×

பூமி ஒளிப்பதிவாளர் டட்லி

இந்த உலகத்தில் கடவுளின் படைப்புகள் எத்தனையோ இருக்ன்றன.  நாம் வசிக்கும் இந்த அழகான பூமி கடவுளின் அற்புதப் படைப்பு. மலைப்பிரதேசமான கோத்தகிரி அருகில் உள்ள ஜக்கநாரை என்ற அழகிய கிராமம்தான் நான் பிறந்த இடம். நிஜப் பெயர் ராஜேந்திரன். நிக்நேம் டட்லி. எனக்கு சினிமா பின்னணி என்று பெரிதாக எதுவும் இல்லை. இயல்பாகவே எனக்கு படிப்பு மீது ஆர்வம் அதிகம். பள்ளி நாட்களில் டாக்டராக வர வேண்டும் என்று நினைத்தேன். ப்ளஸ் டூவில் நல்ல மார்க் கிடைத்தது. ஆனால் கட் ஆஃப் மார்க் போதவில்லை. பல் மருத்துவத்துக்குத்தான் சீட் கிடைத்தது. ஆனால் எனக்கு அதில் சேர விருப்பமில்லாமல் இருந்தது. பிறகு அக்ரிகல்ச்சரில் சேரும் வாய்ப்பு கிடைத்தது. அதையும் நிராகரித்துவிட்டேன்.

அந்த சமயத்தில்தான் என்னுடைய அண்ணன் போஜன் எனக்குள் சினிமா விதையைத் தூவினார். அந்தவகையில் நான் சினிமாவுக்கு வரக் காரணமாக இருந்தவர் என்னுடைய அண்ணன்.அவர் தரமணி அருகில் உள்ள பிரபல கல்லூரியில் காமர்ஸ் படித்தார். அவருடைய கல்லூரி அருகில்தான் திரைப்படக் கல்லூரியும் இருந்தது. அது கல்லூரிகள் சூழ்ந்த பகுதி என்பதால் பேச்சுலர்ஸ் கூட்டாக அறை எடுத்து தங்குவதுண்டு. அப்படி என் அண்ணனுக்கு ராபர்ட் ராஜசேகர், ‘ஒருதலை ராகம்’ சங்கர், நடிகர் ரவீந்தர் போன்றவர்கள் நண்பரானார்கள்.

அவர்களுடன் பழகிய அண்ணன் எனக்கு சினிமா செட்டாகும் என்று நினைத்து தரமணி   பிலிம் இன்ஸ்டிடியூட்டில் டி.எஃப்.டி சேர்த்துவிட்டார்.கல்லூரி முடிந்ததும் ஒளிப்பதிவாளர் ரவியாதவ் சாரிடம் உதவியாளராகச் சேர்ந்தேன். ‘குற்றப்பத்திரிகை’, ‘செம்பருத்தி’, ‘கண்மணி’ போன்ற படங்களில் வேலை செய்தேன். பிறகு டில்லி போய்விட்டேன். அங்கு ஒளிப்பதிவாளரும் இபோதைய தமிழ் சினிமாவின் ஹீரோவுமான நட்டியின் நட்பு கிடைத்தது. ஒளிப்பதிவாளராக என்னுடைய முதல் சினிமா பயணம் இந்தியில் ஆரம்பித்தது. அந்த வகையில் நான் பாலிவுட்டுக்குச் செல்லக் காரணமாக இருந்தவர் நட்டி.நட்டியின் முதல் இந்திப் படத்தில் நான் வேலை செய்திருக்கிறேன்.

அவருடைய எல்லா படங்களிலும் எனக்கு க்ளாஷ் ஒர்க் கொடுப்பார். ‘கோல்மால்-2’ படத்தில் நட்டியுடன் இணைந்து வேலை செய்யும்போது ரோகித் ஷெட்டியின் நட்பு கிடைத்தது. அதன்பிறகு ரோகித் ஷெட்டி எடுத்த படத்தில் நட்டியால் வேலை செய்ய முடியவிலலை. அந்தப் படத்துக்கு நட்டி என்னைத்தான் சிபாரிசு செய்தார். அப்படி ரோகித் ஷெட்டியுடன் ஏழு படங்கள் பண்ணிவிட்டேன். இந்தியில் ‘சிங்கம்’, ‘சென்னை எக்ஸ்பிரஸ்’ உட்பட சுமார் 12 படங்கள் முடித்துள்ளேன்.தமிழில் விஜய்சேதுபதி நடித்த ‘ஜூங்கா’ என்னுடைய முதல் படம். அடுத்து விஷால் நடித்த ‘ஆக்‌ஷன்’.  

இப்போது ஜெயம் ரவி நடிக்கும் ‘பூமி’. தமிழ்ப் படங்கள் பண்ணணும் என்ற நோக்கத்துடன் பாலிவுட்டிலிருந்து கோலிவுட்டுக்கு வந்தேன். ரஜினி சார் ஆல்டைம் ஃபேவரைட். அவர் படம் பண்ணணும். இல்லையென்றாலும் தமிழில் தொடர்ந்து படங்கள் பண்ணணும். எனக்கு திருமணமாகி மனைவி, பிள்ளைகள் இருக்கிறார்கள். மனைவி பீனா. மகன் பிரணவ், மகள் கார்னிஷா. ஒளிப்பதிவாளர்களில் பி.சி.சாரை பிடிக்கும். அதேபோல் நட்டியையும் பிடிக்கும். நட்டியின் கம்போஸிஷன் சூப்பராக இருக்கும்.இந்த பூமியில் எல்லோரும் சுயநலமிக்கவர்கள் என்ற பேச்சு உண்டு. ஆனால் என்னுடைய விஷயத்தில் அதுபோன்றவர்களைச் சந்திக்கவில்லை.

எனக்கு விரல் விட்டு எண்ணக்கூடிய நண்பர்கள்தான் இருக்கிறார்கள். அதில் ஒருவர் நட்டி. அவர் மாதிரி நண்பர் கிடைப்பது அரிதிலும் அரிது. நான் வேலை முடித்த கையோடு அழைக்கும் முதல் நண்பர் அவராகத்தான் இருக்கும். அதேபோல் அவர் வேலை முடித்ததும் அழைக்கும் முதல் நண்பர் நானாகத்தான் இருப்பேன். வேலை நேரத்தில் நான் இல்லாமல் அவர் சாப்பிட்டது இல்லை. அவர் இல்லாமல் நான் சாப்பிட்டது இல்லை. சில சமயங்களில் சேர்ந்து சாப்பிடுவதற்கு எனக்காக வெயிட் பண்ணுவார்.

அந்த மாதிரி நண்பர் எனக்கு கிடைத்திருப்பது வரம். இந்த பூமியில் எத்தனையோ மனிதர்கள் இருக்கிறார்கள். ஒருவரைப் போல் ஏழு பேர் இருப்பார்கள் என்றெல்லாம் சொல்வார்கள். ஆனால் நட்டி தனித்துவமானவர்.இந்த பூமியில் என் வளர்ச்சியைப் பார்த்து சந்தோஷப் பட ஆசைப்பட்டவர் அப்பா, அம்மா. அடுத்ததாக அண்ணன். நண்பன் நட்டி. அவர்களுக்கு என் வளர்ச்சியில் சந்தோஷம்.

‘பூமி’யில் ஜெயம் ரவியுடன் பழகும் வாய்ப்பு கிடைத்தது. அவர் என்னுடைய குடும்ப நண்பர். ரவியின் மனைவி ஆர்த்தி சின்ன வயதிலிருந்து பழக்கம். ஆர்த்தியின் அப்பா ‘கல்பனா ஹவுஸ்’ விஜயகுமார் சாருடன் வேலை பார்த்துள்ளேன். அந்த வகையில் ரவியுடன் வேலை செய்வது குளோஸ் டு மை ஹார்ட். ரவி மட்டுமில்ல, அவருடைய அண்ணன் ஜெயம் ராஜாவுடனும் எனக்கு பழக்கம் உண்டு.இந்த பூமியில் நிலையானது என்று எதுவுமில்லை. அதுபோல் அடுத்து இயக்குநராக மாறுவீர்களா என்று கேட்கிறார்கள். அதற்கு காலம்தான் பதில் சொல்ல வேண்டும்.

Tags : Dudley ,Earth ,
× RELATED சித்ரா பௌர்ணமி ஏன் கொண்டாடப்படுகிறது?