×

கோகுல்ராஜ் கொலை வழக்கில் பிறழ்சாட்சியான ஸ்வாதி ஆஜர் உண்மையை மறைத்தால் அவமதிப்பு நடவடிக்கை: ஐகோர்ட் கிளை நீதிபதிகள் கடும் எச்சரிக்கை

மதுரை: கோகுல்ராஜ் ெகாலை வழக்கில் பிறழ் சாட்சியான ஸ்வாதி, ஐகோர்ட் மதுரை கிளையில் நேற்று ஆஜரானார். அப்போது வீடியோவில் உள்ள பெண் நானில்லை என்றார். அதற்கு நீதிபதிகள், ‘தன்னையே தெரியாது என்பதா? உண்மையை மறைத்தால் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்படும்’ என எச்சரிக்கை விடுத்தனர். மேலும், 30ம் தேதி மீண்டும் ஆஜராகுமாறும் உத்தரவிட்டுளளனர்.சேலம் மாவட்டம், ஓமலூரைச் சேர்ந்தவர் பொறியியல் மாணவர் கோகுல்ராஜ். வேறு சமூகத்தை சேர்ந்த ஸ்வாதி என்ற பெண்ணை காதலித்தார். கடந்த 23.6.2015ல் கோகுல்ராஜ் கிழக்கு தொட்டிப்பாளையம் ரயில்பாதை அருகே கொலையாகி கிடந்தார். இந்த கொலை தொடர்பாக தீரன் சின்னமலை கவுண்டர் பேரவை தலைவர் யுவராஜ் உட்பட 15 பேரை சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர்.நாமக்கல் நீதிமன்றத்தில் நடந்த விசாரணை மதுரை மாவட்ட 3வது கூடுதல் அமர்வு நீதிமன்றத்திற்கு கடந்த 2019ல் மாற்றப்பட்டது. இந்த வழக்கில் கடந்த மார்ச் 8ல் தீர்ப்பளித்த மதுரை நீதிமன்றம், முதல் குற்றவாளியான யுவராஜ் உட்பட 10 பேருக்கு சாகும்வரை ஆயுள்தண்டனை விதிக்கப்பட்டது. மற்ற 5 பேர் விடுவிக்கப்பட்டனர். இந்த தண்டனையை எதிர்த்து யுவராஜ் உள்ளிட்ட 10 பேரும் ஐகோர்ட் மதுரை கிளையில் அப்பீல் செய்தனர். இந்த 5 பேரின் விடுதலையை ரத்து செய்து, அனைவருக்கும் தண்டனை வழங்கக் கோரி, கோகுல்ராஜின் தாய் சித்ரா மற்றும் சிபிசிஐடி தரப்பிலும் அப்பீல் செய்யப்பட்டது. இந்த வழக்கில் பிறழ் சாட்சியாக மாறிய ஸ்வாதியை, நீதிபதிகளின் உத்தரவுபடி போலீசார் நேற்று ஆஜர்படுத்தினர். அப்போது, ‘புத்தகம் மற்றும் குழந்தை மீது சத்தியம் செய்து உண்மையை கூறுங்கள்’ என நீதிபதிகள் கூறி விட்டு, வழக்கில் முக்கிய ஆதாரங்களை அடிப்படையாகக் கொண்டு நீதிபதிகள் அடுத்தடுத்து கேள்வி எழுப்பினர். பெரும்பாலான கேள்விகளுக்கு, ‘தெரியாது. ஞாபகம் இல்லை. போலீசார் கூறியதால் சொன்னேன். எழுதிக் கொடுத்தேன்’ என்றே ஸ்வாதி பதிலளித்தார். ‘சம்பவம் நடந்த அன்று காலையில் கோகுல்ராஜை பார்க்கவில்லை’’ என்றார்.   இதையடுத்து, கொலையான ேகாகுல்ராஜூடன் சேர்ந்து திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோயிலுக்கு ஸ்வாதி சென்று கோயிலை விட்டு வெளியே வந்தது தொடர்பான சிசிடிவி காட்சிகளை பெரிய எல்இடி டிவியில் போட்டு காட்டியவாறு நீதிபதிகள் கேள்விகளை கேட்டனர். இதற்கு, ‘‘ டிவியில் உள்ளது கோகுல்ராஜ் தான். ஆனால் அவருடன் செல்லும் பெண் நான் இல்லை’’ என்றார்.    அப்போது நீதிபதிகள், ‘‘உங்களை, உங்களுக்கே அடையாளம் தெரியவில்லையா? எதையும் மறைக்காமல் உண்மையை கூற வேண்டும். உண்மைகளை கூறாவிட்டாலும், பொய்யான தகவல்களை கூறினாலும்  மீண்டும், மீண்டும் குறுக்கு விசாரணை நடந்து கொண்டே இருக்கும்’’ என்றனர். பின்னர், ‘‘  மாஜிஸ்திரேட் முன் நீங்கள் வாக்குமூலம் கொடுத்தீர்களா?  கோகுல்ராஜை 23ம் தேதி பார்க்கவில்லை என்றீர்கள். ஆனால், வாக்குமூலத்தில் என்ன சொல்லியிருக்கிறீர்கள்’’ என்றனர்.இதையடுத்து,  ‘போலீசார் எழுதிக் கொடுத்ததை மாஜிஸ்திரேட்டிடம் கூறினேன்’ என்றும் தெரிவித்தார்.  அப்போது ஸ்வாதி பேசியது தொடர்பான ஆடியோவை போட்டுக் காட்டிய பின்னர் நீதிபதிகள், ‘‘இந்த ஆடியோவில் உள்ளது யாருடைய குரல்’’ என்றனர். இதற்கு, ‘‘நான் பேசவில்லை. அது எனது குரல் அல்ல’’ என்றார். ‘‘அப்படியானால் உங்களது குரலை பதிவு செய்து பரிசோதனைக்கு அனுப்ப வேண்டி வரும்.  அப்போது நீதிபதிகள், ‘‘யுவராஜ் யார் என்பது உங்களுக்கு தெரியுமா’’ என்றனர். இதற்கு, ‘‘சமீபத்தில் தான் தெரியும். அந்த வழக்கு துவங்கியபோது யார் என்று தெரியாது. அதிக அழுத்தத்தால் பல விஷயங்கள் என் நினைவில் இல்லை’’ என்றார். அப்போது நீதிபதிகள், ‘‘உங்களுக்கு அழுத்தம் எங்கிருந்து வந்தது. காவல்துறையிடமிருந்தா? குற்றவாளிகள் தரப்பிலா’’ என்றனர். ‘‘காவல்துறை சொன்னதை செய்தேன்’’ என்றார் ஸ்வாதி. நீதிபதிகள்,  ‘‘நீங்கள் உண்மையை மறைத்து, வேண்டுமென்றே கூறுகிறீர்கள். நீதிமன்றத்தை விளையாட்டு மைதானம் என்று நினைக்க வேண்டாம்.  உங்கள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப் போகிறோம். உண்மையை சொல்லுங்கள்’’ என்றனர். இதற்கு, ‘‘நான் என்ன அவமதிப்பு செய்தேன்’’ என்றார்.இதற்கு நீதிபதிகள், ‘‘நீதிமன்றத்தில் உண்மையை மறைப்பதும் அவமதிப்பு தான். ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் முக்கியமானது நியாயம், தர்மம், சத்தியம். சாதியோ, மதமோ அல்ல. உங்கள் புகைப்படத்தைப் பார்த்து யாரென தெரியவில்லை என்கிறீர்கள். எல்லோரையும் முட்டாள் என நினைக்கிறீர்களா? நீதிமன்றம் உங்களிடமிருந்து உண்மையை மட்டுமே எதிர்பார்க்கிறது. வீடியோவில் உங்களையே பார்த்து தெரியாது என்கிறீர்கள். எவ்வளவு நாட்கள் உண்மையை மறைக்க முடியும்? குழந்தை மீது சத்தியம் செய்து விட்டு, உங்களைப் பார்த்து நீங்களே தெரியாது எனக் கூறினால் எப்படி? நீதிமன்றம் குறித்து என்ன நினைக்கிறீர்கள்? நீங்கள் ஒரு பொறியியல் பட்டதாரி. எது சரி, எது தவறு என்பது உங்களுக்குத் தெரியும். கீழமை நீதிமன்றத்தைப் போல இந்த நீதிமன்றம் எளிதாக கடந்து செல்லாது. காவல்துறையினர், அரசு வழக்கறிஞர்கள் மிரட்டினார்கள் என்பதைத் தாண்டி, மாஜிஸ்திரேட் முன் வாக்குமூலம் அளித்துவிட்டு, இப்போது மிரட்டினார்கள் என்றால் எப்படி? இதையும் தாண்டி உண்மையை மறைத்தால், நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டிய சூழல் ஏற்படும். உண்மையை கூறினால், ஏதேனும் அழுத்தமோ, பிரச்னையோ ஏற்படுமானால் அதையும் கூறுங்கள்’’ என்றனர்.உடனே ஸ்வாதி, ‘‘எனக்கு தெரிந்தவற்றை எல்லாம் கூறிவிட்டேன்’’ என்றார். இதையடுத்து நீதிபதிகள், ‘‘சத்தியம் என்றைக்காக இருந்தாலும் சுடும்’’ என்றனர். பின்னர், ‘‘அந்தப் பெண், அவரது பெற்றோர் மற்றும் குடும்பத்தினருக்கு வழங்கப்பட்ட போலீஸ் பாதுகாப்பை தொடர்ந்து வழங்கவேண்டும். காவல்துறையோ, குற்றவாளிகள் தரப்பிலோ அவரை எந்த வகையிலும் அணுகக்கூடாது’’ எனக் கூறி விசாரணையை நவ. 30க்கு தள்ளி வைத்தனர். அப்போது ஸ்வாதியை மீண்டும் ஆஜர்படுத்த ேவண்டுமென உத்தரவிட்டனர்.மயங்கிய ஸ்வாதிநீதிபதிகள், ஸ்வாதியிடம் அடுத்தடுத்து கேள்விகளை கேட்டபடி இருந்தனர். ஒரு கட்டத்தில், ‘‘உண்மையைக் கூற உங்களுக்கு கடைசியாக ஒரு வாய்ப்பு தருகிறோம். யோசித்து கூறுங்கள்’’ எனக்கூறி நீதிபதிகள் எழுந்து சென்றனர். அப்போது ஸ்வாதி, திடீரென தனக்கு மயக்கம் வருவதாகக் கூறி, சாய்ந்து அமர்ந்தார். இதையடுத்து அவரை, ஐகோர்ட் கிளை வளாகத்தில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று, பரிசோதித்து மருந்துகள் வழங்கப்பட்டன. பின்னர் அவரிடம் விசாரணை தொடர்ந்தது….

The post கோகுல்ராஜ் கொலை வழக்கில் பிறழ்சாட்சியான ஸ்வாதி ஆஜர் உண்மையை மறைத்தால் அவமதிப்பு நடவடிக்கை: ஐகோர்ட் கிளை நீதிபதிகள் கடும் எச்சரிக்கை appeared first on Dinakaran.

Tags : Swati Aajar ,Gokulraj ,Madurai ,Swathi ,Ekalai ,Dinakaran ,
× RELATED கோகுல்ராஜ் ஆணவக்கொலை வழக்கில் ஆயுள்...