×

விடுதலை போர் ஆவணத்தில் எந்த தலைவரின் பெயரும் விடுபடக் கூடாது: ராமதாஸ் வலியுறுத்தல்

சென்னை: பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வெளியிட்ட அறிக்கை:  இந்திய விடுதலைப் போராட்டத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்த தலைவர்களின் பங்களிப்பு குறித்த முழுமையான ஆவணம் ஒன்றை தமிழக அரசு தமிழிலும், ஆங்கிலத்திலும் தயாரிக்கும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருக்கிறார். இது கண்டிப்பாக செய்ய வேண்டிய பணி என்பதில் எந்த ஐயமும் இல்லை; ஆனால், அதில் எந்த தலைவரின் பெயரும் விடுபடாமல் இருக்க வேண்டும் என்பதுதான் மிகவும் முக்கியமாகும். முதல்வர் ஸ்டாலினின் சுதந்திர தின உரையில் மாயூரம் நாகப்பன் படையாட்சி, சர்தார் ஆதிகேசவலு நாயக்கர், காந்தவராயன், சேந்தவராயன், தீரர் சத்தியமூர்த்தி, கண்ணியமிகு காயிதே மில்லத், வ.வே.சு அய்யர் உள்ளிட்ட தலைவர்கள் இந்திய விடுதலைக்கு ஆற்றிய பங்கை எவராலும் மறுக்க முடியாது. ஆனால், இவர்களின் பெயர்கள் இடம்பெறவில்லை.இவர்களை போலவே பகதூர் வெள்ளையத்தேவன், வீரன் அழகு முத்துக்கோன், வீரத்தாய் குயிலி, விருப்பாட்சி கோபால நாயக்கர், தியாகி சீனிவாசராவ், தியாகி விஸ்வநாத தாஸ், கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத், ரெபல் முத்துராமலிங்க சேதுபதி, ஜெய்ஹிந்த் செண்பகராமன், தீரர் சத்தியமூர்த்தி ஆகியோரும் இந்திய விடுதலைக்காக செய்த தியாகங்கள் ஏராளம். தமிழக அரசின் சார்பில் தயாரிக்கப்பட உள்ள இந்த வரலாற்று ஆவணத்தில் இந்த தலைவர்கள் உள்ளிட்ட விடுதலைக்காக போராடிய அனைத்து தலைவர்களின் பங்களிப்புகளும் பதிவு செய்யப்பட வேண்டும். இவர்களில் மாயூரம் நாகப்பன் படையாட்சி, சர்தார் ஆதிகேசவலு நாயக்கர் உள்ளிட்ட எந்தெந்த தலைவர்களுக்கெல்லாம் தமிழ்நாட்டில் நினைவிடங்கள் அமைக்கப்படவில்லையோ, அவர்கள் அனைவருக்கும் நினைவிடங்கள், உருவச்சிலைகள் போன்றவற்றை அமைத்து அவர்களை பெருமைப்படுத்துவதற்கும் அரசு முன்வர வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது….

The post விடுதலை போர் ஆவணத்தில் எந்த தலைவரின் பெயரும் விடுபடக் கூடாது: ராமதாஸ் வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Ramadoss ,Chennai ,B.M.K. ,Tamil Nadu ,Dinakaran ,
× RELATED முல்லை பெரியாறு அணை தொடர்பான கூட்டம் ரத்து: அன்புமணி ராமதாஸ் வரவேற்பு