×

நான் அவன் இல்லை இளம்பெண்ணுடன் இருக்கும் வீடியோ போலியானது: ரூ.100 கோடி கொடுத்து சிடி தயாரித்துள்ளனர்; யாரையும் விடமாட்டேன்; ரமேஷ் ஜார்கிஹோளி ஆதங்கம்

பெங்களூரு: இளம் பெண்ணுடன் உல்லாசமாக இருக்கும் வீடியோ 100 சதவீதம் போலியானது. அமைச்சர் பதவியில் இருந்து இறக்கவேண்டுமென்பதற்காக ரூ.100 கோடி செலவு செய்து சி.டியை தயாரித்து வெளியிட்டுள்ளனர். ஜோடிக்கப்பட்ட இந்த சி.டி விவகாரத்தில் தொடர்புடைய யாரையும் நான் விடுவதில்லை என்று முன்னாள் அமைச்சர் ரமேஷ் ஜார்கிஹோளி சபதமிட்டுள்ளார். கர்நாடக அரசில் நீர்பாசனத்துறை அமைச்சராக பொறுப்பு வகித்து வந்தவர் ரமேஷ் ஜார்கிஹோளி. கடந்த சில நாட்களுக்கு முன்பு இவர் இளம் பெண் ஒருவருடன் உல்லாசமாக இருந்த வீடியோ சமூக வலைத்தளம் மற்றும் மீடியாக்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக சமூக ஆர்வலர் ஒருவர் சி.டி ஆதாரங்களுடன் நகர போலீஸ் கமிஷனரிடம் புகார் அளித்தார். இந்த புகாரை ஏற்ற கமிஷனர் கப்பன்பார்க் போலீசாருக்கு இதை பரிந்துரை செய்தார். கப்பன்பார்க் போலீசார் வழக்கு பதிவு செய்து சமூக ஆர்வலர் தினேஷிடம் முதற்கட்ட விசாரணை நடத்தினர். அப்போது அவர் கொடுத்த தகவலை போலீசார் வாக்கு மூலமாக பெற்று கொண்டனர். ஆனால் ஒரு கேள்விக்கு கூட அவரிடம் முறையான பதில் இல்லை. சி.டியில் உள்ள பெண் எங்கே. அவரிடம் எப்படி சி.டியை வாங்கினீர்கள் என்பதற்கு பதில் இல்லை. இது தொடர்பாக மீண்டும் ஆஜராகி விளக்கம் அளிக்கவேண்டுமென்று போலீசார் தெரிவித்தனர். இதற்காக இரண்டாவது நோட்டீஸ் அனுப்ப திட்டமிட்டப்பட்டிருந்தது. இதற்கிடையில் ரமேஷ் ஜார்கிஹோளி மற்றும் அவரது சகோதரர்கள் இது திட்டமிட்ட செயல், அரசியல் பழிவாங்கும் நோக்கில் பணம் கொடுத்து இளம் பெண்ணை, எதிர்கட்சியினர் செட் செய்துள்ளனர் என்று குற்றம் சாட்டி வந்தனர். ஆனால் இதுவரை அவரது தரப்பில் அந்த பெண் மீது எந்தவிதமான புகாரும் அளிக்கப்படவில்லை. இதற்கிடையில் இரு தரப்பினருக்கு இடையில் மாட்டி கொண்ட போலீசார் சம்பந்தப்பட்ட பெண்ணை அழைத்து விசாரிக்க முடிவு செய்துள்ளனர். ஆனால் அவர் பெங்களூருவில் இல்லை என்பது உறுதியாகியுள்ளது. வெளி நாடுகளுக்கு தப்பி சென்றதாகவும், அங்கு அவருக்கு சொந்தமாக வீடு வாங்கி கொடுக்கப்பட்டிருப்பதாகவும் ரமேஷ் ஜார்கிஹோளி தரப்பினர் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றனர். போலீசார் தங்கள் தரப்பிற்கு ஒவ்வொரு விடுதிகளாக இளம் பெண்ணை தேடி அலைந்து வருகின்றனர். இந்நிலையில் வீடியோவில் உள்ள பெண் பிப்.16ம் தேதி ஆர்.டி நகரில் உள்ள தனியார் ஓட்டலுக்கு தனது நண்பருடன் சென்ற சி.சி.டி.வி கேமரா காட்சிகள் போலீசாருக்கு கிடைத்துள்ளது. அதில் வந்த நண்பர் இளம் பெண்ணின் செல்போன் மற்றும் அதில் இருக்கும் வீடியோ, ஆடியோவை பரிசோதனை செய்து, மீண்டும் அந்த பெண்ணிடம் கொடுப்பதுபோன்று காட்சிகள் பதிவாகியுள்ளது. இதனால் இந்த ஆபாச வீடியோ மிரட்டல் விவகாரத்தில் ஆண் நண்பருக்கு ஏதேனும் தொடர்பு இருக்குமோ என்று சந்தேகம் எழுந்துள்ளது. இது தொடர்பாக கப்பன்பார்க் மற்றும் சி.சி.பி போலீசார் இளம் பெண்ணுடன் சேர்ந்து, நண்பனையும் தேடி வருகின்றனர். இது தொடர்பாக நேற்று நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசிய முன்னாள் அமைச்சர் ரமேஷ் ஜார்கிஹோளி கூறும்போது; சி.டி வெளியாகுவது குறித்து 4 நாட்களுக்கு முன்பே எனக்கு தெரியும். இருப்பினும் அது போலியானது என்று தெரிந்ததால், அமைதியாக இருந்துவிட்டேன். சி.டியை வெளியிடுவது தொடர்பான பேச்சு வார்த்தை யஸ்வந்த்புரா மற்றும் ஹூலிமாவு பகுதியில் உள்ள தனியார் ஓட்டலில் வைத்து நடந்துள்ளது. இதனால் யார் யார் இதில் ஈடுபட்டுள்ளார்கள் என்பது எனக்கு தெரியும். ஆனால் அவர்கள் குறித்த விவரங்களை நான் வெளியிடவிரும்பவில்லை. ஏனென்றால் நான் ராஜ குடும்பத்தை சேர்ந்தவர், அமைச்சராக பதவி வகித்து இருக்கிறேன். எம்.எல்.ஏவாகவும் இருக்கிறேன். இது தவிர குடும்பத்தினர் மீது அதிகளவு மரியாதை வைத்துள்ளேன். என்னுடைய பெயருக்கு கலங்கம் விளைவித்தவர்களை நான் விடுவது இல்லை. திட்டமிட்டு வெளியிட்ட இந்த சி.டி.யில் இருப்பது நான் இல்லை என்பது நூற்றுக்கு நூறு உண்மை. அதை நான் விரைவில் நிரூபிப்பேன். அதே நேரம் இந்த சி.டியில் உள்ள பெண்ணை ஆள் வைத்து, தயார் செய்துள்ளனர். சி.டியை வெளியிடுவதற்காக ரூ.100 கோடி வரை செலவு செய்யப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட பெண்ணிற்கு வெளி நாட்டில் 2 அப்பார்ட்மெண்ட் மற்றும் ரூ.5 கோடி பணம் வழங்கப்பட்டுள்ளது. பெண்ணை தவிர 9 பேர் இந்த திட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். எனது வக்கீல் அவர்கள் பெயரை வெளியிடகூடாது என்று கூறியிருக்கிறார். அதனால் அமைதி காத்து வருகிறேன். ஏற்கனவே ஒருமூத்த அரசியல் வாதி ஒருவர், என்னை பார்த்து 3 மாதங்கள் கூட நான் அமைச்சர் பதவியில் இருக்கமாட்டேன் என்று சவால் விட்டார். அதேபோன்று நடத்தி காட்டிவிட்டார். 26 மணி நேரத்திற்கு முன்பே சி.டி விவகாரம் எனக்கு தெரிந்ததால், வெளியான அடுத்த சில மணி நேரத்தில் நானே எனது பதவியை ராஜினாமா செய்துவிட்டேன். இதில் மேலிட அழுத்தம் எதுவும் இல்லை. இருப்பினும் இந்த விவகாரத்தில் என்னை மாட்டிவிட்ட யாரையும் நான் விடுவது இல்லை. விரைவில் பழிவாங்குவேன் என்று ரமேஷ் ஜார்கிஹோளி தெரிவித்துள்ளார்….

The post நான் அவன் இல்லை இளம்பெண்ணுடன் இருக்கும் வீடியோ போலியானது: ரூ.100 கோடி கொடுத்து சிடி தயாரித்துள்ளனர்; யாரையும் விடமாட்டேன்; ரமேஷ் ஜார்கிஹோளி ஆதங்கம் appeared first on Dinakaran.

Tags : Naan Awan Alai ,Ramesh Jarkiholi Athangam ,BENGALURU ,Avan Alai ,Dinakaran ,
× RELATED கோவையில் கல்லூரி மாணவர்கள், இளைஞர்களை...