×

மெரினாவை கலக்கும் மீன் சாப்பாட்டுக் கடை

மெரினா கடற்கரையில், நீச்சல் குளத்திற்கு  அருகில், எம்.ஜி.ஆர். நூற்றாண்டு வளைவு  நேரெதிரில் உள்ள  சர்வீஸ்  ரோடு வழியாக  வந்தால் ஒரு பத்தாவது கடை கோவிந்தம்மாள் சாப்பாட்டு கடை. இங்கே சைவம், அசைவம் இரண்டுமே கிடைக்கும். அதிலும், இங்கே  கிடைக்கும் தேங்காய் பாறை  மீன் 65 சுவைக்காகவே திருவான்மியூர், கொட்டிவாக்கம்,  ஆவடி போன்ற இடங்களில் இருந்து உணவுப் பிரியர்கள்  தேடி வந்து உண்டு செல்கிறார்கள்.  அதன் உரிமையாளர்  ராஜாவிடம் பேசினோம்.“22 ஆண்டுகளுக்கு முன்பு என்  அம்மா  கோவிந்தம்மாள் மெரினா  கடற்கரையில் இருந்த கடையில்  வேலை பார்த்து வந்தார்.  அப்போது, கடற்கரைக்கு வருபவர்கள்  பலரும்  உணவின்றி  தவிப்பதையும்,  நல்ல உணவு தேடி  வெகுதூரம் செல்ல வேண்டியிருப்பதையும் கண்டார்.  அப்போதுதான் இந்த சாப்பாட்டுக் கடை  தொடங்கலாம் என்ற எண்ணம்  அவருக்கு தோன்றியது.ஆரம்பத்தில்  வீட்டிலேயே  உணவுகளை தயார்  செய்து, பொட்டலங்களாக  கட்டி  எடுத்து வந்து  விற்க தொடங்கினார்.  அதற்கு  நல்ல வரவேற்பு கிடைத்தது.  உணவு  பொட்டலங்கள் விரைவிலேயே விற்று  தீர்ந்துவிடும். அதன்பிறகும்  நிறைய பேர்  உணவு  கேட்டு வருவார்கள்.  அப்போதுதான்,  அங்கேயே உணவகம் தொடங்க வேண்டும் என்று அம்மா நினைத்தார். அப்போது எனக்கு 15 வயது. நானும் அம்மாவுக்கு உதவியாக வருவேன்.கடை தொடங்கிய காலத்தில்  ஒரு சாப்பாடு 20 ருபாய்க்கு கொடுத்து வந்தோம். இப்போது அன்லிமிடடெட் உணவு 60 ரூபாய்க்கு  வழங்குகிறோம். ஸ்பெஷல் மீல்ஸ்  100 ரூபாய்  விலையிலும் வழங்கி வருகிறோம். ரூபாய் 60 உணவில் அவித்த முட்டை,  மீன் குழம்பு, நண்டு குழம்பு, சாம்பார்,  ரசம் பொரியல், ஊறுகாய்  இருக்கும்.  100 ரூபாய்  ஸ்பெஷலில் குழம்பு மீன், மீன் வறுவல்  கூடுதலாக இருக்கும். சைடிஷ் பொருத்தவரை,  அன்னைக்கு, மீன், இறால் எல்லாம்  என்ன விலையோ, அதுக்கு தகுந்தபடி விலை வைப்போம். ஆனால், அதுவும் குறைந்த விலையில் தான் இருக்கும். இதைத்தவிர, நண்டு,  இறால்,  கடம்பா, வஞ்சிரம்  வழங்கி வந்தோம்.  உணவு  அருந்த வருபவர்கள்,  சிக்கன், மட்டன்  இல்லையா  என்று கேட்டதால், இப்போது அதுவும்  வழங்கி வருகிறோம்.  இதைத் தவிர  இறால்  ரைஸ்,  மீன் ரைஸ் சிக்கன் நூடுல்ஸ்,  சிக்கன் ரைஸ், வெஜ் ரைஸ், காலிப்ளவர் ரைஸ், கேபி மஞ்சூரியன்  போன்றவை மதியத்தில்  தருகிறோம். இரவில் டிபன் இருக்கும், இட்லி, தோசை, முட்டை தோசை, இறால் தோசை, சிக்கன் தோசை, மட்டன் தோசை, கடம்பா தோசை, போன்றவை ஸ்பெஷலாக இருக்கும்.இதைத்தவிர, எங்களது கடையின்  ஸ்பெஷல்  தேங்காய் பாறை  மீன் 65.  இது  பெரிய ஹோட்டல்களிலும்  கிடைக்காது. அதுபோன்று நெத்திலி ப்ரை, நண்டு ரொம்ப பேமஸ். தினசரி காசி மேடுக்கு சென்று மீன், இறால் என்று ஒவ்வொரு வகையிலும் 5 கிலோவும், ஞாயிற்றுக் கிழமையில் 10 கிலோவும் வாங்கி வருவோம். அவை  அன்றே விற்றுவிடும். இங்கே   சாப்பிடுபவர்களுக்கு  உடலுக்கு எந்த கேடும் ஏற்படாத வகையில் வீட்டில்  சமைப்பது போன்று பார்த்து பார்த்து சமைக்கிறோம். அதுபோல, கடலெண்ணெய் மற்றும் ரீபைன்ட் எண்ணெயில்தான் சமைக்கிறோம். அதனால், உணவு தரமானதாக இருக்கும். இது திறந்தவெளி  உணவகம் என்பதால், மக்கள்  கண் முன்புதான் சமைக்கிறோம். அதிலேயே  அதன்  தரம் உணவு அருந்துபவர்களுக்கு நன்றாகவே தெரியும். இரவு பத்து மணி வரை உணவுகள் வழங்குகிறோம். அதுபோன்று  தினமும்  பத்து பேருக்காவது  இலவசமாக  உணவுகளை கொடுத்துவிடுவோம்.எங்களிடம் 10 பேர் வேலை பார்க்கிறார்கள். இவர்கள் உணவகங்களில் பலவருடம் வேலை செய்த அனுபவமுள்ளவர்கள்.  அவர்களுக்கான சம்பளமும் இந்த உணவ க வருமானத்தில்தான் தர வேண்டும். அதுபோன்று, மழைக்காலங்களிலும், காற்று  அதிகமாக இருக்கும்போது கடையை நடத்த முடியாது.  மூடிவிட்டுதான் செல்ல வேண்டும். அதனால் இதில் பெரிய லாபமும் இல்லை. அதே சமயம் பெரிய நஷ்டமும் இல்லை. கொரோனா லாக்டவுன் போதுதான் பெருத்த நஷ்டம் ஏற்பட்டது. அதிலிருந்து இப்போதுதான் கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வருகிறோம். லாக்டவுன்  தளர்த்தி இவ்வளவு நாள் ஆகியும் மக்கள் இன்னும் தைரியமாக உணவு அருந்த வருவதில்லை.  இப்போதுதான் கொஞ்சம் வர தொடங்கியிருக்கிறார்கள்.  எங்கள் கடையில் சாப்பிட வருபவர்கள் வயிறார சாப்பிட்டுவிட்டு போக வேண்டும். இதுதான் எங்கள் நோக்கம். பலர்  உங்கள் கடையில் சாப்பிடுவதற்காகவே, காஞ்சிபுரத்தில் இருந்து வந்தேன் என்பார்கள்.  சிலர்,  போன் செய்து  கடை இருக்கிறதா என்று கேட்டுக் கொண்டு வருவார்கள். உணவு அருந்த வருபவர்கள் மெரினாவை தவிர, தி.நகர்  ஜீவா பார்க் அருகிலும், வள்ளுவர்கோட்டம் அருகிலும்,  கடை வைத்து நடத்தி வருகிறாம். அதற்கும் நல்ல வரவேற்பு இருக்கிறது.ஹோட்டல் ஸ்டைல் மீன் சுக்கா தேவை:வஞ்சிர மீன் – அரை கிலோ (முள் எடுத்தது) சோள மாவு – 3 டேபிள் ஸ்பூன்அரிசி மாவு – 2 சிட்டிகைவெங்காயம் – 1தக்காளி – 1 மிளகுத்தூள்  1 டீஸ்பூன் பட்டை – 1 துண்டு கிராம்பு – 5 ஏலக்காய் – 3 சோம்பு – 1 டீஸ்பூன் எலுமிச்சை சாறு – 1 டேபிஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது – 1 டீஸ்பூன் கறிவேப்பிலை – சிறிதளவுகொத்தமல்லி -கைப்பிடிஎண்ணெய்- பொரித்தெடுக்கஉப்பு – தேவைக்கு.செய்முறை: ஒரு கிண்ணத்தில், அரிசி மாவு, கார்ஃபிளவர் மாவு, எலுமிச்சைச் சாறு, மிளகுத்தூள், உப்புடன் கொஞ்சம் தண்ணீர் சேர்த்து கரைத்து கொள்ளவும். இதில், மீன் துண்டுகளை போட்டு கலந்து அரை மணி நேரம் ஊறவைக்கவும். ஒரு வாணலியில், எண்ணெய் ஊற்றி சூடானதும், மீன் துண்டுகளை சுத்தமாக கழுவி அதில் சேர்த்து, இரண்டு பக்கமும் வறுத்து தனியாக எடுத்துக்கொள்ளவும். அதே வாணலியில், எண்ணெய் ஊற்றி சூடானதும் பட்டை, கிராம்பு, ஏலக்காய், சோம்பு ,சீரகம் சேர்த்து பொரிக்கவும். கூடவே, பொடியாக நறுக்கிய வெங்காயம், இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும்வரை வதக்கவும். தக்காளி சேர்த்து வேகா வைத்ததும், மஞ்சள் தூள், சீரகத்தூள், மல்லித்தூள், மிளகுத்தூள், உப்புடன் கொஞ்சம் தண்ணீர் சேர்த்து பச்சைவாசனை போகும்வரை வதக்கவும். பின்னர், வறுத்துவைத்த மீன் துண்டுகளை சேர்த்து நன்றாக கிளறி மிதமான சூட்டில் வேக வைக்கவும்.  தனியாக தோசைகல்லில் சுக்காவை குறைவான அனலில் சுண்ட வைத்தால் சுக்கா இன்னும் சுவையாக இருக்கும்.  இறுதியாக, கொத்தமல்லி தூவி இறக்கினால் மீன் சுக்கா ரெடி..!….

The post மெரினாவை கலக்கும் மீன் சாப்பாட்டுக் கடை appeared first on Dinakaran.

Tags : Marina ,Marina Beach ,M. GG R.R. ,ServiceRoad ,Marina Mixing Fish Shop ,Dinakaran ,
× RELATED மெரினாவை சுற்றிப் பார்க்க அழைத்து...