×

ஜெயலலிதா 6ம் ஆண்டு நினைவு நாள் எடப்பாடி, ஓபிஎஸ், சசிகலா, தினகரன் என 4 அணியாக சமாதிக்கு சென்று மரியாதை: காலை முதல் பகல் வரை போக்குவரத்து நெரிசல்

சென்னை: ஜெயலலிதாவின் 6ம் ஆண்டு நினைவு நாளையொட்டி நேற்று எடப்பாடி பழனிசாமி,  ஓ.பன்னீர்செல்வம், சசிகலா, டி.டி.வி.தினகரன் என 4 அணிகளாக மெரினா கடற்கரை அருகே உள்ள ஜெயலலிதா சமாதிக்கு சென்று மலர்தூவி மரியாதை செலுத்தினர். இதனால் காலை முதல் பிற்பகல் வரை கடற்கரை சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அதிமுக பொதுச்செயலாளர், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடந்த 2016ம் ஆண்டு டிசம்பர் 5ம் தேதி காலமானார். அவரின் 6ம் ஆண்டுநினைவு நாளான நேற்று (திங்கள்) காலை 10 மணியளவில், சென்னை, மெரினா கடற்கரையில் அமைந்துள்ள ஜெயலலிதா நினைவிடத்தில் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மலர் தூவி மரியாதை செலுத்தினார்.அவருடன் தமிழ்மகன் உசேன், கே.பி.முனுசாமி, நத்தம் விஸ்வநாதன், தங்கமணி, வேலுமணி, சி.வி.சண்முகம், ஜெயக்குமார் மற்றும் தலைமை கழக நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள், முன்னாள் அமைச்சர்கள், எம்பி, எம்எல்ஏக்கள் மரியாதை செலுத்தினர். பின்னர் எம்ஜிஆர், ஜெயலலிதா நினைவிட வளாகத்தில் திறந்த மேடை அமைத்து உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர். அப்போது, ‘‘ பொய் வழக்குகளை முறித்தெறிவோம் என்று, சபதம் ஏற்கிறோம். நாடாளுமன்ற பொதுத்தேர்தலில் மெகா கூட்டணி அமைத்து வெற்றிபெற சூளுரைப்போம்’’ என்று கூறி உறுதிமொழி ஏற்றனர்.இதைத்தொடர்ந்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் நிர்வாகிகள் வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன், ஜெ.சி.டி.பிரபாகர், கு.பா.கிருஷ்ணன், பெங்களூர் புகழேந்தி மற்றும் தொண்டர்கள் ஏராளமானோருடன் ஜெயலலிதா சமாதிக்கு ஊர்வலமாக வந்து மலர்அஞ்சலி செலுத்தினர். ஓ.பன்னீர்செல்வம் தரப்பிலும் உறுதிமொழி ஏற்றுக்கொள்ளப்பட்டது. அப்போது, ‘அதிமுக தலைவரை தொண்டர்கள் தான் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று விதி உள்ளது. அந்த விதியை மாற்ற முயற்சி செய்யும் சர்வாதிகார போக்கிற்கு முடிவு கட்டுவோம்.  ஜெயலலிதா தான் அதிமுகவின் நிரந்தர பொதுச்செயலாளர் என்ற நிலையை மீண்டும் உருவாக்க நாம் அனைவரும் சூளுரைக்கிறோம்’’ என உறுதிமொழி எடுத்தனர். இவர்களை தொடர்ந்து, சசிகலா மற்றும் டி.டி.வி.தினகரனும் தங்களது ஆதரவாளர்களுடன் ஜெயலலிதா சமாதிக்கு வந்து அஞ்சலி செலுத்தி உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர். அதிமுக தலைவர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் பெரும்பாலானோர் கறுப்பு சட்டை அணிந்து வந்திருந்தனர். அதிமுகவினர் எடப்பாடி, ஓபிஎஸ், சசிகலா, டி.டி.வி.தினகரன் என 4  அணிகளாக, தனித்தனியாக ஊர்வலமாக ஜெயலலிதா சமாதிக்கு வந்து அஞ்சலி செலுத்தியதால், ஜெயலலிதா சமாதி அமைந்துள்ள காமராஜர் சாலையில் காலை முதல் பிற்பகல் வரை கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் அலுவலகம் செல்பவர்கள் அவதிப்பட்டனர். ஜெயலலிதா நினைவுநாள் 5ம் தேதி (நேற்று) அனுசரிக்கப்பட்டாலும், ஆறுமுகசாமி கமிஷனில் ஜெயலலிதா மரணம் அடைந்தது 4ம் தேதி என்று கூறப்பட்டிருந்ததால் அதிமுக நிர்வாகிகள் பலர் 4ம் தேதி அவரது நினைவுதினத்தை அனுசரித்தது குறிப்பிடத்தக்கது.* சசிகலாவை தண்டிக்க வேண்டும்சென்னை போயஸ் கார்டன் இல்லத்துக்கு சென்ற ஜெ.தீபா, ஜெயலலிதா படத்துக்கு மாலை அணிவித்து மலர்தூவி அஞ்சலி செலுத்தினார். இதைத்தொடர்ந்து அவர் நிருபர்களிடம் கூறும்போது, ‘அதிமுக கட்சியே இனி இருக்காது. ஜெயலலிதா 100 ஆண்டுகள் அதிமுக நீடித்து இருக்கும் என்றார். ஆனால், அவர் மறைந்த பிறகு 100 நாள் கூட இவர்கள் ஒழுங்காக ஆட்சி செய்யவில்லை. அதிமுக தற்போது எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம், சசிகலா, டி.டி.வி.தினகரன் என 4 அணிகளாக பிரிந்து செயல்படுகிறது. அதிமுகவை வழிநடத்த தகுதியான தலைவர்கள் இல்லை. சசிகலா தண்டிக்கப்பட வேண்டியவர். சுயநலத்திற்காக அதிமுக கட்சியை பயன்படுத்திக் கொள்கிறார்கள்’’ என்றார்.* ஜெயலலிதா மறைந்த நாளை ‘நன்னாள்’ என கூறி அதிரவைத்த எடப்பாடிஜெயலலிதா நினைவு நாளையொட்டி, ஜெயலலிதா, எம்ஜிஆர் சமாதியில் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்திய பிறகு, அதே வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த மேடையில் எடப்பாடி பழனிசாமி மற்றும் முன்னணி தலைவர்கள், தொண்டர்கள் உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடந்தது. எடப்பாடி பழனிசாமி உறுதிமொழியை வாசிக்க, மற்றவர்கள் அதை திருப்பி சொன்னார்கள். அப்போது, ‘ஜெயலலிதா மறைந்திட்ட இந்நாளில்’ என்று கூறுவதற்கு பதில் ‘ஜெயலலிதா மறைந்திட்ட இந்நன்னாளில்’ என்று எடப்பாடி பழனிசாமி வாசித்தது அதிமுக தொண்டர்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.  ஒருமுறை தவறாக வாசித்தால் கூட பரவாயில்லை, இரண்டு முறை ‘இந்நாளில்’ என்பதற்கு பதில் ‘இந்நன்னாளில்’ என்று வாசித்தது அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் இடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பலரும் எடப்பாடி வாசித்ததையே திரும்ப ‘இந்நன்னாளில்’ என்றே கூறினர். ஜெயலலிதா மறைவுக்கு பிறகு 4 ஆண்டுகள் முதலமைச்சராக இருந்த எடப்பாடி பழனிசாமியே, ஜெயலலிதா மறைந்த நாளை இந்த நல்ல நாள் என்ற அர்த்தத்தில் வாசித்தது கடும் விமர்சனத்துக்குள்ளாகியுள்ளது….

The post ஜெயலலிதா 6ம் ஆண்டு நினைவு நாள் எடப்பாடி, ஓபிஎஸ், சசிகலா, தினகரன் என 4 அணியாக சமாதிக்கு சென்று மரியாதை: காலை முதல் பகல் வரை போக்குவரத்து நெரிசல் appeared first on Dinakaran.

Tags : Jayalalithah ,6th Memorial Day ,Edapadi ,Sasigala ,Dinakaran ,Chennai ,Palanisamy ,O. Pannerselvam ,T. TD ,Dinagaran ,6th Anniversary Memorial Day ,Samadi ,
× RELATED அரசியலில் ஏமாற்றுக்காரர்களின் தந்தை...