×

ஆன்லைன் கோளாறால் பணம் செலுத்த முடியவில்லை அபராதத்துடன் மின் துண்டிப்பை கைவிட வேண்டும்-குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் வேண்டுகோள்

பெரம்பலூர் : ஆன்லைன் கோளாறு ஏற்பட்டு அபராதத்துடன் மின் துண்டிப்பு செய்துவரும் நிலையை கைவிட வேண்டும் என பெரம்பலூரில் நடந்த மின் நுகர்வோர் குறைதீர் கூட்டத்தில் தமிழக விவசாயிகள் சங்கம் வேண்டுகோள் விடுத்தனர்.பெரம்பலூர் 4 ரோடு அருகேயுள்ள தமிழ்நாடு மின்சார வாரிய பெரம்பலூர் கோட்டப் பொறியாளர் அலுவலக கூட்ட அரங்கில் மின் நுகர்வோர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. பெரம்பலூர் கோட்ட செயற்பொறியாளர் அசோக்குமார் வரவேற்றார். தமிழ்நாடு மின்சாரவாரிய பெரம்பலூர் மின் பகிர்மான வட்ட மேற்பார்வைப்பொறியாளர் அம்பிகா தலைமை வகித்தார். கூட்டத்தில் தமிழக விவசாயிகள் சங்க மாநிலச் செயலாளர் ராஜா சிதம்பரம் தலைமையில், மாவட்ட செயலாளர் நீலகண்டன் உள்ளிட்ட விவசாயிகள் கூட்ட அரங்கின் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். பின்னர் அளித்தக் கோரிக்கை மனுவில் தெரிவித்திருப்பதாவது:தமிழ்நாடு முழுவதும் நல்ல மழை பெய்து, நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்துள்ள நிலையில், மேலும் 1 லட்சம் விவசாயிகளுக்கு மின்னிணைப்பு வழங்கிட இலக்கீடு ஒதுக்கீடு செய்ய தமிழக முதல்வரை கேட்டுக்கொள்கிறோம். பெரம்பலூர் மாவட் டத்தில் தயார் நிலை பதிவேட்டில் பதிவு செய்து நோட்டீஸ் கொடுக்கப்பட்டு மின் இணைப்பு வழங்காமல் காத்திருக்கும் 558 விவசாயிகளுக்கு விரைந்து மின் இணைப்பு வழங்கிட வேண்டும். தமிழகம் முழுவதும் 52472 விவசாய மின் இணைப்பு வழங்க இலக்கீடு நிர்ணயம் செய்ததில் பெரம்பலூர் மாவட்டத்தில் ட்ரான்ஸ் பாரம், கம்பம், கம்பி இல்லாமல் மின் இணைப்பு வழங்க முடியாமல் தடைபட்டு பாதிக்கப்பட்டிருக்கும் விவசாயிகளுக்கு துரிதமாக மின் இணைப்பு வழங்க தேவையான சாமான்களை வழங்க கேட்டுக்கொள்கிறோம்.பெரம்பலூர் மின் கட்டண வசூல் மையத்தில் நுகர்வோர் நலன் கருதி முன்பு போல் மூன்று பேரை பணி புரிய அனுமதிக்க வேண்டும். ஆன்லைன் மூலம் மின் கட்டணம் செலுத்தி வருபவர்கள் சில நேரங்களில் ஆன்லைனில் கோளாறு ஏற்பட்டு அபராதத்துடன் மின் துண்டிப்பு செய்து வரும் நிலையை கைவிட வேண்டும். வசூல் மையங்கள் மூலம், மின் கட்டணம் ரூ.2 ஆயிரத்திற்கு மேல் செலுத்தவுள்ள மின்நுகர்வோர், கட்டாயம் ஆன்லைன் மூலம் தான் மின் கட்டணம் கட்ட வேண்டும் என மின் வாரியம் நிர்பந்தம் செய்வதை கைவிடவேண்டும் என அவர் அளித்துள்ள கோரிக்கை மனுவில் தெரிவித்துள்ளார்.கூட்டத்தில் பெரம்பலூர் சுந்தர் நகர் குடியிருப்போர் நலச்சங்கம் சார்பாக அளித்த மனுவில் தெரிவித்திருப்பதாவது:சுந்தர் நகரில் சுமார் 150 குடும்பங்கள் சொந்த வீட்டிலும் வாடகை வீட்டிலும் வசித்து வருகின்றனர். இதில் வாடகை ஒப்பந்தம் எதுவும் போடாமலும் வசிப்பவர்கள் உண்டு. இவர்கள் மின்சார வாரியத்தில் 2 மாதத்திற்கு ஒருமுறை எடுக்கும் மின் அளவீட்டில் 100 யூனிட் மின்சாரத்தை வாடகைதாரர்கள் தான் பயன்படுத்துகின்றனர். உரிமையாளர்கள் அந்த இலவச மின்சாரத்தையோ அதற்கு 100 யூனிட் உண்டான தொகையையோ பெறுவதில்லை. எனவே 2 மாதத்திற்கு ஒரு முறை ரீடிங் எடுக்கும் மின்சாரத்தை மின் இணைப்பில் உள்ள அனைவருக்கும் கிடைக்கச் செய்ய வேண்டும். எங்களுக்கு 100 யூனிட் தொடர்ந்து வழங்க வேண்டும் என அந்த மனுவில் தெரிவித்துள்ளனர்.இந்தக் கூட்டத்தில் உதவி செயற்பொறியாளர்கள் முத்தமிழ்செல்வன், செல்வராஜ், கலியமூர்த்தி, ரகுநாத் மற்றும் உதவி பொறியாளர்கள், மின்வாரிய களப்பணியாளர்கள், சுந்தர் நகர் குடியிருப்போர் நலச்சங்க தலைவர் நல்லுசாமி, செயலாளர் சுதாகர், பொருளாளர் செல்வகுமார் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்….

The post ஆன்லைன் கோளாறால் பணம் செலுத்த முடியவில்லை அபராதத்துடன் மின் துண்டிப்பை கைவிட வேண்டும்-குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் வேண்டுகோள் appeared first on Dinakaran.

Tags : Kuradir ,Perambalur ,
× RELATED தேர்தல் நடத்தை விதிகளை பின்பற்றி...