×

ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்கும் 5 தமிழக வீரர்களுக்கு தலா ரூ.5 லட்சம் ஊக்கத்தொகை வழங்கப்பட்டது…!

சென்னை: ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொள்ளும் தமிழ்நாட்டைச் சேர்ந்த 5 விளையாட்டு வீரர்களுக்கு அரசின் சிறப்பு ஊக்கத் தொகையாக தலா ரூ. 5 இலட்சம் வீதம் ரூ.25.00 இலட்சம் மாண்புமிகு சுற்றுச் சூழல், காலநிலை மாற்றுத்துறை மற்றும் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் திரு.சிவ.வீ.மெய்யநாதன் அவர்கள் வழங்கினார்கள். தமிழ்நாடு அரசு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை சார்பில் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொள்ளும் விளையாட்டு வீரர்கள் / வீராங்கனைகளுக்கு அரசின் சிறப்பு ஊக்கத்தொகை வழங்கும் விழா சென்னை ஜவஹர்லால் நேரு விளையாட்டு அரங்கத்தில் இன்று நடைபெற்றது. இவ்விழாவில் மாண்புமிகு சுற்றுச் சூழல், காலநிலை மாற்றுத்துறை மற்றும் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் திரு. சிவ. வீ. மெய்யநாதன் அவர்கள் விளையாட்டு வீரர்களுக்கு அரசின் சிறப்பு ஊக்கத்தொகை வழங்கிப் பேசும்போது; மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ஒலிம்பிக் போட்டிகளில் கலந்துகொள்ளும் விளையாட்டு வீரர் / வீராங்கனைகளுக்குப் பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்வதோடு அவர்களுக்கானச் சிறப்பு ஊக்கத்தொகை ரூ.5.00 இலட்சத்தினை உடனடியாக வழங்க வேண்டும் என்ற வழிகாட்டிதலின் பேரில் இன்றைக்கு இந்த நிகழ்வு சென்னை ஜவஹர்லால் நேரு விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்று கொண்டிருக்கின்றது. இவ்விழாவினை ஏற்பாடு செய்து நடத்திக்கொண்டிருக்கின்ற துறையின் செயலர் அவர்களுக்கும், இந்த நிகழ்ச்சிக்கு வருகை தந்து பல்வேறு கருத்துகளை எடுத்துரைத்து விளையாட்டு சம்மந்தமான செய்திகள் மட்டும் அல்லாமல் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுடைய பயணம் எதை நோக்கி செல்கின்றது போன்ற பல்வேறு கருத்துகளை எடுத்து வைத்து இருக்கின்ற மாண்புமிகு இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை அமைச்சர் திரு. பி. கே. சேகர்பாபு அவர்களுக்கும், எழும்பூர் சட்டமன்ற உறுப்பினர் திரு. இ. பரந்தாமன் அவர்களுக்கும் மற்றும் இவ்விழாவில் பங்கேற்றுள்ள அரசு அலுவலர்கள், விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள், அவர்களது குடும்பத்தினர் மற்றும் செய்தி, ஊடகத் துறை நண்பர்கள் ஆகிய அனைவருக்கும் என் வணக்கத்தினை தெரிவித்துக் கொள்கிறேன். ஜப்பான், டோக்கியோவில் நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டிகளில் தமிழ்நாட்டில் இருந்து 11 விளையாட்டு வீரர் / வீராங்கனைகள் பங்கு பெற இருக்கின்றார்கள் என்ற மகிழ்ச்சியான செய்தியை நான் உங்களிடத்தில் தெரிவித்துக் கொள்கிறேன். தமிழ்நாட்டிலிருந்து 11 விளையாட்டு வீரர்கள் ஒலிம்பிக் போட்டிகளில் கலந்து கொள்வது வரலாற்றிலேயே இதுவே முதன் முறையாக  நமது விளையாட்டு வீரர்கள் / வீராங்கனைகள் சாதித்துள்ளார்கள். அச்சாதனை காலம் முழுவதும் தொடர வேண்டும் என்பதற்காக இந்த நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. விளையாட்டு வீரர்கள் இந்த சாதவீனைக்கு சாதாரணமாக வந்துவிடவில்லை. இந்த சாதனைக்கு பின்னர் அவர்களின் 20 ஆண்டு கால உழைப்பு இருக்கின்றது. அந்த உழைப்பினால் கிடைத்த வெற்றி என்பதை நான் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தியாவில் இருந்து 120 விளையாட்டு வீரர்கள் / வீராங்கனைகள் தேர்வு செய்யப்பட்டு உள்ளார்கள். இதில் ஹரியானா மாநிலத்தில் இருந்து 30 பேர், பஞ்சாப் மாநிலத்தில் இருந்து 15 பேர், தமிழ்நாட்டில் இருந்து 11 பேர் தேர்வு செய்யப்பட்டு உள்ளார்கள். இதில் 5 பேர் வீராங்கனைகள் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். ஓலிம்பிக் போட்டியில் தங்கப் பதக்கம் வெல்ல வேண்டும் என்பது என் கனவு மட்டுமல்ல, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் கனவும் அதுதான். தமிழ்நாட்டில் உள்ள பல இலட்சம் இளைஞர்களின் கனவும் இதுதான். மேலும், தமிழ்நாட்டில் விளையாட்டுத்துறையில் தங்களை ஒப்படைத்துள்ள பல இலட்சம் வீரர்களின் கனவு ஒலிம்பிக் போட்டியில் தங்கப் பதக்கம் வெல்ல வேண்டும் என்பது தான்.  நமது 11 விளையாட்டு வீரர்களும் ஒலிம்பிக் போட்டியில் தங்கப் பதக்கம் பெற்று தமிழகம் திரும்புவார்கள் என்ற செய்தி நமக்கு கிடைக்கும். அவ்வாறு விளையாட்டு வீரர்கள் தங்கப் பதக்கம் பெற்று திரும்பும் போது நமது வீரர்களையும், தமிழ்நாட்டையும் இந்தியா திரும்பி பார்க்கும்.  உலகத்தினுடைய பார்வை தமிழகத்தின் மீது விழும். தமிழகத்தில் உள்ள பல இலட்சம் இளைஞர்கள் விளையாட்டில் பங்கு பெற ஆர்வம் கொள்வார்கள். புதிய விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள் உருவாக்கப்படுவார்கள். அதுமட்டுமல்லாமல், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களது தொலைநோக்கு திட்டத்தில், இந்த போட்டிகள் வருவதற்கு முன்னரே ஒரு தீர்மானத்தினை வழங்கியுள்ளார்கள்.  தமிழ்நாட்டில் நான்கு ஒலிம்பிக் மண்டலங்களாக அமைப்பதற்கான நடவடிக்கையினை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களது தொலைநோக்கு திட்டத்தில் சேர்த்துள்ளார். அவ்வாறு உருவாக்கப்படும் நான்கு மண்டலங்களில் சிறந்த விளையாட்டு வீரர்களை உருவாக்குவதே அதன் நோக்கமாகும். தமிழ்நாட்டில் அமைந்துள்ள குக்கிராமத்தில் சிறப்பாக விளையாடும் வீரர்கள், வீராங்னைகளை கண்டறிந்து அவர்களுக்கு உலகத்தரம் வாய்ந்த விளையாட்டுப் பயிற்சி அளிப்பதுதான் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் தொலைநோக்குத் திட்டம் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். இன்றைக்கு தமிழ்நாட்டில், சென்னையில் ‘விளையாட்டு நகரம்’ அமைப்பதற்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களது தொலைநோக்கு திட்டத்தில் சேர்த்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த விழாவில், விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகளின் பெற்றோர்கள் வருகை தந்துள்ளார்கள். 11 விளையாட்டு வீரர்களுக்கு இந்த நிமிடத்தில் இருந்து ஒவ்வொரு நிமிடமும் முக்கியமானதாகும்.  உங்களுடன் ஒவ்வொரு நிமிடமும், நானும், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களும் உடன் இருப்போம் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.  11 விளையாட்டு வீரர்களுக்கும் அலைபேசி மூலம் வாட்ஸ்அப் குரூப் உருவாக்கப்பட்டு அவர்களுடன் நாங்கள் தொடர்ந்து தொடர்பு கொண்டு, அவர்களுக்குத் தேவையான அனைத்து வசதிகளையும்  நிறைவேற்றிட முயற்சி எடுத்துள்ளோம் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். 11 விளையாட்டு வீரர்களுக்கு பின்னால் இருந்து உதவி புரிந்த பெற்றோர்கள், பயிற்சியாளர்கள் மற்றும் ஊக்கப்படுத்திய அனைவருக்கும் எனது நன்றியுனை தெரிவித்துக் கொள்கிறேன். குறிப்பாக, மதுரையைச் சேர்ந்த செல்வி. ரேவதி வீரமணி அவர்களின் பெற்றோரை இழந்த நிலையில், ஒலிம்பிக்கில் கலந்து கொள்ளும் சாதனையை உருவாக்கிட காரணமாக இருந்த அவரின் பாட்டி திருமதி. ஆரம்மாள் அவர்களை பாராட்டுகின்றேன். மேலும், வெளி நாட்டுப் போட்டியில் பங்கு கொண்டுள்ள வாள்வீச்சு வீராங்கனை அருமை சகோதரி சி. ஏ. பவானி தேவி அவர்களுக்கும், தடகள விளையாட்டில் திரு. எஸ். ஆரோக்கிய ராஜிவ், திரு. நாகநாதன் பாண்டி, செல்வி. சுபா வெங்கடேசன், செல்வி. தனலட்சமி சேகர் உட்பட 11 விளையாட்டு வீரர்களுக்கும் எனது  வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். இந்தியாவின் சார்பாக ஒலிம்பிக் போட்டியில் பங்கு கொள்ளும் 120 விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகளுக்கும், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் சார்பாக பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்து இந்தியாவிற்கும், தமிழ்நாட்டிற்கும் பெருமை சேருங்கள் என்று கூறி விடைபெறுகிறேன். …

The post ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்கும் 5 தமிழக வீரர்களுக்கு தலா ரூ.5 லட்சம் ஊக்கத்தொகை வழங்கப்பட்டது…! appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Olympic ,Chennai ,Olympic Games ,
× RELATED தமிழ்நாட்டில் கருவுற்ற பெண்கள்...