×

ஆபாச வார்த்தைகள் திருமணத்துக்கு வற்புறுத்தல்; 3 ஆண்டுகளாக டார்ச்சர் கொடுக்கும் இரட்டையர்கள்: ரவீனா திடுக் புகார்

சென்னை: தமிழ் படவுலகில் முன்னணி டப்பிங் கலைஞரான ஸ்ரீஜா ரவியின் மகள் ரவீனா ரவி. டப்பிங் கலைஞரான ரவீனா ரவி தற்போது நடிகையாக மாறி ‘லவ் டுடே’, ‘மாமன்னன்’, ஒரு கிடாயின் கருணை மனு உள்பட பல படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில், தனது சோஷியல் மீடியாவில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், கடந்த 3 ஆண்டுகளாக வாலிபர் ஒருவர் அவரையும், அவரது குடும்பத்தினரையும் தொடர்ந்து தொந்தரவு செய்து வருவதாக தெரிவித்து அந்த நபரின் புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள பதிவில், ‘‘இந்த தொந்தரவு தொடர்பாக, காவல் துறையில் புகார் அளித்து, கடந்த 3 ஆண்டுகளாக அமைதியாக இருந்து, எச்சரிக்கைகள் வழங்கப்பட்டாலும், சபரிஷ் என்ற நபரும் அவரது இரட்டை சகோதரரும் தொடர்ந்து என்னை மட்டுமின்றி, எனது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களை ஆன்லைனில் துன்புறுத்தி வருகிறார்கள். அவர்கள் அனுப்பும் குறுஞ்செய்திகள் மற்றும் கமென்ட்டுகளில் மிகவும் அருவருப்பான, அவதூறான, ஆபாச வார்த்தைகள் பயன்படுத்தப்படுகிறது.

இதனால் என் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் இதுபோன்ற இக்கட்டான சூழலை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. அந்த நபர் மீது சட்டபூர்வமான நடவடிக்கை எடுக்க முயன்ற போதிலும், இந்த தொந்தரவு இன்னும் நிறுத்தப்படவில்லை. அந்த நபர் பல்வேறு சமூக வலைதள கணக்குகளை பயன்படுத்தி, என்னை மட்டுமின்றி பிற நடிகைகள் மற்றும் கலைஞர்களையும் தொடர்ந்து பின்தொடர்ந்து தொந்தரவு செய்து வருகிறார்.

மேலும், ‘ஏற்கனவே சந்தித்தோம்’, ‘திருமணம் நிச்சயிக்கப்பட்டது’ போன்ற கற்பனை கதைகளை உருவாக்கி, பெண்களை மனதளவில் அச்சுறுத்தும் வகையில் செயல்படுகிறார். இந்நிலையில், இனி மவுனம் காக்க முடியாது என்பதால், இந்த பிரச்னையை பொதுமக்கள் கவனத்திற்கு கொண்டு வருகிறேன். பொதுமக்கள் பின்வரும் நடவடிக்கைகளை செய்ய வேண்டுகிறேன்:

அந்த நபர் மற்றும் அவரது சகோதரரின் சோஷியல் மீடியா கணக்குகளை பிளாக் மற்றும் புகார் செய்யுங்கள். அவர்களிடமிருந்து எந்தவித குறுஞ்செய்தி வந்தாலும் எச்சரிக்கையாக இருங்கள். அவர்களின் கருத்துக்கள் அல்லது செய்திகளுக்கு பதிலளிக்க வேண்டாம். பெண்களுக்கு பாதுகாப்பான நகரமாக சென்னை உள்ளது.

அனைவருக்கும் இந்த நகரம் உண்மையில் பாதுகாப்பானது என்பதை நிரூபிக்கும் வகையில், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இப்படிப்பட்ட நபர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுப்பார்கள் என்று நம்புகிறேன்’’ என்று ரவீனா ரவி தெரிவித்துள்ளார். இந்த பதிவை தமிழக முதல்வர், காவல்துறை, சைபர் கிரைம் ஆகியோரை டேக் செய்து ரவீனா பதிவிட்டுள்ளார். ரவீனாவுக்கு கடந்த 3 ஆண்டுகளாக இதுபோன்ற அச்சுறுத்தல் இருப்பது சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags : Raveena Tiduk ,Chennai ,Raveena Ravi ,Srija Ravi ,
× RELATED சிரஞ்சீவியை சாடிய சின்மயி