கையாழ்வாரின் வாழ்விலும் இதேபோன்ற ஒரு சம்பவம் நிகழ்ந்தது பாண்டிய நாட்டிலுள்ள திருக்கோயில்களை மங்களாசாசனம் செய்வதற்காகத் திருமங்கையாழ்வார் புறப்பட்ட போது, சில சீடர்கள், “நாளும் கோளும் சரியாக இல்லாததால் இப்போது செல்ல வேண்டாம்!” என்று கூறினார்கள். அப்போது திருமங்கையாழ்வார், “ஊழிக் காலத்தின் போது, அனைத்துலகுகளும் பிரளய வெள்ளத்தால் சூழப்பட்டிருந்த நிலையில், ஒதுங்குவதற்கு இடமின்றி தேவர்களும் மாந்தரும் தவித்த போது, அந்த வெள்ளத்தின் நடுவே மீன் வடிவில் தோன்றிய அனைத்துலகையும் காத்த மத்ஸ்ய மூர்த்தியை நாம் எப்போதும் தியானிப்பதால், நாளும் கோளும் குறித்து நாம் அஞ்சத் தேவையில்லை!” என்று பொருள்படும் படி, “நிலையிடம் ஒன்றுமின்றி நெடுவெள்ளம் உம்பர் வளநாடு மூட இமையோர் தலையிட மற்றெமக்கோர் சரணில்லை என்ன அரணாவான் என்னும் அருளால் அலைகடல் நீர்குழம்ப அகடாட ஓடி அகல்வான் உரிஞ்ச முதுகில் மலைகளை மீதுகொண்டு வருமீனை மாலை மறவாது இறைஞ்சென் மனனே”என்ற பாடலைப் பாடினார். (சம்பந்தர் இயற்றிய வேயுறு தோளி பங்கன் எனும் பாடலும், திருமங்கையாழ்வார் இயற்றிய இப்பாடலும் இரண்டுமே ‘வியந்தைக் காந்தாரம்’ என்னும் ஒரே பண் வகையைச் சார்ந்தவை.) மத்ஸ்யாவதாரத்தைத் தொடர்ந்து, கூர்மாவதாரம், வராஹவதாரம் எனத் திருமாலின் பத்து அவதாரங்களையும் வரிசைப் படுத்தி, “திருமாலின் பத்து அவதாரங்களும் நமக்குத் துணையிருக்கின்றன. தேவலோகத்திலுள்ள தேவர்களின் கூட்டத்துக்கும், வைகுண்டத்திலுள்ள நித்தியசூரிகளின் கூட்டத்துக்கும் தலைவராகத் திகழ்ந்து அவர்களையே நியமிப்பவர் திருமால். அந்தத் திருமாலே நமக்குத் துணை நிற்கையில், கிரக நிலைகளைக் குறித்து நாம் கவலைகொள்ளத் தேவையில்லை!” என்றும் கூறிய திருமங்கையாழ்வார், வெற்றிகரமாகப் பாண்டிநாட்டை நோக்கிப் பயணித்தார்.‘க்ராம’ என்ற சொல் கூட்டத்தைக் குறிக்கும். ‘க்ராமணீ:’ என்றால் கூட்டங்களை இயக்குபவர் என்று பொருள். மனிதசக்திக்கு மேம்பட்டவர்களான நவகிரகங்களின் கூட்டங்கள், தேவர்களின் கூட்டங்கள், வைகுண்டத்தில் வசிப்பவர்களான நித்தியசூரிகளின் கூட்டங்கள் என அனைவரையும் இயக்கி வழிநடத்துவதால், திருமால் ‘க்ராமணீ:’ என்றழைக்கப்படுகிறார். அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 221-வது திருநாமம். “க்ராமண்யே நமஹ” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்களின் பாதையில் வரும் தடைகளைத் திருமால் தகர்த்தெறிவார்.222. ஸ்ரீ மதே நமஹ (Sreemathey namaha)நன்னிலத்துக்கு அருகிலுள்ள திருக்கண்ணபுரம் என்னும் திருத்தலம், 108 வைணவ திவ்ய தேசங்களுள் ஒன்றாகும். அங்கே கோயில் கொண்டிருக்கும் செளரிராஜப் பெருமாளைத் தரிசிக்க அவ்வூருக்கு வந்தார் திருமங்கை ஆழ்வார். சௌரிராஜனைத் தரிசித்தார். “திருமங்கை மன்னரே! திருவாலி திருநகரியில் நீங்கள் வழிப்பறி செய்ய வந்தபோது உங்களை வழிமறித்த நான், அப்போதே உங்களுக்கு எட்டெழுத்து மந்திரத்தை உபதேசம் செய்து விட்டேன். இப்போது அந்த மந்திரத்துக்கான பொருளை விளக்குகிறேன்!” என்று சொன்ன சௌரிராஜப் பெருமாள், பிரணவத்தோடு சேர்த்து நமோ நாராயணாய என்று அமைந்திருக்கும் அந்த எட்டெழுத்து மந்திரத்தின் பொருளைத் திருமங்கையாழ்வாருக்கு விளக்கினார். பாடம் நடத்திய ஆசிரியர், மாணவனைப் பார்த்துப் புரிந்துவிட்டதா என்று கேட்பது போல, சௌரிராஜப் பெருமாளும் மந்திரத்தை விளக்கிவிட்டு, “திருமங்கை மன்னரே! இந்த மந்திரத்தின் சாரம் உங்களுக்குப் புரிந்ததா?” என்று கேட்டார்.அதற்குத் திருமங்கையாழ்வார்,“…உற்றதும் உன் அடியார்க்கு அடிமைமற்றெலாம் பேசிலும் நின் திரு எட்டு எழுத்தும்கற்று நான் கண்ணபுரத்துறை அம்மானே!”என்ற பாடலின் மூலமாக, “உனக்கு மட்டும் நான் அடிமை அல்ல! உனது அடியார்களுக்கும் நான் அடிமை என்பதை உணர்ந்து கொண்டேன். இதுவே எட்டெழுத்து மந்திரத்தின் சாரமென அறிந்துகொண்டேன்!” என்று விடையளித்தார். அடியார்க்கு அடியாராக இருப்பவரை இறைவன் மிகவும் விரும்புவார். அவ்வாறு அடியார்க்கு அடியாராக இருப்பதன் ஏற்றத்தைத் திருமங்கையாழ்வார் புரிந்துகொண்டிருப்பதை அறிந்த சௌரிராஜப் பெருமாள், “ஆஹா! மந்திரத்தின் தாத்பரியத்தை நீங்கள் சரியாகப் புரிந்துகொண்டு விட்டீர்கள்!” என்று சொன்னார். மேலும், ஆழ்வாருக்கு விசேஷ கடாட்சம் செய்ய விழைந்த பெருமாள், அவருக்குத் தனது தசாவதாரத்தையும் காட்டியருளினார். முதலில் மீன் வடிவில் மத்ஸ்யாவதாரத்தை சௌரிராஜப் பெருமாள் காட்ட, அதைக் கண்ட திருமங்கையாழ்வார், “எம்பெருமானே! நீ மீனாக வந்தாலும், உனது திருக்கண்கள் மீனின் கண்களைப் போல் இல்லாமல் உனக்கே பிரத்தியேகமாய் உரித்தான தாமரைக் கண்களாகவே உள்ளனவே!” என வியந்து ஒரு பாடலைப் பாடினார்:“வானோர் அளவும் முதுமுந்நீர் வளர்ந்த காலம் வலியுருவின்மீனாய் வந்து வியந்துய்யக் கொண்ட தண்தாமரைக் கண்ணன்ஆனாவுருவில் ஆனாயன் அவனை அம்மாவிளை வயலுள்கானார் புறவில் கண்ணபுரத்து அடியேன் கண்டுகொண்டேனே!”இவ்வாறு மத்ஸ்யாவதாரம் தொடங்கி கல்கி அவதாரம் வரை இறைவன் காட்ட அதையெல்லாம் அநுபவித்த திருமங்கையாழ்வார்,“மீனோடு ஆமை கேழல் அரி குறளாய் முன்னும் இராமனாய்த்தானாய்ப் பின்னும் இராமனாய்த் தாமோதரனாய்க் கல்கியும்ஆனான் தன்னைக் கண்ணபுரத்து அடியன் கலியன் ஒலிசெய்ததேனார் இன்சொல் தமிழ்மாலை செப்பப் பாவம் நில்லாவே!” என்று துதி செய்தார்.மத்ஸ்யாவதாரத்தை அநுபவிக்கையில், “தண்தாமரைக் கண்ணன்” என்று திருமங்கையாழ்வார் குறிப்பிட்டது நோக்கத்தக்கது. இறைவன் எந்த ரூபத்தில் அவதாரம் செய்தாலும், அவனுக்கே உரிய பிரத்தியேகமான லட்சணமாகிய தாமரைக் கண்கள் மாறுவதே இல்லை. இதிலிருந்து நாம் உணர வேண்டியது யாதெனில், வைகுண்டத்திலுள்ள இறைவனுக்கு என்னென்ன பெருமைகளும் சக்திகளும் உள்ளனவோ, அதே பெருமைகளோடும் சக்திகளோடும் அவதாரங்களிலும் அவர் விளங்குகிறார் என்பதே. மீனாய் அவதரித்தபோதும், தனது பெருமைகள் குன்றாதபடி திகழ்ந்தமையால், மத்ஸ்யமூர்த்தி ஸ்ரீ மான்’ என அழைக்கப்படுகிறார். இங்கே ‘ஸ்ரீ என்பது மேன்மையைக் குறிக்கும். மீனாய்ப் பிறந்தாலும் மேன்மை குன்றாதவர் ஸ்ரீ மான். அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 222-வது திருநாமம். “ஸ்ரீ மதே நமஹ” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்களுக்கு வாழ்வில் எப்போதும் குன்றாத மேன்மைகள் நிறையும்படித் திருமால் அருள்புரிவார். (தொடர்ந்து நாமம் சொல்வோம்)திருக்குடந்தை டாக்ட ர்: உ.வே.வெங்கடேஷ்…
The post அனந்தனுக்கு 1000 நாமங்கள் ! appeared first on Dinakaran.