
தனது ட்ரலாலா மூவிங் பிக்சர்ஸ் சார்பில் ‘மா இன்டி பங்காரம்’ என்ற தெலுங்கு படத்தை தயாரித்து, முக்கிய வேடத்தில் நடித்துள்ளார் சமந்தா. இதை பி.வி.நந்தினி ரெட்டி எழுதி இயக்கியுள்ளார். அதிரடி ஆக்ஷன் மற்றும் எமோஷன் கலந்து பெண்களை மையப்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள இப்படம், வரும் ஜூன் 19ம் தேதி திரைக்கு வருகிறது. இப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில் சமந்தா, அவரது காதல் கணவரும், இந்தி வெப்தொடர் இயக்குனருமான ராஜ் நிடிமோரு மற்றும் படக்குழுவினர் கலந்துகொண்டனர்.
விழா மேடையில் சமந்தாவுடன் ராஜ் நிடிமோரு ஏதோ ஒரு விஷயத்தை சுவாரஸ்யமாக பேசிக்கொண்டு இருந்தபோது, திடீரென்று மேடையில் ஏறிய ரசிகர் ஒருவர், சமந்தா முன்பு மண்டியிட்டு ஒரு ரோஜாப்பூவை கொடுத்து, ‘ஐ லவ் யூ’ என்று சொன்னார். அங்கு எதிர்பாராமல் நடந்த இச்செயலால் ஒரு கணம் சமந்தாவின் கணவர் முகம் மாறி பேச்சை நிறுத்தினார். சமந்தாவோ அந்த ரசிகரிடம் ரோஜாப்பூவை பெற்றுக்கொண்டு, அவருடன் சேர்ந்து செல்ஃபி எடுத்துக்கொண்டார். மேடையில் பார்வையாளர்கள் முன்னிலையில் சில விநாடிகளில் நடந்து முடிந்த இச்சம்பவம் வைரலாகி வருகிறது.

