×

புவிசார் குறியீடு பெற்ற கொடைக்கானல் ‘தங்கத்திற்கு’ வேண்டும் தனி சந்தை-தமிழக அரசுக்கு மலைப்பூண்டு விவசாயிகள் கோரிக்கை

கொடைக்கானல் : புவிசார் குறியீடு பெற்ற கொடைக்கானலின் தங்கம் எனப்படும் மலைப்பூண்டுவை விற்பனை செய்ய தனி சந்தை அமைக்க தமிழக அரசு நடவடிக்கை வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.கொடைக்கானல் மேல்மலையில் உள்ள வில்பட்டி, பள்ளங்கி, அட்டுவம்பட்டி, பூம்பாறை, கூக்கால், பழம்புத்தூர், புதுபுத்தூர், மன்னவனூர், பூண்டி, போளூர், கிளாவரை, கவுஞ்சி உள்ளிட்ட கிராமங்களில் விவசாயம் மட்டுமே பிரதான தொழிலாக நடைபெற்று வருகிறது, இப்பகுதிகளில் கேரட், பட்டாணி, காலிபிளவர் போன்ற காய்கறிகள் பயிரிடப்படுகின்றன. மேலும் கொடைக்கானலின் ‘தங்கம்’ என அழைக்கப்படும் மருத்துவ குணம் கொண்ட வெள்ளைப்பூண்டு (மலைப்பூண்டு) அதிகபட்சமாக சுமார் 3,000 ஏக்கரில் பயிரிடப்படுகிறது. ஆண்டின் சில மாதங்கள் பெய்யும் மழைநீரை இங்குள்ள ஏரிகளில் தேக்கி பொதுமக்கள் விவசாயத்திற்கு பயன்படுத்தி வருகின்றனர். இங்கிருந்து விளைபொருட்களை எடுத்து செல்வதற்கு போதிய அளவு சாலை வசதிகள் கூட கிடையாது. எனினும் இயற்கையை நம்பியே வாழும் இப்பகுதி விவசாயிகள் பல ஆண்டுகளாக விவசாயத்தை கைவிடாமல் காப்பாற்றி வருகின்றனர்.வியாபாரிகள் விலையே இறுதி வெள்ளைப்பூண்டு விவசாயம், இப்பகுதி மக்களின் பணப்பயிராக வாழ்வாதாரத்தை பூர்த்தி செய்து வருகிறது. இங்கு விளையும் வெள்ளைப்பூண்டு தேனி மாவட்டம், பெரியகுளம் வடுகபட்டி பூண்டு சந்தைக்கு விற்பனைக்கு கொண்டு செல்லப்படுகிறது. அங்குள்ள வியாபாரிகளால் வாங்கப்பட்டு பின்னர் தமிழகத்தின் பல மாவட்டங்களுக்கும், வெளிமாநிலங்களுக்கும், வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. பெரியகுளம் வடுகப்பட்டி பூண்டு சந்தையில் வியாபாரிகள் வைக்கும் விலையே இறுதியானதாகும். இதனால் விவசாயிகளுக்கு பலமுறை எதிர்பார்த்த லாபம் கிடைப்பதில்லை. எனினும் இங்கு விளையும் வெள்ளைப்பூண்டுக்கு மட்டும் எப்போதும் மவுசு குறையாது.கொடைக்கானலில் விளைவிக்கப்படும் மலைப்பூண்டுக்கு புவிசார் குறியீடு வழங்கவேண்டும் என பல ஆண்டுகளாக இப்பகுதி விவசாயிகள் வலியுறுத்தி வந்தனர். தொடர்ந்து கொடைக்கானல் அன்னை தெரசா மகளிர் பல்கலைகழகம் மற்றும் தமிழக அறிவியல்- தொழில்நுட்பதுறை மாநில மன்றம் சார்பில் 2018ம் ஆண்டு மருத்துவ குணம் வாய்ந்த கொடைக்கானல் மலைப்பூண்டுவிற்கு புவிசார் குறியீடு கோரி விண்ணப்பித்திருந்தனர். இதற்கு பலனாக ஒன்றிய அரசு கொடைக்கானல் மலைப்பூண்டுவிற்கு புவிசார் குறியீடு வழங்கியது. இதனால் இப்பகுதி விவசாயிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.மெல்ல அழியும் மலைப்பூண்டுஇதற்கிடையே கொடைக்கானல் மலைப்பகுதியில் விளைவிக்கப்படும் வெள்ளைப்பூண்டு விவசாயம் மெல்ல மெல்ல அழிந்து வருகிறது என்றே கூறலாம். வெள்ளைப்பூண்டு விவசாயத்திற்கு அடிப்படையாக தேவைப்படுவது இயற்கை உரம் அதாவது மாட்டுச்சாணம். ஆனால் தற்போது மாட்டுச்சாணம் இல்லாமல் இந்த வெள்ளைப்பூண்டு விவசாயம் நடந்து வருகிறது. இயற்கை உரம் இல்லாமல் செயற்கையாக யூரியா, மருந்து உள்ளிட்டவை பயன்படுத்துவதால் விவசாயிகளுக்கு கூடுதல் செலவு ஏற்பட்டு வருகிறது. இயற்கை உரம் பயன்படுத்தும் போது கூடுதல் மகசூல் கிடைத்து வந்தது. ஆனால் தற்போது மகசூலில் அளவும் குறைந்து வருகிறது.கொடைக்கானலில் ஆண்டுக்கு இருபோகம் வெள்ளைப்பூண்டு விவசாயம் நடந்து வருகிறது. விதைத்த பின் 120 நாட்களில் அறுவடை நடைபெறும். 3000 ஏக்கர் அளவிற்கு பயிரிடப்பட்டு வந்த வெள்ளைப்பூண்டு கடந்த ஆண்டு போதிய மழை இல்லாத காரணத்தினால் 500 ஏக்கர் மட்டுமே பயிரிடப்பட்டது. இந்த ஆண்டு சுமார் 2000 ஏக்கர் அளவிற்கு தான் பயிரிடப்பட்டு உள்ளது. மேலும் வனவிலங்குகளால் வெள்ளைப்பூண்டு விவசாய நிலங்கள் சேதப்படுத்தப்பட்டு வருகிறது. இதனால் விவசாயிகள் போதிய லாபம் கிடைக்காமல் நஷ்டப்பட்டு மாற்று விவசாயம், தொழிலுக்கு மாறி வருகின்றனர். எனவே தமிழக அரசு புவிசார் குறியீடு பெற்ற கொடைக்கானல் வெள்ளைப்பூண்டு விவசாயத்தை பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.வியாபாரிகள் தேடி வருவர்இதுகுறித்து மன்னவனூர் விவசாயி விவேகானந்தன் கூறியதாவது, ‘கொடைக்கானல் மலைப்பூண்டிற்கு புவிசார் குறியீடு கிடைத்தது மகிழ்ச்சியான ஒன்று. ஆனால் இயற்கை சூழல் காரணமாக மலைப்பூண்டு விவசாயம் செய்யக்கூடிய பரப்பளவு குறைந்து வருகிறது. கடந்த ஆண்டு 500 ஏக்கர் அளவிற்கு தான் பயிரிடப்பட்டது. இதனால் விதை பூண்டு கிடைப்பதில் பெரிய சிக்கல் ஏற்பட்டது. இயற்கை உரம் கிடைக்காததால், செயற்கை உரம், இடுபொருட்கள் பயன்படுத்துவதனால் கூடுதல் செலவு ஏற்பட்டு வருகிறது. 120 நாள் பயிராக உள்ள வெள்ளைப்பூண்டு கடைசி 10 நாட்களில் மழை இல்லாமல் போனாலோ அல்லது கூடுதலான மழை பெய்தாலோ மகசூல் பாதிக்கப்படும், கடந்த சில ஆண்டுகளாக இந்த நிலை ஏற்பட்டு வருகிறது. மலைப்பூண்டு விவசாயிகளுக்கு ஏற்படும் நஷ்டத்திற்கு அரசு இதுவரை நிவாரணம் வழங்கியதில்லை பயிர் பாதுகாப்பும் செய்வதில்லை. வெள்ளைப்பூண்டுவை விளைவிப்பதில் இவ்வளவு சிக்கல் உள்ள நிலையில், அதனை சந்தைப்படுத்துவதிலும் மேலும் சிக்கல் ஏற்படுகிறது. இங்கு விளைவிக்கப்படும் வெள்ளைப்பூண்டுவை பெரியகுளம் வடுகப்பட்டி கொண்டு சென்று தான் விற்பனை செய்ய முடியும். அங்கு இடைத்தரகர்களின் தொல்லை, கமிஷன் கடைக்காரர்கள் வைத்தது தான் விலை உள்ளிட்ட காரணத்தினால் எங்கள் போன்ற விவசாயிகளுக்கு உரிய தொகை கிடைக்காமல் மிகுந்த நஷ்ட்டப்பட்டு வருகிறோம். மேலும் வெள்ளைப்பூண்டை அறுவடை செய்து பதப்படுத்தி வாகனங்களில் ஏற்றி வடுகபட்டி சென்று விற்பதற்கு போக்குவரத்து செலவும் அதிகமாகி வருகிறது. எனவே கொடைக்கானலில் மலைப்பூண்டிற்கு என தனி சந்தையுடன், பதப்படுத்தும் கிடங்கும் அமைக்க வேண்டும். அப்போதுதான் வியாபாரிகள் எங்களை தேடி வரக்கூடிய நிலை ஏற்பட்டு விவசாயிகளுக்கு நல்ல விலை கிடைப்பதுடன், எங்களின் வாழ்வாதாரமும் பெருகும். அத்துடன் கலப்படமான விற்பனையை தடுக்க முடியும்’ என்றார்.இயற்கை உரம் இல்லாததே காரணம்பூண்டியை சேர்ந்த விவசாயி கண்ணதாசன் கூறியதாவது, ‘கொடைக்கானல்  வெள்ளைப்பூண்டுவின் மருத்துவ குணத்திற்கு அடிப்படை காரணம் இயற்கை முறையில்  விவசாயம் செய்வதே. ஆனால் தற்போது இயற்கை முறையில் விவசாயம் செய்ய முடியாத  நிலை ஏற்பட்டுள்ளது. செயற்கை உரங்கள் பயன்படுத்தப்பட்டு வருவதால்  வெள்ளைப்பூண்டின் மகத்துவம் சற்று குறைந்ததுடன், விளைச்சலும்  பாதிக்கப்பட்டுள்ளது. எனவே தமிழக அரசு வெள்ளைப்பூண்டு விளைச்சலுக்கு இயற்கை  உரம் கிடைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுபோல் இயற்கை இடர்பாடு, வனவிலங்குகள் ஆகியவையால் வெள்ளைப்பூண்டு  விவசாயத்தில் ஏற்படும் நஷ்டத்திற்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும்’  என்றார். என்றும் இறங்காத மவுசுகொடைக்கானலில் நிலவும் தட்பவெப்ப நிலை, மண்ணின் தன்மை, மலையின் உயரம் போன்ற காரணங்களால் மலைப்பூண்டுவுக்கு என்றும் தனி மவுசு கிடைத்துள்ளது. பெரும்பாலும் ஒரு நாட்டில் தயாரிக்கப்படும் பொருட்கள், விளைவிக்கப்படும் பொருட்கள் தனித்துவம் பெற்றிருப்பின் அதற்கு புவிசார் குறியீடு வழங்குவது வழக்கம். அந்த வகையில் புவிசார் குறியீடு பெற்ற பெயரை வேறு யாரும் பயன்படுத்த கூடாது. அதன்படி தமிழகத்தில் தஞ்சாவூர் தலையாட்டி பொம்மை, காஞ்சிபுரம் பட்டு, பவானி ஜமுக்காளம், மதுரை சுங்குடி சேலை, தஞ்சாவூர் ஓவியம், நாச்சியார் கோவில் குத்துவிளக்கு, பத்தமடை பாய் ஆகியவை பதிவு பெற்றுள்ளன. அந்த வரிசையில் தற்போது கொடைக்கானல் மலைப்பூண்டுவும் சேர்ந்துள்ளது. தற்போது இந்த பூண்டுக்கு புவிசார் குறியீடு கிடைத்துள்ளதால் போலி பூண்டு வகைகளை தடுத்து கொடைக்கானல் பூண்டு விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பெருக்க முடியும்….

The post புவிசார் குறியீடு பெற்ற கொடைக்கானல் ‘தங்கத்திற்கு’ வேண்டும் தனி சந்தை-தமிழக அரசுக்கு மலைப்பூண்டு விவசாயிகள் கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : government of Tamil Nadu ,Kodakanal ,Tamil Nadu ,Godaikanal ,
× RELATED கருவின் பாலினம் அறிவது, அறிவிக்கும்...