×

காட்சிகளை ஸ்பாய்லர் செய்த ரசிகர் கான்ஜூரிங் ஓடும் தியேட்டரில் தம்பதிக்கு அடி, உதை

புனே: புனேயில் உள்ள சின்ச்வாட் பகுதியில் மல்டிபிளக்ஸ் தியேட்டர் ஒன்றில் ‘கான்ஜுரிங் – லாஸ்ட் ரைட்ஸ்’ ஹாலிவுட் படம் ஓடிக்கொண்டிருந்தது. இந்த படத்தை அப்பகுதியை சேர்ந்த இன்ஜினியர் ஷியாம், தனது மனைவி மற்றும் தங்கையுடன் பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது அவர்களுக்கு பின்னால் சீட்டில் இருந்த நபர், தனது மனைவியிடம் படத்தில் வரும் அடுத்தடுத்த காட்சிகளை பற்றி விவரித்துக் கொண்டிருந்தார்.

அவர் ஏற்கனவே படத்தை பார்த்துவிட்டு இரண்டாவது முறையாக பார்த்துக் கொண்டிருந்தார். இதனால் ஷியாமுக்கு இடைஞ்சல் ஏற்பட்டது. அவர் அந்த நபரிடம் அடுத்து வரும் காட்சிகளை முன்கூட்டியே சொல்வது எங்களுக்கு பிரச்னையாக உள்ளது. கதையை ஸ்பாய்லர் செய்ய வேண்டாம் என்றார். ஆனால் அந்த நபர், அதை கேட்காமல் மீண்டும் சத்தமாக காட்சிகளை விவரிக்க தொடங்கினார். இதனால் அந்த நபருக்கும் ஷியாமுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

வாய்த்தகராறு முற்றியதில் அந்த நபர் ஷியாமை கடுமையாக தாக்கினார். அதை தட்டிக் கேட்ட ஷியாமின் மனைவியையும் அந்த நபரும் அவரது மனைவியும் தாக்கினார்கள். இதனால் தியேட்டரில் பரபரப்பு நிலவியது. காயம் அடைந்த ஷியாமும் அவரது மனைவியும் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர். பிறகு சின்ச்வாட் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் தாக்குதல் நடத்திய அமித் என்பவரை கைது செய்தனர்.

Tags : Pune ,Hollywood ,Chinchwad ,Shyam ,
× RELATED டியர் ரதி பிரச்னையில் சிக்கும் டேட்டிங் ஜோடி