×

அரியலூர் மாவட்டத்தின் குறியீடாக பட்டுப்புடவை உற்பத்தியை உருவாக்க வேண்டும்

அரியலூர் : அரியலூர் மாவட்டம், செந்துறை ஒன்றியத்திற்குட்பட்ட நல்லாம்பாளையம் மற்றும் உஞ்சினி ஊராட்சிகளில் தொடக்க பருத்தி மற்றும் பட்டு கைத்தறி நெசவாளர் கூட்டுறவு உற்பத்தி மற்றும் விற்பனை சங்கத்தின் மூலம் பட்டு புடவைகள் உற்பத்தி மற்றும் விற்பனை செய்யப்படுவதையும், உஞ்சினி கிராமத்திலிருந்து கீழராயம்புரம் வரை பிரதம மந்திரி கிராம சாலை அபிவிருத்தி திட்டத்தின்கீழ் அமைக்கப்பட்டு வரும் சாலை மற்றும் பாலம் அமைக்கும் பணிகளையும், சிறுகம்பூர் ஊராட்சியில் மகளிர் சுயஉதவிக் குழுவினர் மூலமாக பனை ஓலைகளால் உற்பத்தி செய்யப்படும் கைவினைப்பொருட்கள் குறித்தும் கலெக்டர் ரமண சரஸ்வதி, நேற்று (28ம் தேதி) நேரில் பார்வையிட்டு, ஆய்வு செய்தார்.அப்போது, உஞ்சினி மற்றும் நல்லாம்பாளையம் கிராமங்களில் மகளிர் சுயஉதவிக்குழுவினர் மூலமாக தங்களது இல்லங்களில் உற்பத்தி செய்யப்பட்டு வரும் பட்டுப்புடவைகள் குறித்து ஆய்வு செய்த கலெக்டர் காஞ்சிபுரம், கும்பகோணம், திருபுவனம் உள்ளிட்ட நகரங்களுக்கு இணையாக அரியலூர் மாவட்டத்தில் உற்பத்தி செய்யப்படும் பட்டுப்புடவைகளின் தரத்தை மேம்படுத்திடவும், இங்கு உற்பத்தி செய்யப்படும் பட்டுப் புடவைகளை மாநில அளவில் விற்பனை செய்வதற்கு தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கத்தின் மூலம் சிறப்பு ஏற்பாடுகளை மேற்கொள்ளவும் அறிவுறுத்தினார்.மேலும், தினக்கூலி அடிப்படையில் நெசவு தொழிலில் ஈடுபட்டு வரும் மகளிர் சுயஉதவிக்குழுவினரை சார்ந்த மகளிர் அனைவரும் சுயமாக தொழில் தொடங்கி, தாமாகவே பட்டுப்புடவை உற்பத்தி தொழிலில் ஈடுபட அவர்களுக்கு தேவையான முதலீடுகளை ஏற்பாடு செய்வதற்கும் தொடர்புடைய அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். மேலும், பட்டுப்புடவைகளை உலக தரத்திற்கு உற்பத்தி செய்து, அரியலூர் மாவட்டத்தின் குறியீடாக பட்டுப்புடவை உற்பத்தியை உருவாக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார். அதனைத்தொடர்ந்து, உஞ்சினி குழுகூட்டமைப்பு மூலம் 7 குழுக்களைச் சேர்ந்த 57 நபர்களுக்கு ரூ.8.லட்சத்து 50 ஆயிரம் மதிப்பிலான கடனுதவிக்கான காசோலைகளை கலெக்டர் வழங்கினார்.மேலும், செந்துறை ஒன்றியத்தில் ஊரக வளர்ச்சி முகமையின் சார்பில் பிரதம மந்திரியின் கிராம சாலை அபிவிருத்தித் திட்டத்தின்கீழ் உஞ்சினி முதல் கீழராயம்புரம் வரை 3.22 கி.மீட்டர் நீளத்திற்கு ரூ.1.22 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு வரும் தார்சாலை பணிகளையும், 3 சிறுபாலம் அமைக்கும் பணிகளையும் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அதனைத்தொடர்ந்து, சிறுகடம்பூர் ஊராட்சியில் மகளிர் சுயஉதவிக்குழுவினர் மூலமாக பனை ஓலைகளிலிருந்து உற்பத்தி செய்யப்பட்டு, வைக்கப்பட்டுள்ள கைவினைப் பொருட்களை பார்வையிட்டார். இவ்வழகு சாதனபொருட்களை அதிக அளவு சந்தைப்படுத்துவதற்கான வாய்ப்புகளை மகளிர் சுயஉதவிக்குழுவினருக்கு ஏற்படுத்தி தர தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்க அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். எனவே, கிராமப்புறங்களின் பொருளாதார மேம்பாட்டில் முக்கிய பங்கு வகிக்கும் பெண்கள் அனைவரும் இதுபோன்ற தொழில்களை கற்று தங்கள் வாழ்வில் முன்னேற்றம் அடைய வேண்டும் என கலெக்டர் தெரிவித்தார். ஆய்வின்போது, திட்ட அலுவலர் (மகளிர்திட்டம்) செல்வராசு, செயற்பொறியாளர் ராஜராஜன், உதவி செயற்பொறியாளர் சீதாலெட்சுமி, வட்டார வளர்ச்சி அலுவலர் சிவாஜி, உதவிப் பொறியாளர்கள் வைதேகி, சுமதி மற்றும் அரசு அலுவலர்கள், ஊராட்சி மன்றத் தலைவர்கள் உடனிருந்தனர்….

The post அரியலூர் மாவட்டத்தின் குறியீடாக பட்டுப்புடவை உற்பத்தியை உருவாக்க வேண்டும் appeared first on Dinakaran.

Tags : Ariyalur district ,Ariyalur ,Nallampalayam ,Unjini Puradhika ,Chendurai Union ,Dinakaran ,
× RELATED விவசாயிகளுக்கு நெல்வயல்களில் களர்...