×

எஸ். எஸ். ராஜமௌலி இயக்கத்தில் வெளியாகியிருக்கும் படம் ஆர் ஆர் ஆர் விமர்சனம்

டிவிவி என்டர்டெயின்ட்மென்ட் தயாரிப்பில் லைகா வெளியீட்டில் எஸ். எஸ். ராஜமௌலி இயக்கத்தில் வெளியாகியிருக்கும் படம் ‘ஆர் ஆர் ஆர்’. ஜூனியர். என்.டி.ஆர், ராம் சரண், அஜய் தேவ்கன், அலியா பட், ஸ்ரேயா சரண், ஒலீவியா மோரீஸ், சமுத்திரகனி உள்ளிட்ட பலர் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி ஏகோபித்த எதிர்பார்ப்புகளுக்கிடையே வெளியாகியிருக்கும் படம்.  1920களின் துவக்கம், ஆங்கிலேயர்கள் அடக்குமுறையும் அதற்கான போராட்டங்களுமாக ஆங்காங்கே வெடிக்கின்றன. இதில் ஆங்கிலேயர்களுக்கு வேலை செய்யும் காவலாளியாக அல்லரி சீதாராமராஜு(ராம் சரண்). இன்னொரு பக்கம் ஆங்கிலேயர்களால் அடிமையாக கொண்டு வரப்படும் பழங்குடி கூட்டத்தாரின் சிறுமி அதை மீட்க வரும் காப்பாளானாக கொமரம் பீம்(ஜூனியர்.என்.டி.ஆர்). இருவரும் ஒரு கட்டத்தில் இணைபிரியா நண்பர்களாக மாறுகின்றனர்.  இவ்விருவருக்கும் இடையில் ஏற்பட்ட நட்பு, ஆங்கிலேயர்கள் அடக்குமுறை, அடிமைத்தனம், இப்படி அத்தனைக்கும் கிளைமாக்ஸ் என்ன என்பது ராஜமௌலி ஸ்டைல் விஷுவல் விருந்து.

’பாகுபலி’ என்னும் ஒற்றை வார்த்தையைக் கேட்டாலே மெய்சிலிர்க்கும் இந்திய சினிமா ரசிகர்கள் அப்படத்தை இயக்கிய ராஜமௌலியின் அடுத்தப் படைப்பு என்னும் எதிர்பார்ப்புடன் இப்படத்திற்குக் காத்திருந்தனர். இதோ ஆர் ஆர் ஆர் ரிலீஸ். ஜூனியர் என்.டி.ஆர் , ராம் சரண் … இருவரும் கதைகளில் கேட்ட புஜபலபலாத்க்ரமசாலி நாயகர்கள் என்னும் தோரணைக்கு எவ்வித சந்தேகமும் இல்லாமல் இருவரும் நம்மை சீட்டின் நுனிக்கு இழுத்து வருகின்றனர். இருவரில் யார் சிறந்தவர் என்னும் போட்டி வைத்தால் நிச்சயம் ஆடியன்ஸ் தோற்றுப் போவர். அந்த அளவிற்கு தங்களை அர்ப்பணித்து உடல், மனம், என முழுமையான நடிப்பையும், டெடிகேஷனையும் கொடுத்திருக்கிறார்கள். குறிப்பாக நடனத்தில் இருவரும் டக்கர் லெவல். எனில் ஜூனியர் என்.டி.ஆர் ஒருபடி மேல் போயி அசால்ட்டாக நடனம் ஆடி அசத்துகிறார்.

அஜய் தேவ்கன், சமுத்திரகனி, அலியா பட், ஸ்ரேயா சரண் என அத்தனை பேரும் ராஜமௌலி ஸ்பெஷல் கேரக்டர்களாக அவரவர் வேலையைச் செய்தாலும் என்னவோ அத்தனை பேரையும் ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர் &கோ தூக்கி சாப்பிட்டு ஏப்பம் விட்டிருக்கிறார்கள். சண்டையிட்டாலும் சரி , நடனத்தில் சக்கை போடு போட்டாலும் சரி இருவருக்குள்ளும் அப்படி ஒரு கெமிஸ்ட்ரி.  ஒரு ஊர்ல ரெண்டு இணைபிரியா நண்பர்கள் எனத் துவங்கி மிக அழகாக கதை சொல்லியிருக்கிறார் ராஜமௌலியின் அப்பா விஜயேந்திர பிரசாத், அதற்கு அம்சமாக காட்சி கொடுத்திருக்கிறார் இயக்குநர் ராஜமௌலி. படம் முழுக்க நெருப்பு – தண்ணீர் என்னும் கதை சொல்லும் யுக்தியை கடைசி வரை கையாண்டிருப்பது அபாரம்.  விலங்குகளுடன் தோன்றும் ஜூனியர் என்.டி.ஆர், அம்புகளால் அடிக்கும் ராம் சரண், துப்பாக்கி வேட்டை, என படம் முழுக்க 3டி தொழில்நுட்பத்துக்கும் பஞ்சமில்லாமல் காட்சிகள். இரண்டாம் பாதியில் வரும் சில நம்பமுடியாத காட்சிகளை தவிர்த்திருக்கலாம். ராமர் வேஷம், அவ்வளவு பாதுகாப்பான கைதிகள்  கோட்டைக்குள் நுழையும் ஜூனியர் என்.டி.ஆர் என ஆங்காங்கே சில லாஜிக் தொங்கல்கள். ஆனாலும் இட்’ஸ் ஓகே பாஸ் ரகமாக காட்சிகளின் வீரியம் நம்மைக் கடத்துகிறது.

கே.கே.செந்தில் குமார் ஒளிப்பதிவும் , கீரவாணியின் இசையும் ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆரின் நட்புக்கே டஃப் கொடுக்கிறது. படத்தின் மற்றுமொரு பலம். ’நாட்டு நாட்டு’, ‘நட்பு’ பாடல்கள் நம்மை தாளம் போட வைக்கின்றன. மொத்தத்தில் யாரை வேண்டுமானாலும் திருப்திபடுத்திவிடலாம் ஆனால் இந்தக் குழந்தைகளை திருப்தி படுத்துவது என்பதுதான் மிகப்பெரும் டாக்ஸ். அந்த வகையில் ராஜமௌலியின் ‘ஆர் ஆர் ஆர்’ மாஸ்டர் பீஸ்.

Tags : Rajamauli ,
× RELATED ‘அஜித்தை பார்த்தால் பெருமையா இருக்கு’: ராஜமவுலி நெகிழ்ச்சி