×

ஒரு நொடி விமர்சனம்

சாதாரண மனிதனின் வாழ்க்கையில் ஒரு நொடியில் ஏற்படும் மாற்றம், அவனது எதிர்காலத்தை எப்படி சுக்குநூறாக உடைக்கிறது என்பதைச் சொல்லும் முழுநீள சஸ்பென்ஸ் திரில்லர் படம் இது. தனது மகளின் திருமணத்தை கவுரவமாக நடத்த லட்சக்கணக்கில் கடன் வாங்கிய மிடில் கிளாஸ் ஸ்டுடியோ ஓனர் எம்.எஸ்.பாஸ்கர், ஆளுங்கட்சி எம்எல்ஏ பழ.கருப்பையாவின் ஆதரவுடன் அட்டூழியம் செய்யும் கந்துவட்டி தாதா வேல.ராமமூர்த்தியிடம் தனது நிலத்தை அடமானம் வைக்கிறார். குறித்த நாளில் 8 லட்ச ரூபாயை திருப்பிக் கொடுப்பதற்காக செல்லும் அவர், திடீரென்று காணாமல் போகிறார். இதை தொடர்ந்து அவரது மனைவி ஸ்ரீரஞ்சனி போலீசில் புகார் செய்கிறார். இந்த வழக்கை நேர்மையான இன்ஸ்பெக்டர் தமன் குமார் விசாரிக்கும்போது, திடீரென்று ஒரு இளம்பெண் மர்மமான முறையில் கொலை செய்யப்படுகிறார். இவ்விரு சம்பவங்களும் வெவ்வேறானவை.

ஆனால், தமன் குமார் உண்மையைக் கண்டறியும்போது ஏற்படும் எதிர்பாராத சம்பவங்கள், ரசிகர்களை இருக்கையின் நுனிக்கு வரவழைக்கிறது. கிளைமாக்ஸ், உண்மையிலேயே யாராலும் கணிக்க முடியாதது. தமன் குமாரின் திரைப்பயணத்தில் மறக்க முடியாத படம் இது. கேரக்டரை உணர்ந்து, அதிகார வர்க்கத்தை எதிர்க்கும் துணிச்சலான போலீஸ் அதிகாரியாக இயல்பாக நடித்துள்ளார். குற்றவாளிகளை அவர் விசாரிக்கும் ஸ்டைல், கதைக்கு நியாயம் சேர்க்கிறது. எம்.எஸ்.பாஸ்கர், ரஞ்சனி ஜோடியின் நடிப்பு படத்துக்கு மிகப்பெரிய பலம். வேல.ராமமூர்த்தியும், பழ.கருப்பையாவும் வழக்கமான கந்துவட்டி தாதாவையும், அரசியல்வாதியையும் பிரதிபலிக்கின்றனர். மகளை இழந்து தவிக்கும் தீபா சங்கரும், அவரது கணவரும் உருக வைக்கின்றனர். அவர்களது மகள் நிகிதா மற்றும் அருண் கார்த்திக், விக்னேஷ் ஆதித்யா, கஜராஜ், கருப்பு நம்பியார் போன்றோர், அந்தந்த கேரக்டருக்கு கச்சிதமாகப் பொருந்தியுள்ளனர்.

படம் முழுக்க ஏகப்பட்ட ட்விஸ்ட்டுகள் இருக்கின்றன. இவர்தான் குற்றவாளியோ என்று நினைக்க வைத்திருப்பதே இயக்குனர் பி.மணிவர்மனின் புத்திசாலித்தனம். வன்முறை, ஆபாசம், குத்துப்பாடல் காட்சிகளின்றி, 2 மணி நேரமும் படத்தைப் பார்க்க வைத்திருப்பது அவரது சாதனை. கே.ஜி.ரத்தீஷின் ஒளிப்பதிவு காட்சிக்கு ஏற்ப பயணித்துள்ளது. சஞ்சய் மாணிக்கத்தின் பின்னணி இசை கதையின் நகர்வுக்கு உதவியுள்ளது. ஒரு நொடியில் சிதறும் நமது கவனம், தொடர்ந்து பல தவறுகளை செய்ய வைக்கிறது என்று சொல்லும் இயக்குனர், காட்சிகளின் விறுவிறுப்பை மேலும் அதிகரித்து இருந்தால், இன்னும் கூட படம் கவனிக்கப்பட்டிருக்கும்.

The post ஒரு நொடி விமர்சனம் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : -Glass ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED சமந்தா வெளியிட்ட நிர்வாண போட்டோ: ரசிகர்கள் கடும் அதிர்ச்சி