×

சாலையை கடந்த போது வேன் மோதி மூதாட்டி பரிதாப பலி: வேகத் தடை அமைக்க கோரி சாலை மறியல்

திருத்தணி: சாலையை கடந்தபோது வேன் மோதியதில் மூதாட்டி இறந்ததையடுத்து மக்கள், சாலை மறியலில் ஈடுபட்டனர்.  திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே பொன்பாடி மேட்டு காலனியை சேர்ந்தவர் இந்திராணி (60). இவர், 100 நாள் வேலை திட்டத்தில் பணியாற்றி வந்தார். நேற்று காலை 8 மணிக்கு வேலைக்கு கிளம்பினார். பொன்பாடி, பஸ்ஸ்டாப் அருகே சென்னை- திருப்பதி நெடுஞ்சாலையை கடந்தார். அப்போது அந்தவழியாக வந்த வேன், இந்திராணி மீது வேகமாக மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு சாலையில் விழுந்த இந்திராணி, சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதையடுத்து விபத்தை ஏற்படுத்திய வேன், அங்கிருந்து வேகமாக சென்றுவிட்டது. உடனே அந்தப்பகுதி கிராம மக்கள் அங்கு திரண்டனர். விபத்து ஏற்படுத்தி நபர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுபட்டனர்.  தகவலறிந்த திருத்தணி போலீசார், சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். மறியல் செய்தவர்களை சமாதானப்படுத்த முயன்றனர். அப்போது மறியல் செய்தவர்கள், ‘’ பொன்பாடி பகுதியில் வாகனங்கள் வேகமாக செல்கின்றன. இதனால் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. தற்போது ஒரு மூதாட்டி இறந்துள்ளார். இதற்கு முன்பும் சிலர் உயிரிழந்துள்ளனர். எனவே, பொன்பாடியில் சாலையில் வேகத்தடை அமைக்கவேண்டும்’ என்றனர். ‘‘உங்கள் பிரச்னை பற்றி திருவள்ளூர் கலெக்டருக்கு தெரியப்படுத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்று போலீசார் உறுதி அளித்தனர். மறியல் செய்தவர்கள் கலைந்துசென்றனர். சுமார் அரை மணிநேரம் சாலை மறியல் நடந்தது. இதையடுத்து போலீசார் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது….

The post சாலையை கடந்த போது வேன் மோதி மூதாட்டி பரிதாப பலி: வேகத் தடை அமைக்க கோரி சாலை மறியல் appeared first on Dinakaran.

Tags : Pathapa ,Tiruthani ,Thiruvallur District ,Thiruthani ,Dinakaran ,
× RELATED திருத்தணியில் சாலை விரிவாக்கப்பணிகள்...