சென்னை: கடந்த 2005ம் ஆண்டு வெளிவந்த ‘சாந்த் ஸா ரோஷன் செஹ்ரா’ என்ற இந்தி திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார் தமன்னா. இந்தியில் அறிமுகமாகியிருந்தாலும், தென்னிந்திய சினிமாவில்தான் அவருக்கு அடுத்தடுத்து வெற்றிகள் கிடைத்தன. சினிமாவில் 21 ஆண்டுகளைக் கடந்திருக்கும் நிலையில், டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய தமன்னா, ‘‘எனது அனைத்து படங்களும் ஒவ்வொன்றாக வெளியாக இருப்பதை நினைத்து உற்சாகமாக இருக்கிறேன். சினிமாவுக்கு வந்து 21 ஆண்டுகள் ஆகிவிட்டாலும், ஒவ்வொரு முறையும் மீண்டும் புதிதாகத் தொடங்குவது போலவே உணர்கிறேன்.
அந்த அளவுக்கு பிசியாக இருக்கிறேன். ஆனால், பல நடிகைகளுக்கு இதுபோன்ற வாய்ப்பு கிடைப்பதில்லை. திரைத்துறையில் நடிகைகளுக்கு போதுமான வாய்ப்பு கிடைத்து அவர்களும் ஜொலிக்க வேண்டும் என விரும்புகிறேன். இந்தி சினிமாவாகட்டும் தென்னிந்திய சினிமாவாகட்டும் எனக்கு ரசிகர்களிடமிருந்து நிறைய அன்பு கிடைத்திருக்கிறது. அதை எப்படி திருப்பி கொடுப்பது என்பதுதான் தினமும் யோசிப்பேன். நல்ல படங்கள் மூலமாக அதை திரும்ப வழங்கி வருகிறேன். அதையே தொடர்ந்து செய்வேன்’’ என்றார்.
