×

முறைகேடுகளை விசாரிக்கும் வகையில் ஆவின் அதிகாரிகள் 34 பேர் பணியிட மாற்றம்: நிர்வாகம் அதிரடி உத்தரவு

சென்னை: தமிழகம் முழுவதும்  பல்வேறு இடங்களில் ஆவினில் பணியாற்றி வரும் அதிகாரிகள் 34 பேரை பணியிட மாற்றம் செய்து ஆவின் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. கடந்த அதிமுக ஆட்சியில் பால்வளத்துறையில் பல நூறு கோடி ரூபாய்க்கு மேல் முறைகேடுகள் நடைபெற்றுள்ளது. அதேபோன்று பணி நியமனங்களிலும் முறைகேடுகள் நடந்திருக்கிறது. எனவே, உரிய விசாரணை நடத்த வேண்டும் என்று ஆவின் நிர்வாக ஊழியர்கள் மற்றும் பல்வேறு அமைப்பினர் கோரிக்கை விடுத்தனர்.  இதையடுத்து பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் உத்தரவின்பேரில் நிர்வாக இயக்குனர் கந்தசாமி ஆவினுக்கு ஆண்டுக்கு சுமார் ரூ.18 கோடி வரை இழப்பை ஏற்படுத்தி வந்த ஏஜென்ட் முறையை ரத்து செய்து உத்தரவிட்டதோடு, பலகோடி ரூபாய் லஞ்சம் பெற்றுக்கொண்டு நடைபெற்ற பணி நியமனங்களை ரத்து செய்தார். மேலும், அது தொடர்பான முறைகேடுகள் குறித்தும் விசாரணைக்கும் உத்தரவிட்டார். ஆவின் நிறுவனத்தில் நடைபெற்று வந்த முறைகேடுகளை விசாரிக்கும் வகையில் ஆவின் வரலாற்றிலேயே முதன் முறையாக 34 பொது மேலாளர்களை கூண்டோடு பணியிட மாற்றம் செய்து உத்தரவிடப்படுள்ளது. இதனை பால் முகவர்கள் சங்கம் வரவேற்றுள்ளது. முறைகேடுகள் குறித்து எந்த ஒரு இடையூறும் இல்லாமல் விசாரித்து நடவடிக்கை எடுக்கப்பட முறைகேடுகளில் தொடர்புடைய அனைத்து அதிகாரிகளையும் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட வேண்டும். தவறு செய்தவர்கள் எவராயினும் அவர்கள் தண்டிக்கப்பட வேண்டுமானால் முதலில் பணி நீக்கம் செய்துவிட்டு விசாரணை நடத்துவதே சரியான தீர்வாக இருக்க முடியும் என்று கூறியுள்ளனர். இதுகுறித்து ஆவின் நிர்வாகம் பிறப்பித்துள்ள உத்தரவில், தலைமை அலுவலகத்தில் பொது மேலாளராக  பணியாற்றி வரும் ரமேஷ்குமார், விழுப்புரத்திற்கும், தலைமை அலுவலகத்தில்  துணை பொது மேலாளராக பணியாற்றி வரும் முத்துக்குமரன், கூடுதல் மேலாண்மை  இயக்குனர் அலுவலகத்திற்கும், பொதுமேலாளர் அலுவலகத்தில் துணை பொதுமேலாளராக  பணியாற்றிவரும் அன்புமணி தலைமை அலுவலகத்திற்கும் என தமிழகம் முழுவதும்  பல்வேறு இடங்களில் ஆவினில் பணியாற்றி வரும் 34 அதிகாரிகள் பணியிட மாற்றம்  செய்யப்பட்டுள்ளனர் என கூறப்பட்டுள்ளது….

The post முறைகேடுகளை விசாரிக்கும் வகையில் ஆவின் அதிகாரிகள் 34 பேர் பணியிட மாற்றம்: நிர்வாகம் அதிரடி உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Aain ,Chennai ,Aavin ,Tamil Nadu ,Dinakaran ,
× RELATED ஆவின் பால் பண்ணை துணைமேலாளர் உள்ளிட்ட 3பேர் பணியிடை நீக்கம்..!!