×

சிறுநீரக செயலிழப்பு காரணமாக காலிஸ்தானி தீவிரவாதி பாகிஸ்தானில் மரணம்: இந்திய உளவுத் துறை தகவல்

புதுடெல்லி: பாகிஸ்தானில் பதுங்கியிருந்த காலிஸ்தானி தீவிரவாதி ஹர்விந்தர் சிங் ரிண்டா சிறுநீரக செயலிழப்பு காரணமாக உயிரிழந்ததாக இந்திய உளவுத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன. இந்தியாவில் தடை செய்யப்பட்ட காலிஸ்தானி தீவிரவாத அமைப்பான ‘பாபர்  கல்சா இன்டர்நேஷனல்’ அமைப்பின் உறுப்பினராக ஹர்விந்தர் சிங் ரிண்டா என்பவன்  இருந்தான். இந்த ஆண்டு மே மாதம், மொஹாலியில் உள்ள பஞ்சாப் போலீஸ்  உளவுத்துறை தலைமையகத்தில் ராக்கெட் புரொபல்டு க்ரெனேட் (ஆர்பிஜி)  தாக்குதலின் பின்னணியில் ஹர்விந்தர் சிங் ரிண்டா பெயரும் இடம்பெற்றது.  பாகிஸ்தானில் பதுங்கியிருந்த ஹர்விந்தர் சிங் ரிண்டாவை இந்திய போலீசார்  தேடி வந்தனர். இந்நிலையில் பாகிஸ்தானில்  ஹர்விந்தர் சிங் ரிண்டாவை கொன்றதாக பாம்பிஹா கும்பல் சமூக வலைதளங்களில் தெரிவித்துள்ளன. ஆனால் சிறுநீரக செயலிழப்பு காரணமாக  ஹர்விந்தர் சிங் ரிண்டா இறந்ததாக புலனாய்வு அமைப்புகள் கூறுகின்றன. இதுகுறித்து உளவுத்துறை வட்டாரங்கள் கூறுகையில், ‘கடந்த 15 நாட்களுக்கு முன்பு,  ஹர்விந்தர் சிங் ரிண்டா பாகிஸ்தானில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தற்போது சிகிச்சை பலனின்றி இறந்தான். பஞ்சாபின் டர்ன் தரன் மாவட்டத்தைச் சேர்ந்த  ஹர்விந்தர் சிங், இந்தியாவில் பல்வேறு குற்றங்களை செய்துவிட்டு, போலி பாஸ்போர்ட் மூலம் நேபாளம் வழியாக பாகிஸ்தானுக்கு தப்பிவிட்டான். 2011ல் டர்ன் தரனில் நடந்த இளைஞன் கொலை வழக்கில் அவனுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. 2014ல் பாட்டியாலா மத்திய சிறை அதிகாரிகளை தாக்கி வழக்கு உள்ளது. இதுமட்டுமின்றி 2016 ஏப்ரலில் சண்டிகர் பல்கலைக்கழக மாணவர் அமைப்பின் தலைவரை துப்பாக்கியால் சுட்ட வழக்கு, 2017ல் ஹோஷியார்பூர் பஞ்சாயத்து தலைவரை கொன்ற வழக்கு உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. பாகிஸ்தானில் பதுங்கியிருந்த ஹர்விந்தர் சிங் ரிண்டாவுக்கு அந்நாட்டு உளவு அமைப்பான ஐஎஸ்ஐயின் ஆதரவு கொடுத்தது. இதுதவிர, பாகிஸ்தான் தீவிரவாத கும்பலுடன் சேர்ந்து இந்தியாவுக்கு எதிராக குற்றச்செயல்களையும் ஹர்விந்தர் சிங் ரிண்டா செய்து வந்தான். இந்த நிலையில் பல வழக்குகளில் தேடப்பட்ட அவன், பாகிஸ்தானில் இறந்தான்’ என்று கூறின….

The post சிறுநீரக செயலிழப்பு காரணமாக காலிஸ்தானி தீவிரவாதி பாகிஸ்தானில் மரணம்: இந்திய உளவுத் துறை தகவல் appeared first on Dinakaran.

Tags : Pakistan ,New Delhi ,Harwinder Singh Rinda ,Dinakaran ,
× RELATED தேர்தலுக்கு பிறகு நல திட்டங்களில்...