×

ஜமுனாமரத்தூரில் ₹8 லட்சம் செலவில் அமைக்கப்பட்டு பயன்பாட்டிற்கு வராத குடிநீர் சுத்திகரிப்பு நிலையம்

போளூர் : ஜமுனாமரத்தூர் பகுதியில் ₹8 லட்சம் செலவில் கட்டப்பட்ட குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் மக்கள் பயன்பாட்டிற்கு வராமலேயே பாழடைந்து கிடக்கிறது. திருவண்ணாமலை மாவட்டம், ஜவ்வாதுமலை ஒன்றியத்தில் ஏராளமான மலைவாழ் மக்கள் வசித்து வருகின்றனர். இவர்களது மேம்பாட்டிற்காக ஊராட்சி ஒன்றிய அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு அரசு அலுவலகங்களும், பழங்குடியினர் நலத்துறை உண்டு, உறைவிட பள்ளிகள், ஊராட்சி ஒன்றிய தொடக்க, நடுநிலைப் பள்ளிகள் போன்றவை செயல்பட்டு வருகின்றன. மேலும், மலைவாழ் மக்கள் மேம்பாட்டிற்காக பல்வேறு துறைகள் சார்பில் மத்திய, மாநில அரசுகள் ஆண்டுதோறும் பல கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து வருகின்றன. இந்த நிதியை பயன்படுத்தி தரமான திட்டங்களை மக்களின் தேவையறிந்து நிறைவேற்றி இருந்தால் அரசின் நோக்கம் நிறைவேறியிருக்கும். ஆனால், ஜவ்வாதுமலையில் செயல்படுத்தப்படும் பல திட்டங்கள் தொடங்கிய வேகத்திலேயே முடங்கி விடுகிறது. இதற்கு உதாரணமாக ஊரக வளர்ச்சி துறை சார்பில் ஜவ்வாதுமலை அரசு பள்ளிகளில் குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரங்கள் பொருத்தப்பட்டன. ஆனால் அதிலிருந்து இன்று வரை யாருக்கும் குடிநீர் கிடைக்கவில்லை. பெரும்பாலான பள்ளிகளில் உதிரி பாகங்கள் உதிர்ந்து காயலான் கடைக்கு  போகும் நிலையில் உள்ளன. இதேபோல் பழங்குடியினர் நலத்துறை பள்ளிகளில் பல லட்சம் செலவில் அமைக்கப்பட்ட நீராவி சமையல் இயந்திரங்களும் இதேநிலையில் தான் உள்ளன.இந்நிலையில், கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு ஜமுனாமரத்தூர் ஊராட்சி மன்ற அலுவலகம் அருகில் ₹8 லட்சம் செலவில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டது. வெறும் ₹5க்கு 25 லிட்டர் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கும் நோக்கத்துடன் இது அமைக்கப்பட்டது. ஆனால் ஒருநாள் கூட மக்கள் பயன்பாட்டிற்கு வரவில்லை. உள்ளே வைக்கப்பட்ட டேங்க், இயந்திரங்கள் துருப்பிடித்து  மக்கி போகும் நிலையில் உள்ளது. இப்படி ஜவ்வாதுமலையில் அரசு ஒதுக்கும் நிதிகள் வீணாகி வருகிறது. இதுகுறித்து ஊரக வளர்ச்சி துறையினரிடம் விசாரித்த போது, ஜமுனாமரத்தூர் மட்டுமின்றி மாவட்டம் முழுவதும் 24 இடங்களில் ₹1.92 கோடி செலவில்  அமைக்கப்பட்ட இந்த திட்டத்தை பல்வேறு காரணங்களால் பயன்பாட்டிற்கு கொண்டு வரமுடியவில்லை. குறிப்பாக ஒரு லிட்டர் சுத்திகரிப்பு செய்ய 5 லிட்டர் தண்ணீர் வீணாக்கும் நிலை உள்ளது. கடந்த சில ஆண்டுகளாக திருவண்ணாமலை மாவட்டத்தில் வறட்சி நிலவி வந்ததால் இதனை பயன்பாட்டிற்கு கொண்டு வரமுடியவில்லை. பயன்படுத்தாத எந்த பொருளும் பாழடைந்து தான் போகும். மேலும் இனிமேல் இதனை பயன்பாட்டிற்கு கொண்டு வர வாய்ப்பில்லை என தெரிகிறது. காரணம் சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரில் இயற்கையான தாது உப்புகள் மக்களுக்கு கிடைக்காமல் பல்வேறு நோய்களுக்கு ஆளாகி வருகின்றனர். எனவே கொஞ்சம் கொஞ்சமாக இதுபோன்ற தரமற்ற சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை தடை செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது. சரியான திட்டமிடுதல் இல்லாமல் உயர் அதிகாரிகள் செய்யும் தவறுதான் இதுபோன்ற அரசு நிதி வீணாக காரணமாக உள்ளது என தங்கள் ஆதங்கத்தை தெரிவித்தனர்….

The post ஜமுனாமரத்தூரில் ₹8 லட்சம் செலவில் அமைக்கப்பட்டு பயன்பாட்டிற்கு வராத குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் appeared first on Dinakaran.

Tags : Jamunamarathur ,
× RELATED மலை கிராமத்தில் பயிரிடப்பட்டிருந்த 30...