×

 உலக கோப்பை கால்பந்து: பதிலி ஆட்டக்காரர்கள் பதிலடி ஸ்பெயின் – ஜெர்மனி டிரா

தோஹா: உலக கோப்பை கால்பந்து தொடரின் இ பிரிவில் ஸ்பெயின் – ஜெர்மனி அணிகள் மோதிய லீக் ஆட்டம் டிராவில் முடிந்தது. அல் பேட் அரங்கில் நேற்று நடந்த இப்போட்டியில் கேப்டனும் கோல்கீப்பருமான மேனுவல் நியூர், தாமஸ் முல்லர் உள்ளிட்ட அனுபவ வீரர்களுடன் ஜெர்மனி களமிறங்க… செர்ஜியோ பஸ்கியூட்ஸ் தலைமையில் மார்கோ அசென்சியா, பெரான் டாரெஸ், காவி என அதிரடி வீரர்களுடன் ஸ்பெயின் வரிந்துகட்டியது. முன்னாள் சாம்பியன்களான  2 அணிகளும் ஆரம்பம் முதலே கோல் வேட்டைக்கான முயற்சியில் வேகம் காட்டின. பந்தை அதிக நேரம் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் முயற்சியில் ஸ்பெயின் கை ஓங்கினாலும், கோலடிக்கும் முயற்சியில் ஜெர்மனிதான் அதிக ஆர்வம் காட்டியது. அதற்கேற்ப ஆட்டத்தின் 40வது நிமிடத்தில் ஸ்பெயின் வீரர்களிடம் இருந்து கிம்மிச் பறித்துத் தந்த பந்தை ஆன்டோனியோ ரூயிட்ஜெர் அழகான கோலாக மாற்றினார். ஆனால், நடுவர் அதை ‘ஆஃப் சைடு’ என்று அறிவிக்க… ஜெர்மனி வீரர்ககள் மட்டுமின்றி, ரசிகர்களும் ஏமாற்றமடைந்தனர். அதனால் முதல் பாதியில் கோல் ஏதுமின்றி  இரு அணிகளும் சமநிலை வகித்தன. தொடர்ந்து 2வது பாதியிலும் இதே நிலை நீடித்ததால், இரு அணிகளும் மாற்று வீரர்களை களமிறக்கி தாக்குதலை தீவிரப்படுத்தின. ஸ்பெயின் தரப்பில் ஆட்டத்தின் 54வது நிமிடத்தில் டாரெசுக்கு பதிலாக அல்வரோ மோரடா களமிறக்கப்பட்டார். அவர் 62வது நிமிடத்தில் தனது அணிக்காக முதல் கோலை அடித்து 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுத் தந்தார். அதனை ஸ்பெயின் வீரர்களும், ரசிகர்களும் கொண்டாடி தீர்த்தனர். தொடர் நிகழ்வாக ஜெர்மனி 70வது நிமிடத்தில் அனுபவ வீரர் தாமஸ் முல்லருக்கு பதில்  நிக்லஸ் ஃபியூல்கிரக்கை  களத்துக்கு அனுப்பியது. அவர் ஆட்டத்தின் 83வது நிமிடத்தில்  முசியாலா லாவகமாக வாங்கித் தந்த பந்தை அதிரடியாக கோலாக மாற்றினார். அதன் பிறகு 2 அணிகளும் மேற்கொண்ட முயற்சிகள் பலனளிக்காததால், ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது….

The post  உலக கோப்பை கால்பந்து: பதிலி ஆட்டக்காரர்கள் பதிலடி ஸ்பெயின் – ஜெர்மனி டிரா appeared first on Dinakaran.

Tags : World Cup football ,Spain ,Germany ,Toha ,World Cup Football Series ,Dinakaran ,
× RELATED பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரித்த...