×

திட்டம் போட்டு திருடுற கூட்டம் - விமர்சனம்

ஐடி கம்பெனியில் பணியாற்றும் கயல் சந்திரமவுலி, பழமையான பொருட்களை வாங்கி விற்பனை செய்யும் ஏஜென்ட் சாத்னா டைட்டஸ், திருட்டு சாவி தயார் செய்யும் டேனியல் ஆனி போப், போலீஸ் கான்ஸ்டபிள் சாம்ஸ் ஆகியோர், பழமையான பொருட்களை எங்கே பார்த்தாலும் அவற்றை திட்டம் போட்டு திருடுகிறார்கள். அவர்களுக்கு தலைவர், பார்த்திபன். அவர்தான் ஸ்கெட்ச் போட்டு தருபவர். இவர்கள் அனைவரும் ஒரு மிகப் பெரிய திருட்டை செய்துவிட்டு, வாழ்க்கையில் செட்டிலாக நினைக்கின்றனர்.

உலக கோடீஸ்வரர்களில் ஒருவர், தீவிர கிரிக்கெட் பைத்தியம். கிரிக்கெட் தொடர்புடைய பழமையான பொருட்களை, அது எந்த விலையாக இருந்தாலும் வாங்கி, தனது கிரிக்கெட் மியூசியத்தில் வைத்து விடுவார். அவருக்கு உலக கிரிக்கெட் கோப்பையை தன் மியூசியத்தில் வைக்க வேண்டும் என்பது, மிகப் பெரிய பேராசை. அதை கொண்டு வந்து தருபவர்களுக்கு கோடிக்கணக்கில் பணம் கொடுக்க தயாராக இருக்கிறார். இந்த அசைன்மென்ட் சந்திரமவுலி கோஷ்டிக்கு கிடைக்கிறது. சென்னையில் நடக்கும் உலக கோப்பை இறுதிப் போட்டியின்போது, உலக கோப்பையை திருட அவர்கள் திட்டமிடுகின்றனர். அது நிறைவேறியதா என்பது கதை.

‘படத்தில் லாஜிக் எல்லாம் பார்க்காதீங்க. ஒன்லி காமெடி மேஜிக்தான்’ என்று அவர்களே சொல்லிவிடுகின்றனர். இரண்டரை மணி நேரம் சிரிக்க வைக்க தேவையான விஷயங்களை படத்தில் வைத்து, சிரிக்க வைத்து அனுப்ப முயற்சித்து இருக்கின்றனர். இதில் 50 சதவிகிதம் வெற்றி பெறுகின்றனர். முதல் பாதியில் சொதப்பலாக திட்டம் போட்டாலும், இரண்டாம் பாதியில் சரியாக திட்டமிட்டு சிரிக்க வைக்கிறார், இயக்குனர் சுதர். சந்திரமவுலி நடிப்பில் ரொம்பவே மெனக்கெட்டிருக்கிறார். காமெடியும் செய்துள்ளார்.  சாத்னா டைட்டஸ் நடிப்பு நிறைவாக இருக்கிறது.

நீண்ட நாட்களுக்கு பிறகு சாம்ஸ் சிரிக்க வைத்திருக்கிறார். குறிப்பாக, போலீசாரிடம் அடிவாங்கும் காட்சியில். டேனியல் ஆனி போப், வளவளவென்று பேசுகிறார். பார்த்திபன் வழக்கம்போல் நக்கலும், நய்யாண்டியும் செய்கிறார். கிளைமாக்சில் அவர் அடிக்கும் ட்விஸ்ட்டுகளில் தியேட்டரில் விசில் பறக்கிறது. இடையிடையே வரும் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி காட்சிகளுக்கு ரசிகர்கள் ஆரவாரம் செய்கின்றனர். அஷ்வத்தின் இசையும், மார்ட்டின் ஜோவின் ஒளிப்பதிவும் படத்துக்கு பெரிதாக உதவவில்லை.

காதல் பாடல் காட்சிகள் இல்லாதது ஆறுதல். காமெடிக்காக எதையும் செய்யலாம் என்று முடிவு செய்து, தூய தமிழ் பேசுவதை கிண்டலும், கேலியும் செய்திருப்பது உறுத்தல். லட்சம் பேர் கூடியிருக்கும் ஸ்டேடியத்தில் கோப்பையை திருட போடும் திட்டமும், பாதுகாப்பான மியூசியத்திற்குள் புகுந்து சிலைகளை அள்ளி வர போடும் திட்டமும் சின்னப்புள்ளத்தனமாக இருந்தாலும், வாய்விட்டு சிரிக்க வைக்கிறது. திரைக்கதை அமைப்பிலும், தொழில்நுட்ப தரத்திலும் கூடுதல் கவனம் செலுத்தி இருந்தால், ரசிகர்களின் மனதையும் திருடி இருப்பார்கள்.

Tags :
× RELATED டபுள் ஐஸ்மார்ட் டீசர் வெளியானது