×

டவுன் வஉசி தெருவில் 3 ஆண்டுகளாக தொடரும் பணிகள் உருக்குலைந்த சாலையால் மக்கள் பாதிப்பு

நெல்லை : நெல்லை  டவுன் வஉசி தெருவில் குடிநீர் மற்றும் பாதாள சாக்கடை திட்ட பணிகளுக்காக  தோண்டப்பட்ட சாலைகள் சீரமைக்கப்படாததால், கடந்த 3 ஆண்டுகளாக பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர். இந்த பணிகளை விரைந்து முடிக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர். நெல்லை மாநகராட்சி சார்பில் கடந்த 2018ம் ஆண்டு டவுன் பகுதியில், பல்வேறு தெருக்களில் கழிவு நீரோடை அமைப்பதற்காக குழிகள் தோண்டப்பட்டன.  வஉசி தெருவில் கழிவுநீரோடை பணிகள் முடிந்தும் சாலை சீரமைப்பு பணிகள் நடைபெறவில்லை. குறிப்பாக கழிவுநீரோடைக்காக தோண்டி போடப்பட்ட மணல் குவியல்கள் கூட சில இடங்களில் அப்புறப்படுத்தப்படவில்லை. தொடர்ந்து பாதாள சாக்கடை திட்ட  பணிகளுக்காக இதே பகுதியில் மீண்டும் குழிகள் தோண்டப்பட்டன. இந்த பணிகளும் இதுவரை முடிவடையாத நிலையில், கடந்த 2020ம் ஆண்டு சீர்மிகு நகரத் திட்டத்தின்கீழ் புதிய குடிநீர் குழாய் பதிக்கும் பணி தொடங்கப்பட்டது. இவ்வாறு கடந்த 3 ஆண்டுகளாக வஉசி தெருவில் அடுத்தடுத்து சாலை தோண்டப்பட்ட நிலையில், இதுவரை முழுமையாக சீரமைக்கப்படாததால் குண்டும், குழியுமாக மாறியுள்ளது. இதனால் இத்தெரு மக்கள் கடும் பாதிப்பிற்குள்ளாகி இருக்கின்றனர். இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு மீண்டும் பாதாள சாக்கடை திட்டத்திற்காக குழிகள் தோண்டப்பட்டுள்ளது. இதனால் இப்பகுதி மக்கள் தங்கள் வீடுகளுக்கே செல்ல முடியாத நிலை உள்ளது. மேலும் இச்சாலை வழியாக செல்லும் வாகன ஓட்டிகளும் சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனர். இதுகுறித்து மார்க்சிஸ்ட் கட்சியின் 42வது  வார்டு கிளை செயலாளர் ஈஸ்வரமூர்த்தி கூறியதாவது: டவுன் கீழரதவீதி, தெற்குரதவீதி பகுதிகளில் உள்ள வணிக நிறுவனங்கள் மற்றும் வீடுகளில் இருந்து   வெளியேறும் கழிவுநீரும், வஉசி தெருவிலுள்ள வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீரும் திருப்பணிமுக்கு பகுதியில் உள்ள கழிவுநீர் ஓடைக்கு செல்கிறது. அங்கிருந்து நயினார்குளம் கழிவுநீர்  உந்து  மையத்திற்கு கொண்டு செல்லப்பட்டு ராமையன்பட்டியில் உள்ள சுத்திகரிப்பு நிலையத்திற்கு செல்கிறது. தற்போது வஉசி தெருவில் குடிநீர், பாதாள சாக்கடைத் திட்டப் பணிகளுக்காக பலமுறை தோண்டப்பட்ட சாலை மேடாகிவிட்டன. இதனால் சில நேரங்களில் ஆங்காங்கே   உடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் வெளியேறுகிறது. இதனால் நோய்த் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. இதுதொடர்பாக கடந்த 3 ஆண்டுகளில் பலமுறை புகார் தெரிவித்தும், போராட்டங்கள் நடத்தியும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. தமிழகத்தில் புதிதாக பொறுப்பேற்றுள்ள அரசு, இப்பிரச்னையில் தலையிட்டு மாநகர பகுதி முழுவதும் நடைபெறும் பாதாள சாக்கடை மற்றும் குடிநீர் திட்ட பணிகளை விரைந்து முழுமையாக முடித்து சாலைகளை சீரமைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். …

The post டவுன் வஉசி தெருவில் 3 ஆண்டுகளாக தொடரும் பணிகள் உருக்குலைந்த சாலையால் மக்கள் பாதிப்பு appeared first on Dinakaran.

Tags : Wausi Street ,Nellai ,Vausi Street ,Nellai Town ,
× RELATED நெல்லையில் கட்டுக்கடங்காத கூட்டம்;...