×

பெண்களின் வயதை கேட்பதா: சமீரா ஆவேசம்

வாரணம் ஆயிரம், அசல், வெடி, வேட்டை ஆகிய படங்களில் நடித்தவர், சமீரா ரெட்டி. பாலிவுட்டில் நிறைய படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் தனது ரசிகர்களுடன் கலந்துரையாடிய அவரிடம் ஒருவர், ‘இப்போது உங்கள் வயது என்ன?’ என்று கேட்டார். உடனே ஆவேசம் அடைந்த சமீரா ரெட்டி பதிலளிக்கையில், ‘வயதில் கூட பெண்களுக்கும், ஆண்களுக்கும் வித்தியாசம் பார்க்கும் ஒரு சமூகத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். நான் 1978ல் பிறந்தேன். எனக்கு 42 வயதாகிறது. இதை சொல்வதில் எனக்கு தயக்கம் கிடையாது. நான் சொல்லாவிட்டால் கூகுள் சொல்லப்போகிறது. வயது என்பது நான் வாழ்ந்த ஆண்டுகள் என்பதை தவிர, அதற்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதில்லை. ஆண்கள் எத்தனை வயதானாலும் அழகாக இருப்பது போன்றும், பெண்கள் வயதாகும்போது அழகு குறைந்துவிடுவதை போன்றும் ஒரு ேதாற்றத்தை உருவாக்கி வைத்து இருக்கிறோம். 

அதனால், பெண்கள் தங்கள் வயதை வெளியே சொல்ல தயங்குகின்றனர். ஆண்களும் பெண்களின் வயதின் மீது அதிக அக்கறை காட்டுகின்றனர். எப்போதும் இளமையாக இருக்க வேண்டும், அழகாக இருக்க வேண்டும் என்ற தவிப்பு பெண்களுக்கு அதிகமாகவே இருக்கிறது. இது உண்மையில் தேவையில்லாத ஒன்று. அழகு என்பதற்கான இலக்கணங்கள் அடிக்கடி மாறிக்கொண்டே இருக்கும். வாழும் ஆண்டுகள் அதிகமாகும்போது ஆண், பெண் உடலில் மாற்றங்கள் ஏற்படுவது தவிர்க்க முடியாதது. இந்தமாற்றத்தை நாம் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். அதை ஏன் பலவீனமாகவோ அல்லது விரும்பத்தகாத ஒன்றாகவோ எடுத்துக்கொள்ள வேண்டும்?’ என்று கூறியுள்ளார். இதையடுத்து அந்த ரசிகர் அமைதியாகி விட்டார்.

Tags : women ,Sameera ,
× RELATED தீர்த்தத்தில் மயக்க மருந்து கலந்து...