×

கோயில் நிலங்கள் ஆக்கிரமிப்பு குறித்த முழுமையான விவரங்களை அனுப்ப வேண்டும்: அதிகாரிகளுக்கு அறநிலையத்துறை ஆணையர் உத்தரவு

சென்னை:  இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் குமரகுருபரன் அனைத்து இணை ஆணையர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: கோயில் நிலங்கள் ஆக்கிரமிப்பு தொடர்பான சீராய்வு மனுக்களின் மீதான விசாரணையின் போது இணை ஆணையர்கள், அலுவலக கோப்புகளை பரிசீலனை செய்யும்போது உதவி ஆணையர்கள் ஒவ்வொருவரும் அவரவருக்கு ஏற்ப படிவம் ஏற்படுத்திக் கொண்டு ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள இடத்தினை நேரில் ஆய்வு செய்து ஆக்கிரமிப்பு குறித்து முழுமையான விவரங்கள் இன்றி அறிக்கை அனுப்பி வருவது தெரிய வருகிறது. எனவே உதவி ஆணையர்கள், இணை ஆணையருக்கு அனுப்பும் அறிக்கையில் ஒரு ஒழுங்குமுறை ஏற்படுத்த வேண்டியது அவசியமாகிறது. எனவே, உதவி ஆணையர்கள் சட்டப்பிரிவு 78 மற்றும் 80ல் நடவடிக்கை மேற்கொள்ள இணை ஆணையருக்கு அனுப்பும் அறிக்கையில் சமய நிறுவனத்தின் பெயர், கிராமம், ஊர், வட்டம், மாவட்டம், சொத்தின் வகைப்பாடு, பரப்பளவு, சொத்தின் நான்கு எல்லை விவரங்கள், குத்தகை அல்லது வாடகை பத்திரம் எழுதி பதிவு செய்யப்பட்ட விவரம் உள்ளிட்ட விவரங்கள் கண்டிப்பாக குறிப்பிட வேண்டும். அதற்கான ஆதாரங்கள் குறித்த ஆவணங்கள் கட்டாயம் இணைக்கப்பட வேண்டும்.உதவி ஆணையரின் அறிக்கையை பரிசீலித்து கோயில் சொத்தில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது என்பதற்கு முகாந்திரங்கள் இருப்பின் கோயில் ஆவணத்தில் குறிப்பிட்டுள்ள குத்தகைதாரருக்கும், தற்போது அனுபவித்து வரும் நபருக்கும் உரிய படிவத்தில் விசாரணை அறிவிப்பு அனுப்பப்பட வேண்டும். இணை ஆணையர்கள் சட்டப்பிரிவு 78 மற்றும் 80ல் விசாரணையை துவங்கி நடத்தும் போது மனுதாரரான கோயில் நிர்வாகம் மூலம் சாட்சிகளை விசாரணை செய்தும், சொத்து குறித்து தாக்கல் செய்யப்படும் ஆவண ஆதாரங்களை குறியீடு செய்தும், ஆக்கிரமிப்பாளருக்கு போதுமான சந்தர்ப்பம் அளித்து குறுக்கு விசாரணை செய்தும் தாக்கல் செய்யப்படும். குத்தகையில் உள்ள நபர்களுக்கு சொத்து குத்தகைக்கு விடுவதற்கு முன் அதன் கலையழகோடு கூடிய தோற்றம் அல்லது சமயச் சூழல் எவ்வாறு இருந்தது என்பதையும் பின்பு எவ்விதம் அதன் கலையழகோடு கூடிய தோற்றம் அல்லது சமயச் சூழல் குத்தகைதாரரால் பாழ்பட்டிருக்கிறது என்பதற்கான சரியான ஆதாரத்தையும் உதவி ஆணையர்கள் தங்கள் அறிக்கையில் கண்டிப்பாக குறிப்பிட வேண்டும். இணை ஆணையர்களால் பிறப்பிக்கப்படும் உத்தரவுகள் விரிவானதாக இருக்க வேண்டும். அதில், ஆக்கிரமிப்புதாரர் என முடிவு செய்தமைக்கு ஆதாரமான ஆவணங்கள் மற்றும் சாட்சியங்கள் விரிவாக அலசப்பட்டு உரிய காரணங்கள் தெரிவிக்கப்பட வேண்டும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது….

The post கோயில் நிலங்கள் ஆக்கிரமிப்பு குறித்த முழுமையான விவரங்களை அனுப்ப வேண்டும்: அதிகாரிகளுக்கு அறநிலையத்துறை ஆணையர் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Commissioner ,Endowments ,Department ,Chennai ,Hindu Religious Endowments ,Kumaragurubaran ,
× RELATED சட்டவிரோத குடிநீர் இணைப்பு: கோவை ஆணையர் எச்சரிக்கை