
கடந்த மார்ச் 30ம் ேததி ஜனனி அய்யருக்கும், அவரது காதலர் விமானி சாய் ரோஷன் ஷாமுக்கும் திருமணம் நடந்தது. பிறகு மாலத்தீவுக்கு ஹனிமூன் சென்றிருந்தனர். இந்நிலையில் ஜனனி அய்யர் கூறுகையில், ‘இவ்வருட தமிழ் புத்தாண்டு எங்களுக்கு ஒரு புதிய தொடக்கமாக அமைந்துள்ளது. எனது பெற்றோர்கள், தமிழ் புத்தாண்டுக்கு முதல் நாள் இரவே கடவுள் சிலையை வைத்து அலங்கரிப்பார்கள். மறுநாள் காலை அதை பார்த்த பிறகுதான் நாங்கள் கண் விழிப்போம். சாய் ரோஷன் ஷாமுடன் நான் கொண்டாடும் முதல் தமிழ் புத்தாண்டு இது என்பதால், எங்கள் கொண்டாட்டத்தில் இதையும் சேர்த்துக்கொள்ள போகிறேன்.
ஒவ்வொரு ஆண்டும் இருவரது பாரம்பரியத்தையும் நாங்கள் பின்பற்றுவோம். இப்போது நாங்கள் கணவன், மனைவி என்று நினைத்து பார்க்கும்போது ஆச்சரியமாக இருக்கிறது. எப்போதுமே அவர் எனக்கு தலைசிறந்த நண்பர்தான். திருமணமான புதிதில் வரும் பொறுப்புகளை உணர்ந்து அவற்றை ரசித்து மேற்கொண்டு வருகிறோம். திருமணத்தன்று எனது கழுத்தில் தாலி கட்டும்போது, திடீரென்று சாய் ரோஷன் ஷாம் கண்கலங்கி விட்டார். அதை பார்த்தால் நானும் அழுதுவிடுவேன் என்பதால், அவரை அழ வேண்டாம் என்று சொன்னேன். தமிழ் புத்தாண்டு, விஷு அடுத்தடுத்து வருவதால், இது எங்களுக்கு இரட்டை கொண்டாட்டமாக இருக்கிறது’ என்றார்.

