புதுடெல்லி: ‘நீதிபதிகளுக்கு பாதுகாப்பு இல்லை. வாட்ஸ் அப், பேஸ்புக் மூலம் மிரட்டல்கள் வருவது அதிகரித்து வருவது கவலை அளிக்கிறது. இதுபோன்ற சம்பவங்கள் பற்றி புகார் அளிக்கும் சுதந்திரம் கூட நீதிபதிகளுக்கு இல்லை,’ என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரமணா வேதனை தெரிவித்துள்ளார்.ஜார்க்கண்ட் மாநிலத்தில் மாவட்ட நீதிபதி உத்தம் ஆனந்த் (49) கடந்த வாரம் ஆட்டோ ஏற்றி படுகொலை செய்யப்பட்டார். காலையில் நடைபயிற்சி சென்ற அவரை ஆட்டோவை மோதி கொலை செய்யும் பதறவைக்கும் சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தை தொடர்ந்து, நீதிபதிகளின் பாதுகாப்பு தொடர்பாக உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கு தொடுத்துள்ளது. இந்த வழக்கு தலைமை நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது.அப்போது, தலைமை நீதிபதி ரமணா கூறியதாவது:பல்வேறு கிரிமினல் வழக்குகளில், அதில் தொடர்புடைய ரவுடி கும்பலை சேர்ந்தவர்கள், அதிகாரம்மிக்க நபர்கள் உள்ளிட்ட பல இடங்களில் இருந்து கீழ் நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்ற நீதிபதிகளுக்கு மிரட்டல்கள் வருகின்றன. செல்போன் மூலமும் வாட்ஸ்அப், பேஸ்புக் போன்ற சமூக வலைதளங்கள் மூலம் மிரட்டப்படுகின்றனர். மன ரீதியாக உளைச்சலை ஏற்படுத்துகின்றனர். இந்த போக்கு அதிகரித்து வருகிறது.இதில் ஓரிரு சம்பவங்களில் சிபிஐ விசாரணைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆனால், ஓராண்டுக்கு மேலாகியும் சிபிஐ எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதை கூறுவதில் மிகவும் வேதனைப்படுகிறேன். எந்த இடத்திலும், சிபிஐ எங்களுக்கு உதவவில்லை. சிபிஐ.யின் இந்த போக்கு மாறிவிடும் என நாங்கள் கருதினோம். ஆனால், மாறவில்லை. இதுதான் இன்றைய நிலைமை. எங்களுக்கு எந்த பாதுகாப்பும் இல்லை என புகார் அளிக்கும் சுதந்திரம் கூட நீதிபதிகளுக்கு இல்லை. அதுபோன்ற ஒரு சூழல் உருவாக்கப்பட்டுள்ளது. இதனை நான் பொறுப்புணர்வோடு தான் சொல்கிறேன். இதற்கு மேலேயும் இதுபற்றி நான் பேச விரும்பவில்லை. இதில் ஏதாவது செய்தாக வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.மேலும், நீதிபதிகளுக்கு என்ன மாதிரியான பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது, அவற்றின் நிலை குறித்து ஒன்றிய அரசு அறிக்கை தர உத்தரவிட்டு வழக்கை ஒரு வாரத்துக்கு தலைமை நீதிபதி ஒத்திவைத்தார்….
The post வாட்ஸ்அப், பேஸ்புக் மூலம் மிரட்டல் நீதிபதிகளுக்கு பாதுகாப்பு இல்லை: உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி வேதனை appeared first on Dinakaran.
