×

போராட்டத்தில் ஈடுபடும் உரிமை ஒவ்வொரு குடிமகனுக்கும் உண்டு: நீதிபதி கருத்து

மதுரை:  தூத்துக்குடி மாவட்டம், கயத்தாறு அருகே மானம்காத்தான் கிராமத்திற்கான சாலை பழுதடைந்து, பயன்படுத்த முடியாத நிலையில் இருந்தது. சாலையை சீரமைக்கக் கோரி அக்கிராமத்தினர் கடந்த 6.3.2017ல் கயத்தாறு – தேவர்குளம் மெயின்ரோட்டில் மானம்காத்தான் பேருந்து நிறுத்தம் அருகே மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கயத்தாறு போலீசார் மானம்காத்தான் கிராமத்தைச் சேர்ந்த பலர் மீது சட்டவிரோதமாக கூடுதல், முறையற்ற வகையில் தடுத்து நிறுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர். இதையடுத்து இந்த வழக்கின் இறுதி அறிக்கை கோவில்பட்டி ஜேஎம் 2வது நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த இறுதி அறிக்கையை ரத்து செய்யக் கோரி 8 பேர் ஐகோர்ட் மதுரை கிளையில் மனு செய்தனர். மனுவை விசாரித்த நீதிபதி ஜி.இளங்கோவன் பிறப்பித்த உத்தரவு: மனுதாரர்கள் பொது சாலையை சீரமைக்கவும், செப்பனிடவும் கோரித்தான் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இது கட்டுப்படுத்தக் கூடிய வகையில் நடந்த போராட்டம் என்பதால் இதை சட்டவிரோதம் என்று கூற முடியாது. தங்களின் நேர்மையான   ேகாரிக்கைக்காகவே போராடியுள்ளனர். தங்களின் பொதுத்தேவைக்காக போராட ஒவ்வொரு குடிமகனுக்கும் உரிமை உண்டு. எனவே, இவர்கள் அனைவரும் கூடியது சட்டவிரோதம் அல்ல என்ற முடிவுக்கு இந்த நீதிமன்றம் வருகிறது. குடிநீர், உணவுப்பொருள் தேவை மற்றும் அத்தியாவசிய தேவைகளுக்காக அமைதியான முறையில் நடக்கும் போராட்டங்களை சட்டவிரோதமானதாக கருத முடியாது என ஏற்கனவே ஐகோர்ட் கூறியுள்ளது. சாலையை சீரமைக்க பல முறை கோரிக்கை விடுத்துள்ளனர். பிறகு, போராடியுள்ளனர். இதை சட்டவிரோதம் என கூற முடியாது என்பதால், கோவில்பட்டி நீதிமன்றத்தில் தாக்கல் செய்த இறுதி அறிக்கை ரத்து செய்யப்படுகிறது. இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்….

The post போராட்டத்தில் ஈடுபடும் உரிமை ஒவ்வொரு குடிமகனுக்கும் உண்டு: நீதிபதி கருத்து appeared first on Dinakaran.

Tags : Madurai ,Manamkhathan ,Kayathar ,Thoothukudi ,Dinakaran ,
× RELATED சீசன் துவங்கியும் மாம்பழங்கள் வரத்து இல்லை