×

கணவருக்கு ரூ.25 கோடி ஜீவனாம்சம் கொடுத்த ஜெசிகா ஆல்பா: ஹாலிவுட்டில் பரபரப்பு

லாஸ் ஏஞ்சல்ஸ்: பிரபல ஹாலிவுட் நடிகை ஜெசிகா ஆல்பா தனது கணவரிடமிருந்து முறைப்படி விவாகரத்து பெற்று பிரிந்துள்ளார். ஹாலிவுட் நடிகை ஜெசிகா ஆல்பாவும் அவரது கணவர் கேஷ் வாரனும் காதலித்து திருமணம் செய்து கொண்டு கடந்த 18 ஆண்டுகளாக வாழ்ந்து வந்த நிலையில், கடந்த 2024ம் ஆண்டு இறுதியில் அவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்தனர். அதன் தொடர்ச்சியாக கடந்த ஒரு ஆண்டிற்கு முன்பு ஜெசிகா ஆல்பா நீதிமன்றத்தில் விவாகரத்து கோரி மனு தாக்கல் செய்திருந்தார். இந்த தம்பதியினருக்கு 17, 14 மற்றும் 8 வயதில் மூன்று குழந்தைகள் உள்ளனர். விவாகரத்து நடைமுறைகள் நடந்து வந்த போதிலும், அவர்கள் குழந்தைகளுக்காக அவ்வப்போது சந்தித்து தங்களது நட்பை தொடர்ந்து வந்தனர். இந்நிலையில் இந்த விவாகரத்து வழக்கில் நேற்று முன்தினம் இறுதி தீர்ப்பு வழங்கப்பட்டது.

இதன்படி பரஸ்பரம் சம்மதத்துடன் இருவரும் பிரிய முடிவெடுத்துள்ள நிலையில், கணவர் கேஷ் வாரனுக்கு 30 லட்சம் டாலர் அதாவது இந்திய மதிப்பில் சுமார் 25 கோடி ரூபாயை ஜெசிகா ஆல்பா வழங்க ஒப்புக் கொண்டுள்ளார். இந்த தொகையை இரண்டு தவணைகளாக வழங்கவும், இருவருக்குள்ளும் எதிர்காலத்தில் ஜீவனாம்சம் கோரக்கூடாது என்றும் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. தங்களது மூன்று குழந்தைகளையும் இருவரும் இணைந்து வளர்க்க நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. மேலும் தனது பெயருக்கு பின்னால் இருந்த கணவரின் பெயரான ‘வாரன்’ என்பதை நீக்கிவிட்டு தனது பழைய பெயரையே பயன்படுத்தவும் ஜெசிகா ஆல்பா அனுமதி பெற்றுள்ளார். தற்போது இருவரும் தனித்தனியாக புதிய வாழ்க்கையைத் தொடங்கி வேறு நபர்களுடன் காதலில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது.

Tags : Jessica Alba ,Hollywood ,Los Angeles ,Cash Warren ,
× RELATED மீண்டும் கீது இயக்கத்தில் கியாரா