×

நாளை மறுநாள் தமிழகம் வருகை: மோடி-மு.க.ஸ்டாலின் ஒரே விழாவில் பங்கேற்பு.! 3 ஆயிரம் போலீஸ் குவிப்பு

சென்னை: பிரதமர் மோடி நாளை மறுநாள் தமிழகம் வருகிறார். திண்டுக்கல்லில் நடைபெறும் விழாவில் அவருடன் முதல்வர் மு.க.ஸ்டாலினும் பங்கேற்கிறார். இந்த விழாவையொட்டி மதுரை மற்றும் திண்டுக்கல்லில் 3 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர். திண்டுக்கல்லில் உள்ள காந்தி கிராம பல்கலைக்கழகத்தில் பட்டமளிப்பு விழா நாளை மறுநாள் நடக்கிறது. இந்த விழாவில் கலந்து கொள்வதற்காக பிரதமர் மோடி நாளை மறுநாள் தமிழகம் வருகிறார். அவர் டெல்லியில் இருந்து 11ம் தேதி காலை பெங்களூர் செல்கிறார். அங்கு, பெங்களூரில் இருந்து சென்னைக்கு இயக்கப்படும் வந்தே பாரத் ரயில் தொடக்க விழாவில் பங்கேற்கிறார். பின்னர் அங்கிருந்து பெங்களூர் நகரத்தை உருவாக்கிய கெம்பேகவுடாவின் 108 அடி உயர சிலையை திறந்து வைக்கிறார். அதன்பின்னர் 2வது விமானநிலைய விரிவாக்கப் பணிகளை தொடங்கி வைக்கிறார். இந்த நிகழ்ச்சி முடிந்ததும் 1.30 மணிக்கு தனி விமானத்தில் மதுரை வருகிறார். அங்கிருந்து தனி ஹெலிகாப்டரில் திண்டுக்கல் செல்கிறார். திண்டுக்கல்லில் அவரை கவர்னர் ஆர்.என்.ரவி மற்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் வரவேற்கின்றனர். அதன்பின்னர் அங்கு நடைபெறும் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டு மாணவர்களுக்கு பட்டங்களை வழங்குகிறார். விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின், கவர்னர் ஆர்.என்.ரவி ஆகியோர் சிறப்புரையாற்றுகின்றனர். மேலும் மதுரை மற்றும் திண்டுக்கல் வரும் பிரதமரை வரவேற்க பாஜகவினர் ஏற்பாடுகளை செய்துள்ளனர். இந்தநிலையில், விழா முடிந்ததும் தனி ெஹலிகாப்டரில் மீண்டும் மதுரை சென்று அங்கிருந்து மாலை 5 மணிக்கு விசாகப்பட்டினம் செல்கிறார். பிரதமர் மோடி, முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் ஒரே விழாவில் பங்கேற்பதால் மதுரை மற்றும் திண்டுக்கல்லில் வரலாறு காணாத வகையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பாதுகாப்பு குறித்து டிஜிபி சைலேந்திரபாபு, கூடுதல் டிஜிபி தாமரைக்கண்ணன், ஐஜி அஸ்ரா கார்க் ஆகியோர் விரிவான ஏற்பாடுகளை செய்துள்ளனர். பிரதமர் பயணிக்கும் குண்டு துளைக்காத கார் வரவழைக்கப்பட்டுள்ளது. அவருக்காக சிறப்பு அதிரடிப்படை போலீசாரும் திண்டுக்கல்லுக்கு வந்துள்ளனர். மதுரை மற்றும் திண்டுக்கல்லில் மட்டும் 3 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். அதைத் தவிர தமிழக போலீசாரும் கடும் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளனர். இந்த விழாவில் கலந்து கொள்வதற்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை கோவை செல்கிறார். கோவையில் அமைச்சர் செந்தில்பாலாஜி தலைமையில் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்படுகிறது. பின்னர் அங்கிருந்து ஈரோடு மாவட்டம் பெருந்துறை செல்லும் முதல்வர் மு.க.ஸ்டாலின், திமுக பிரமுகரின் இல்ல விழாவில் கலந்து கொள்கிறார். அதைத் தொடர்ந்து கரூர் சென்று இரவு தங்குகிறார். 11ம் தேதி காலை, கரூரில் 20 ஆயிரம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்புக்களை வழங்குகிறார். இதற்காக பிரமாண்ட விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த விழா முடிந்ததும் முதல்வர் மு.க.ஸ்டாலின் அங்கிருந்து திண்டுக்கல் செல்கிறார். பிரதமர் மோடியுடன் விழாவில் பங்கேற்கிறார். பின்னர் அவர் சென்னை திரும்புகிறார். அதேபோல இந்த விழாவில் கவர்னர் ஆர்.என்.ரவியும் கலந்து கொள்கிறார். அவர் விழா நடைபெறும் நாளில் சென்னையில் இருந்து விமானத்தில் மதுரை சென்று அங்கிருந்து கார் மூலம் திண்டுக்கல் செல்கிறார். விழா முடிந்ததும் அவர் சென்னை திரும்புகிறார்….

The post நாளை மறுநாள் தமிழகம் வருகை: மோடி-மு.க.ஸ்டாலின் ஒரே விழாவில் பங்கேற்பு.! 3 ஆயிரம் போலீஸ் குவிப்பு appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Modi ,MUK ,Stalin ,Chennai ,Chief Minister ,M. K. Stalin ,Dindigul ,
× RELATED சுதந்திர போராட்டம் குறித்த பழங்கால...