×

தாம்பரத்தில் சாலை ஓரம் நிறுத்தப்பட்டிருந்த கார் திடீரென தீப்பிடித்து எரிந்தது: தீயணைப்பு வீரர்கள் வராததால் மக்கள் மறியல்

தாம்பரம்: கிழக்கு தாம்பரம், கணபதிபுரம், எம்.இ.எஸ் சாலையில் சாலையோரம் பல நாட்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் ஒன்று நேற்று முன்தினம் இரவு திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அப்பகுதி பொதுமக்கள் உடனடியாக சம்பவம் குறித்து தாம்பரம் தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவித்தனர். ஆனால் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாகியும், தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு வரவில்லை. இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி பொதுமக்கள் சுமார் 200க்கும் மேற்பட்டோர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.அப்போது, அங்கு வந்த சேலையூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் பாலமுருகன் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த பொதுமக்கள் கலைந்து செல்லாததால் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்போது, பொதுமக்கள், ‘தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவித்து சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாகிறது. அவர்கள் இன்னும் வரவில்லை. அதனை கண்டித்து மறியல் செய்யும் எங்களை ஏன் மிரட்டுகிறீர்கள்’ என அவரிடம் கேள்வி எழுப்பினர். அப்போது, இந்த சம்பவங்களை படம் பிடித்த பத்திரிகையாளர்களின் செல்போனை பிடுங்கிய உதவி ஆய்வாளர் பாலமுருகன் பத்திரிகையாளர்களையும் ஒருமையில் பேசி மிரட்டினார்.பின்னர், தகவல் அறிந்த தாம்பரம் மாநகராட்சி 63வது வார்டு மாமன்ற உறுப்பினர் ஜோதிகுமார் சம்பவ இடத்திற்கு சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு சமாதானப்படுத்தினார். பொதுமக்கள் அனைவரும் ஒன்றிணைந்து அவர்களாகவே தண்ணீர் ஊற்றி காரில் ஏற்பட்ட தீயை அணைத்தனர். ஆனால் அதற்குள் கார் முற்றிலுமாக எரிந்து நாசமானது. இந்த சம்பவம் தொடர்பாக சேலையூர் காவல் நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.கடந்த, சில நாட்களுக்கு முன்பு சேலையூர் பகுதியில் நடுரோட்டில் பொதுமக்களை உதவி ஆய்வாளர் பாலமுருகன் தாக்கிய வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் பரவி வரும் நிலையில், நேற்று முன்தினம் பொதுமக்களிடம் மீண்டும் அதேபோல அவர் அநாகரிகமாக நடந்து கொண்டது பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட உதவி ஆய்வாளர் பாலமுருகன் மீது காவல்துறை உயர் அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்….

The post தாம்பரத்தில் சாலை ஓரம் நிறுத்தப்பட்டிருந்த கார் திடீரென தீப்பிடித்து எரிந்தது: தீயணைப்பு வீரர்கள் வராததால் மக்கள் மறியல் appeared first on Dinakaran.

Tags : Tambaram ,MES Road ,East Tambaram ,Ganapathipuram ,Dinakaran ,
× RELATED 50 கிலோ மூட்டையில் 3 கிலோ முதல் 5 கிலோ வரை...