×

மாண்டஸ் புயலில் விழுந்த 644.60 மெட்ரிக் டன் மரக்கிளைகள் அகற்றம்; சென்னை மாநகராட்சி தகவல்

சென்னை: மாண்டஸ் புயலில் விழுந்த  644.60 மெட்ரிக் டன் மரக்கிளைகள் 100 டிப்பர் லாரிகள் மூலம் அகற்றம் செய்யப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை மாநகராட்சி வெளியிட்ட அறிக்கை: சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மாண்டஸ் புயலினால் ஏற்பட்ட பாதிப்புகளை உடனடியாக சீர்செய்ய பல்வேறு விதமான மீட்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. குறிப்பாக  காற்றின் அதிக வேகத்தின் காரணமாக மாநகரின் பல்வேறு பகுதிகளிலும் மரங்கள் வேரோடும்  ஒரு சில இடங்களில் மரக்கிளைகளும் சாய்ந்தன. சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 15 மண்டலங்களிலும் மாண்டஸ் புயலினால் காற்றின் வேகத்தின் காரணமாக விழும் மரம் மற்றும் மரக்கிளைகளை அகற்றுவதற்காக 261 மர அறுவை இயந்திரங்கள், 67 டெலஸ்கோபிக் மர அறுவை இயந்திரங்கள், வாகனங்களில் பொருத்தப்பட்ட 2 மர அறுவை இயந்திரங்கள், 6 ஹைட்ராலிக் மர அறுவை இயந்திரங்களுடன் மாநகராட்சி பணியாளர்கள் ஏற்கனவே தயார் நிலையில் இருந்தனர்.இந்நிலையில் 9ம் தேதி மாண்டஸ் புயல் கரையை கடக்கும் பொழுது ஏற்பட்ட அதிக காற்றின் காரணமாக 15 மண்டலங்களிலும் 207 மரங்களும்,  100க்கும் மேற்பட்ட இடங்களில் மர கிளைகளும் ஆங்காங்கே சாலைகளில் விழுந்தன. இந்த மரக்கிளைகள் அனைத்தையும் மாநகராட்சி பணியாளர்கள் 9ம் தேதி இரவு முதலே களத்தில் இறங்கி போர்க்கால அடிப்படையில் மர அறுவை இயந்திரங்களை பயன்படுத்தி அகற்ற தொடங்கினர். மண்டலங்கள் 1,2,3 மற்றும் 7ல் சென்னை என்விரோ நிறுவன தூய்மைப் பணியாளர்களும், மண்டலங்கள் 4,5,6 மற்றும் 8ல் மாநகராட்சிப் தூய்மைப் பணியாளர்களும், மண்டலம் 9 முதல் 15 வரை உர்பேசர் நிறுவன தூய்மைப் பணியாளர்களும் இப்பணிகளில் ஈடுபட்டனர். இவ்வாறு அகற்றப்பட்ட 644.60 மெட்ரிக் டன் எடையுள்ள மரக்கழிவுகள் 100 டிப்பர் லாரிகளின் மூலம் 291 நடைகளாக மாநகராட்சியின் கொடுங்கையூர் மற்றும் பெருங்குடியில் உள்ள குப்பை கொட்டும் வளாகங்களுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. …

The post மாண்டஸ் புயலில் விழுந்த 644.60 மெட்ரிக் டன் மரக்கிளைகள் அகற்றம்; சென்னை மாநகராட்சி தகவல் appeared first on Dinakaran.

Tags : Cyclone Mandus ,Chennai Municipal Corporation Information ,Chennai ,Mandus ,Chennai Corporation Information ,Dinakaran ,
× RELATED சென்னை கோயம்பேடு மேம்பாலத்தில் ஆண்...