231. நிவ்ருத்தாத்மநே நமஹ (Nivrutthaathmane namaha)பிரம்மதேவரிடம் வரம் பெற்று, அதனால் வலிமையடைந்த இரணியன், தேவர்களைத் தொடர்ந்து துன்புறுத்தி வந்தான். பாற்கடலுக்குச் சென்ற தேவர்கள், இரணியனிடம் இருந்து தங்களைக் காத்தருளும்படி திருமாலிடம் வேண்டினர். “இரணியனை வதம் செய்வது அவ்வளவு எளிதல்ல! அவனுக்கு மனிதனாலோ மிருகத்தாலோ, பகலிலோ இரவிலோ, வீட்டின் உள்ளேயோ வெளியேயோ, மண்ணிலோ விண்ணிலோ, உயிருள்ள பொருளாலோ உயிரற்ற பொருளாலோ மரணம் உண்டாகக் கூடாதென பிரம்மாவிடம் அவன் வரம் பெற்றுள்ளான். எனவே இந்த வரங்களை எல்லாம் கடந்து அவனை எப்படி வதம் செய்வது என்பதைப்பற்றி முனிவர்களை அழைத்து ஆலோசனை நடத்த வேண்டும்!” என்றார் திருமால். அவ்வாறே தேவர்களும் ஆலோசனைக்காக முனிவர்களை அழைத்தனர். ஆனால், முனிவர்களோ, “பாற்கடலில் நாம் ஆலோசனை நடத்தினால், அச்செய்தி இரணியனின் காதுகளுக்குச் சென்று விடும். இரணியனின் தொந்தரவு இல்லாத இடத்தில் ஆலோசனை நடத்துவதானால் நாங்கள் வருகிறோம்!” என்று சொன்னார்கள்.முனிவர்களின் கருத்தை அறிந்து கொண்ட திருமால், சிவகங்கைக்கு அருகில் கதம்ப முனிவர் என்னைத் தரிசிக்க விரும்பித் தவம் இயற்றி வருகிறார். அவர் தன்னுடைய தவத்திற்கு அசுர சக்திகளால் எந்த விதமான தொந்தரவும் இருக்கக் கூடாது என்று வரம் பெற்றுள்ளார். எனவே, இரணியன் போன்ற அசுரர்கள் யாரும் அவ்விடத்துக்கு வரமாட்டார்கள். நாம் அந்தக் கதம்ப முனிவரின் ஆசிரமத்தில் ஆலோசனையை நடத்திக் கொள்ளலாம்!” என்று கூறினார். திருமால், தேவர்களோடும் முனிவர்களோடும் கோஷ்டியாக இணைந்து ஆலோசனை நடத்தியபடியால், ‘கோஷ்டீபுரம்’ என்று அவ்வூர் பெயர்பெற்றது. அதையே ‘திருக்கோஷ்டியூர்’ என்று தமிழில் அழைக்கிறோம்.அங்கு நடைபெற்ற ஆலோசனையின் முடிவில், தான் நரசிம்ம அவதாரம் எடுத்து இரணியனை அழிப்பது எனத் தீர்மானித்தார் திருமால். கழுத்துக்கு மேல் சிங்கமாகவும், கழுத்துக்குக் கீழ் மனிதனாகவும், பகல்-இரவு இரண்டுக்கும் இடைப்பட்ட அந்திப் பொழுதில் தோன்றி, வீட்டின் உட்புறம்-வெளிப்புறம் இரண்டுக்கும் இடைப்பட்ட நிலைப்படியில் இரணியனை வைத்து, மண்ணுக்கும் விண்ணுக்கும் இடையே தன் மடியில் வைத்து, உயிருள்ள பொருள் என்றோ உயிரற்ற பொருள் என்றோ வகைப்படுத்த முடியாத நகங்களால் கிழித்து இரணியனை வதம் செய்யப்போவதாகக் கூறினார்.“இறைவா! நீ எடுக்கப் போகின்ற அந்த அவதாரத்தை இப்போதே தரிசிக்க ஆவலாக உள்ளோம்!” என்று தேவர்களும் முனிவர்களும் கூறினார்கள். திருக்கோஷ்டியூரில் நீண்ட நாட்கள் திருமாலுக்காகத் தவம் செய்த கதம்ப முனிவரும் அதே கோரிக்கையை முன்வைத்தார். அதன்படி நரசிம்ம அவதாரம் நடைபெறுவதற்கு முன்பாகவே, இறைவன் திருக்கோஷ்டியூரில் தேவர்களுக்கும் முனிவர்களுக்கும் தன்னுடைய நரசிம்ம வடிவத்தைக் காட்டியருளினார்.அதுமட்டுமில்லாமல் மேலும் நான்கு வடிவங்களோடு அவர்களுக்குக் காட்சி அளிக்க விழைந்தார் திருமால். அதன்படி, பூலோகத்தில் அவதரித்த பெருமாளைக் குறிக்கும் வகையில் நர்த்தனக் கிருஷ்ணனாக நின்ற திருக்கோலத்தில் காட்சி அளித்தார். அடுத்து, பாற்கடலில் பள்ளி கொண்ட பெருமாளைக் குறிக்கும் வகையில் சௌமிய நாராயணனாக சயனத் திருக்கோலத்தில் காட்சி அளித்தார். அடுத்து, தேவலோகத்துப் பெருமாளைக் குறிக்கும் வகையில், உபேந்திரனாக நின்ற திருக்கோலத்தில் காட்சி அளித்தார். நிறைவாக, வைகுண்டத்திலுள்ள பெருமாளைக் குறிக்கும் விதமாக, பரமபதநாதனாக அமர்ந்த திருக்கோலத்தில் காட்சியளித்தார்.இன்றும் திருக்கோஷ்டியூர் பெருமாள் கோயிலில், விமானத்தின் தரைத்தளத்தில் நர்த்தனக் கிருஷ்ணனும் (பூலோகப் பெருமாள்), முதல் தளத்தில் சௌமிய நாராயணப் பெருமாளும் (பாற்கடல் பெருமாள்), இரண்டாம் தளத்தில் உபேந்திரனும் (தேவலோகப் பெருமாள்), மூன்றாம் தளத்தில் பரமபதநாதனும் (வைகுண்டப் பெருமாள்) காட்சி அளிப்பதைக் காணலாம்.கீழ்த்தளங்களில் பூலோகப் பெருமாள், பாற்கடல் பெருமாள், தேவலோகப் பெருமாள் ஆகிய திருக்கோலங்களில் காட்சி தந்துவிட்டு, அனைத்துக்கும் மேலாக மூன்றாம் தளத்தில் வைகுண்ட நாதனாகக் காட்சி தருவதன் மூலம், பூலோகம், பாற்கடல், தேவலோகம் இவை அனைத்தையும் விடத் தனது இருப்பிடமான வைகுண்டம் உயர்ந்தது என்பதைத் திருமால் நமக்கு உணர்த்துகிறார்.இவ்வாறு அனைத்துப் பொருட்களை விடவும் உயர்ந்து நிற்கும் தன்மையுடன் திகழ்வதால், திருமால் ‘நிவ்ருத்தாத்மா’ என்றழைக்கப்படுகிறார். ‘நிவ்ருத்தாத்மா’ என்றால் அனைத்தைவிடவும் உயர்ந்து நிற்பவர் என்று பொருள். அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 231-வது திருநாமம்.“நிவ்ருத்தாத்மனே நமஹ” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்கள் வாழ்வில் மேன்மேலும் உயர்ந்து விளங்கத் திருமால் அருள்புரிவார்.232. ஸம்வ்ருதாய நமஹ (Samvruthaaya namaha)திருவரங்கத்தில் ராமாநுஜர் வாழ்ந்து வந்த காலத்தில் ஒருநாள் அவரிடம் வந்த ஒரு நாத்திகர், “சுவாமி! நீங்கள் எதற்காக இறைவனை வணங்கும்படி எல்லோருக்கும் அறிவுறுத்துகிறீர்கள்? நான் தினமும் உழைக்கிறேன், அதற்கேற்ற ஊதியத்தைப் பெறுகிறேன். என் குடும்பத்தை என் உழைப்பால் நன்றாகப் பார்த்துக் கொள்கிறேன். இதற்குமேல் இறைவனின் அருள் எனக்குத் தேவையில்லையே! நான் ஏன் இறைவனை வழிபட வேண்டும்?” என்று கேட்டார்.அதற்கு ராமாநுஜர், “இனிமேல் நீங்கள் பெறப்போகின்ற செல்வத்துக்காகவோ, மகிழ்ச்சிக்காகவோ இறைவனை வழிபட வேண்டும் என்று நான் சொல்லவில்லை. ஆனால் இதுவரை நீங்கள் மகிழ்ச்சியாக இருக்கிறீர்கள் என்றால் அதற்கு இறைவனின் அருள் தான் காரணம்!” என்றார்.“எப்படி?” என்று கேட்டார் நாத்திகர்.“நீங்கள் தினமும் உழைக்கிறீர்கள் என்றால் உங்களது கை கால்கள் வலிமையாக இருப்பதால் தானே அது சாத்தியமாகிறது? உலகில் எத்தனையோ பேர் கை கால் ஊனமுற்றவர்களாக உள்ளார்களே! அப்படி இல்லாமல், உங்களுக்கு நல்ல உடல் உறுப்புகளையும், ஆரோக்கியத்தையும் இறைவன் தானே அருளியுள்ளார்? நீங்கள் வயலில் விதை விதைத்தாலும், சரியான நேரத்தில் மழை பொழிந்தால் தானே பயிர் விளையும்? அந்த மழையைச் சரியான நேரத்தில் தருபவர் இறைவன் தானே! உங்களுக்கு நிறைய வருமானம் கிடைத்தாலும், குடும்ப உறுப்பினர்களுக்குள்ளே மனஸ்தாபங்கள் ஏற்பட்டால், நிம்மதி இல்லாத நிலை ஏற்படுமே! எவ்வளவு செல்வம் இருந்தாலும், நிம்மதி இல்லாவிட்டால் பயனில்லை. அந்த நிம்மதியை உங்கள் குடும்பத்துக்குத் தந்தவன் இறைவன் தானே? இப்படி ஏற்கனவே இறைவன் நமக்குச் செய்த எத்தனையோ உதவிகளுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாகத்தான் அவரை நாம் வணங்க வேண்டும் என்றேனே ஒழிய, இனி அவரிடம் ஒன்றைப் பெறுவதற்காக அல்ல!” என்றார் ராமாநுஜர்.“அருமையான விளக்கம்! ஆனால் ஒருவர் நமக்குச் சிறிய உதவி செய்தால் கூட, அதைத் தான் செய்ததற்கு நிறைய விளம்பரங்கள் செய்வதைப் பார்க்கிறோம். இத்தனை உதவிகள் செய்த இறைவன் ஏன் அதை வெளிக்காட்டிக் கொள்வதில்லை? நாம் இறைவனைக் கண்ணால் காண இயலாதா?” என்று கேட்டார் நாத்திகர்.“சத்துவ குணம் நிறைந்த மனம் படைத்த ஞானியர்க்கு இறைவன் தன்னைக் காட்டியருளுவார். மற்றவர்களுக்கு இறைவன் மறைந்திருந்தபடியே அருள்புரிவார்!” என்று அதற்கு விடையளித்த ராமாநுஜர், அதை விளக்க ஒரு கதையும் சொன்னார்.ஒரு மகன் தன் தாய் தந்தையரிடம் சண்டையிட்டுக் கொண்டு வீட்டை விட்டு வெளியே சென்று, அவ்வூரிலுள்ள ஒரு சத்திரத்தில் தங்கினான். அன்றிரவு சத்திரத்தில் மோர்சாதம் அனைவருக்கும் பரிமாறப்பட்டது. ஆனால் இந்தப் பையனோ இரவில் இட்டிலி சாப்பிட்டே பழக்கப்பட்டவன். சத்திரத்தில் வழங்கப்பட்ட மோர் சாதத்தை அவன் உண்ண மறுத்துவிட்டான். தன் மகனின் குணத்தை அறிந்த அவனது தாய், ரகசியமாக இட்டிலியைத் தயார் செய்து அந்தச் சத்திரத்துக்கு எடுத்துச் சென்றாள். சத்திரத்திலுள்ள சமையல்காரரிடம், “என் மகனுக்கு இதைக் கொடுத்து விடுங்கள்! நான் நேரடியாகத் தந்தால், என் மீது உள்ள கோபத்தால் இதை அவன் சாப்பிடமாட்டான். எனவே நீங்கள் தருவது போல் அவனிடம் தந்துவிடுங்கள்!” என்று சொன்னாள் அந்தத் தாய்.“அதுபோலத் தான் இறைவனும். இறைவன் நமக்கெல்லாம் சுவாமி. நாம் அனைவரும் அவருக்குத் தொண்டர்கள். இந்த உறவு என்பது என்றும் மாறவே மாறாது. அவரது தொண்டர்களாகிய நாம் அவரை மறந்தாலும், நமது தலைவனாகிய இறைவன் இந்த உறவை மறப்பதில்லை. தன்மகன் தன்னை வெறுத்தாலும், தாய் அவனது இருப்பிடம் தேடிச் சென்று அவனுக்குப் பிடித்த உணவை அளிப்பது போல், இறைவனை நாம் வெறுத்தாலும் நமக்குரிய அனைத்து நன்மைகளையும் அவர் செய்கிறார். அந்தத் தாய் தன் அடையாளத்தை வெளிக்காட்டிக் கொள்ளாததைப் போலவே இறைவனும் தான் செய்த உதவியைப் பிரகடனப் படுத்திக் கொள்வதில்லை!” என்று விளக்கினார். நாத்திகர் மனம் மாறினார். “அப்படியானால், நான் என்ன செய்ய வேண்டும்?” என்று ராமாநுஜரிடம் கேட்டார். “அரங்கனே நம் அனைவருக்கும் தலைவன். நாம் அவனது தொண்டர்கள். நமக்கும் அவனுக்கும் இருக்கும் உறவை உணர்ந்து அவனது திருவடிகளில் சரணடையுங்கள்!” என்றார் ராமாநுஜர்.நமக்கு எத்தனைப் பேருதவிகள் செய்தாலும், தன்னை வெளிக்காட்டிக் கொள்ளாமல் இருப்பதால், திருமால் ‘ஸம்வ்ருத:’ என்றழைக்கப்படுகிறார். ‘ஸம்வ்ருத:’ என்றால் மறைந்திருப்பவர் என்று பொருள். அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 232-வது திருநாமம்.“ஸம்வ்ருதாய நமஹ” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்கள், திருமாலின் அன்புக்கும் அருளுக்கும் பாத்திரமாவார்கள்.233. ஸம்ப்ரமர்தனாய நமஹ (Sampramardhanaaya namaha) சத்தியலோகத்தில் உள்ள பிரம்மாவின் அவையில், முனிவர்களும் தேவர்களும் ஒன்று கூடி இருந்தனர். “மகாலட்சுமி உயர்ந்தவளா, அல்லது சரஸ்வதி உயர்ந்தவளா?” என்ற விவாதம் அவர்களுக்கு இடையே நடைபெற்று வந்தது. “பரம்பொருளான திருமாலுக்கே அந்தப் பரம்பொருள் என்னும் ஸ்தானத்தைத் தந்தவள் மகாலட்சுமி. எனவே மகாலட்சுமி தான் உயர்ந்தவள்!” என்று தீர்ப்பளித்தார் பிரம்மா. பிரம்மாவின் தீர்ப்பு சரஸ்வதிக்கு ஆத்திரத்தை உண்டாக்கியது.அடுத்தபடியாக, “நதிகளுள் எது உயர்ந்தது, கங்கா நதியா? சரஸ்வதி நதியா?” என்ற விவாதம் நடைபெற்றது. இந்த விவாதத்திலாவது, தனது அம்சமான சரஸ்வதி நதி உயர்ந்தது என்று பிரம்மா தீர்ப்பளிப்பார் எனக் கருதினாள் சரஸ்வதி. ஆனால், “மிகவும் புண்ணியம் தரவல்லதான கங்கையே சரஸ்வதியைக் காட்டிலும் உயர்ந்த நதியாகும்!” என்று தீர்ப்பளித்தார் பிரம்மா.இதனால் மேலும் வெகுண்ட சரஸ்வதி, “தேவதைகளிலும் நான் தாழ்ந்தவள், நதிகளிலும் நாம் தாழ்ந்தவள் என்று கருதும் உங்களுடன் வாழ எனக்கு விருப்பம் இல்லை!” என்று பிரம்மாவிடம் சொல்லிவிட்டுப் பிரிந்து சென்றுவிட்டாள்.இந்நிலையில், காஞ்சிபுரத்தில் ஒரு அஸ்வமேத யாகம் செய்ய ஏற்கனவே திட்டமிட்டிருந்தார் பிரம்மா. மனைவி அருகில் இல்லாமல் யாகம் செய்யக் கூடாது என்பதால், சரஸ்வதி இல்லாத நிலையில், தனது வேறு இரு மனைவியரான சாவித்திரி காயத்திரி இருவரோடும் இணைந்து அந்த யாகத்தைச் செய்தார் பிரம்மா.இதனால் கோபத்தின் உச்சத்துக்கே சென்றாள் சரஸ்வதி. யாகசாலைக்கு வந்து பிரம்மாவைப் பார்த்து, “இதுவரை என்னை அவமானப் படுத்தியது போதாது என்று இப்போது என்னைப் புறக்கணித்து விட்டு, சாவித்திரி காயத்திரியோடு இணைந்து யாகம் செய்கிறீர்களா? இந்த யாகம் எப்படி நடக்கிறது என்று நான் பார்க்கிறேன்!” என்று சவால் விட்டாள்.“திருமாலே! நான் ஒரு நல்ல நோக்கத்துக்காக இந்த யாகத்தைச் செய்கிறேன். இதற்கு சரஸ்வதியால் ஏற்படும் தடைகளிலிருந்து நீயே காத்தருள வேண்டும்!” என்று திருமாலிடம் மனமுருகி வேண்டினார் பிரம்மா. அந்தப் பிரார்த்தனையை ஏற்ற திருமால், சரஸ்வதி உண்டாக்கிய இடையூறுகளில் இருந்து வேள்வியைக் காத்தருளினார்.தனது பலவிதமான முயற்சிகளும் பயனின்றிப் போனதைக் கண்ட சரஸ்வதி, உலகையே இருளில் தள்ள எண்ணினாள். தனது சக்தியால் சூரியனும் சந்திரனும் தங்கள் ஒளியை இழக்கும்படிச் செய்தாள். உலகமே இருளில் மூழ்கிய நிலையில், யாகத்தைத் தொடர வழிதெரியாமல் தவித்தார் பிரம்மா. மீண்டும் திருமாலை உதவிக்கு அழைத்தார்.சித்திரை மாதம் சுவாதி நட்சத்திரத்தன்று, அவ்விடத்தில் ‘தீபப் பிரகாசன்’ என்ற பெயருடன் ஜோதி ரூபமாகத் திருமால் தோன்றி, தனது திருமேனியின் தேஜஸ்ஸையே உலகுக்கு ஒளியாகத் தந்து, யாகம் தொடர உதவினார். இதைக் கண்ட சரஸ்வதி, மாய நலன் என்ற அசுரனை உருவாக்கினாள். அக்கினி வடிவில் வந்த அந்த அசுரன், யாக சாலையை அழிக்கப் பார்த்தான். தனது ஒளியால் அந்த அசுரனை எரித்துச் சாம்பலாக்கினார் திருமால். சரஸ்வதி, பிரம்மா இருவரையும் அழைத்துப் பேசிச் சமாதானம் செய்து வைத்து, சரஸ்வதியும் பிரம்மாவுடன் சேர்ந்து யாகத்தில் பங்குகொள்ளும் படி அருள்புரிந்தார் திருமால்.இன்றும் காஞ்சிபுரத்திலுள்ள திருத்தண்காவில், தீபப் பிரகாசன் (விளக்கொளிப் பெருமாள்) என்ற பெயருடன், மரகதவல்லித் தாயாருடன் காட்சியளிக்கும் திருமாலைத் தரிசிக்கலாம். அதே திருத்தண்காவில் அவதரித்த வேதாந்த தேசிகன், விளக்கொளிப் பெருமாளைத் துதிக்கையில்,“தீபஸ்த்வமேவ ஜகதாம் தயிதா ருசிஸ்தேதீர்க்கம் தம: ப்ரதிநிவர்த்யம் இதம் யுவானாம் ஸ்தவ்யம் ஸ்தவப்ரியம் அத: சரணோக்தி வச்யம்ஸ்தோதும் பவந்தம் அபி லஷ்யதி ஜந்து: ஏஷ: ”என்று கூறுகிறார். அதாவது, பிரம்மாவின் வேள்விச் சாலையே இவ்வுலக வாழ்க்கை. பிரம்மா தான் ஜீவாத்மா. ஜீவாத்மாவின் ஆன்மிகப் பயணமே பிரம்மா செய்த அச்வமேத யாகம். பிரம்மாவின் யாகத்தை சரஸ்வதி தடுத்தது போல், ஒரு ஜீவாத்மா ஆன்மிகப் பயணத்தை மேற்கொள்ளும் போது, அவனது முன்வினைகள் அதற்குத் தடையாக வருகின்றன. அப்போது, மரகதவல்லித் தாயாரைத் தனக்கு ஒளியாகக் கொண்டு, விளக்காகத் தோன்றும் விளக்கொளிப் பெருமாள், ஜீவாத்மாவின் முன்வினைகள், அறியாமை ஆகிய இருளை எல்லாம் போக்கி, ஜீவாத்மாவின் ஆன்மிகப் பயணமென்னும் வேள்வி வெற்றிகரமாக நிறைவேற அருள்புரிகிறார்.‘மர்தன:’ என்றால் அழிப்பவர். நமது அறியாமை என்னும் இருளை அழிக்கும் விளக்காகத் திருமால் திகழ்வதால், ‘ஸம்ப்ரமர்தன:’ என்றழைக்கப்படுகிறார். அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 233-வது திருநாமம்.“ஸம்ப்ரமர்தனாய நம:” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்கள் வாழ்வில் புத்தொளி பெற்று விளங்கத் திருமால் அருள்புரிவார்.(தொடர்ந்து நாமம் சொல்வோம்)…
The post அனந்தனுக்கு 1000 நாமங்கள்! appeared first on Dinakaran.