×

உத்தரகாண்டின் அடுத்த முதல்வராகிறார் தீரத் சிங் ராவத் : மாலை 4 மணிக்கு பதவியேற்கிறார்!!

டேராடூன்: உத்தரகாண்டின் அடுத்த முதல்வராகிறார் தீரத் சிங் ராவத். உத்தரகாண்ட் மாநிலத்தில் கடந்த 2017ம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜ வெற்றி பெற்று முதல்வராக திரிவேந்திர சிங் ராவத் பதவியேற்றார். அடுத்த ஆண்டு அம்மாநிலத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடக்க உள்ள நிலையில், ராவத் தலைமை மீது மாநில பாஜ தலைவர்கள் சிலர் அதிருப்தி அடைந்தனர். உட்கட்சி பூசல் ஏற்பட்டதைத் தொடர்ந்து டெல்லி மேலிடத்திற்கு பல்வேறு புகார்கள் சென்றன. இதனால், பாஜ தேசிய நிர்வாகிகளான பொதுச் செயலாளர் துஷ்யந்த் கவுதம், துணைத் தலைவர் ராமன் ஆகியோர் உத்தரகாண்ட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு நிலைமையை ஆய்வு செய்த அவர்கள் பாஜ மேலிடத்திற்கு அறிக்கை அளித்தனர். அதன்படி, உத்தரகாண்ட்டுக்கு புதிய முதல்வரை நியமிக்க பாஜ முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகின. அதற்கேற்ப நேற்று முன்தினம் டெல்லி சென்ற முதல்வர் ராவத், பாஜ தேசிய தலைவர் ஜே.பி.நட்டா உள்ளிட்ட மேலிட தலைவர்களை சந்தித்து பேசினார்.இந்த பரபரப்பான சூழலில் நேற்று டேராடூன் திரும்பிய ராவத் தனது பதவியை ராஜினாமா  செய்தார். தனது ராஜினாமா கடிதத்தை மாநில ஆளுநர் ராணி மவுரியாவிடம் அளித்தார். இதையடுத்து டேராடூனில் உள்ள கட்சி அலுவலகத்தில் இன்று காலை, அடுத்த முதல்வர் யார் என்பது தொடர்பாக அம்மாநில எம்எல்ஏக்கள் முக்கிய ஆலோசனை நடத்தினர். ஹரித்வார் எம்.பி., ரமேஷ் பொக்ரியால், நயினிடால் எம்.பி. அஜய் பட், மாநில சுற்றுலா அமைச்சர் சத்பால் மஹாராஜ், ராஜ்யச்பா எம்.பி. அனில் பலூனி, உயர் கல்வி அமைச்சர் தன்சிங் ராவத் ஆகியோர் முதல்வர் பட்டியலில் இருந்தனர்.இந்நிலையில், உத்தரகாண்டின் அடுத்த முதல்வராக தீரத் சிங் ராவத் ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.56 வயதான தீரத் சிங் ராவத் பாஜக எம்.பி.யாக இருந்தவர். இவர், கடந்த 2013 முதல் 2015 வரை உத்தரகாண்ட் மாநில பாஜக தலைவராக இருந்தவர்.உத்தரகாண்டின் அடுத்த முதல்வராக தீரத் சிங் ராவத் அவர்களுக்கு இன்று மாலை 4 மணிக்கு பதவிப் பிரமாணம் செய்து வைக்கப்படுகிறது….

The post உத்தரகாண்டின் அடுத்த முதல்வராகிறார் தீரத் சிங் ராவத் : மாலை 4 மணிக்கு பதவியேற்கிறார்!! appeared first on Dinakaran.

Tags : deerat sing rawat ,uttarakhand ,Deeradoon ,Deerath Singh Rawat ,Uttarakandh ,
× RELATED உத்தரகாண்ட் தேசிய நெடுஞ்சாலை தப்ரானி...