×

பாரம்பரிய முறையில் எழிலக பழைய பதிவு அலுவலக கட்டிடம் ரூ.23 கோடியில் புனரமைப்பு: விரைவில் பயன்பாட்டுக்கு வருகிறது

சென்னை: சேப்பாக்கம் எழிலகத்தில் உள்ள பழைய சம்பள கணக்கு அலுவலகம் கட்டிடத்திற்கு அருகில் உள்ள பதிவு அலுவலக கட்டிடம் பாரம்பரிய முறையில் ரூ.23 கோடியில் புனரமைக்கப்பட்டு விரைவில் பயன்பாட்டிற்கு வரும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பொதுப்பணித்துறையின் கீழ் உள்ள பாரம்பரிய கட்டிடங்கள் பாதுகாக்கப்பட்டு, மறுசீரமைத்து புனரமைக்கப்படும் என மானியக் கோரிக்கையின் போது பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு அறிவித்தார். இந்நிலையில், கடந்த மாதம் 22ம் தேதி வெளியிடப்பட்ட அரசாணையில், தமிழகத்தில் உள்ள 17 பாரம்பரிய கட்டிங்களை மறுசீரமைத்து புனரமைக்கும் வகையில் ரூ.50 கோடி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டிருந்தது. சென்னை சேப்பாக்கம் வளாகத்தில் உள்ள பழைய சம்பள கணக்கு மற்றும் வேளாண்மை அலுவலகக் கட்டிடத்திற்கு அருகில் உள்ள பதிவு அலுவலக பாரம்பரிய கட்டிடம் ரூ.23.08 கோடி மதிப்பில் சீரமைக்கப்படும் என அரசாணை வெளியிடப்பட்டது. சேப்பாக்கம் எழிலக வளாகத்தில் 250 ஆண்டுகள் பழமைவாய்ந்த கலச மஹால் கட்டிடம் உள்ளது.  இந்தோ-சாரசனிக் கட்டிடக் கலைக்கு சான்றாக விளங்கும் இந்த கட்டிடத்தில் பதிவு அலுவலகம் செயல்பட்டு வந்தது. இந்த கட்டிடத்தை பழமை மாறாமல் புனரமைக்க தமிழ்நாடு அரசு பணிகளை முன்னெடுத்து வருகிறது.இது, பழமையான கட்டிடம் என்பதால் மழை  நேரங்களில் சில பகுதிகள் சிதிலமடைந்து விழுந்துள்ளன. அதையடுத்து, இங்கு  செயல்பட்டு வந்த அரசு அலுவலகங்களும் காலி செய்யப்பட்டது. பின்னர் பராமரிப்பு  பணிகள் இல்லாமல் போன காரணத்தால் புதர் மண்டிப்போனது. தமிழக அரசு அரசாணை  வெளியிட்டு ரூ.23.08 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. கலச மஹால்  கட்டப்பட்டபோது பின்பற்றிய அதே கட்டிடக் கலை முறை மூலமாகவே புனரமைப்பு பணிகள் இந்த கட்டிடத்தில் தொடங்கப்படும். இதற்காக சிறப்பு வேலைபாடுகள்  தெரிந்தவர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர். குறிப்பாக, சாதாரணமான சிமென்ட்  பயன்படுத்துதல் இல்லாமல், பழைய முறையான சுண்ணாம்பு பூச்சு முறை பயன்படுத்தப்பட உள்ளது. முன்பு புனரமைக்கப்பட்ட கட்டிடங்களின் முறைப்படியே,  இந்த கட்டிடமும் புனரமைக்கப்படும். அதாவது, இதற்கு தயாரிக்கப்படும்  சுண்ணாம்பு கலவையுடன் கடுக்காய், வெல்லம், நாட்டுக்கோழி முட்டை,  சோற்று காற்றாழை ஆகியவை சேர்த்து சுமார் 15 நாட்கள் ஊறவைத்து பின்னர்  அந்த கலவை பூச்சு வேலைக்கு பயன்படுத்தப்படும். இந்த சுண்ணாம்பு கலவை 100  சதவிகிதம் தரமானதாகவும் உறுதியானதாகவும் இருக்கும். தற்போது புனரமைக்கும்  பணிகளுக்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. 2 வருடங்களில் கட்டிடத்தின்  புனரமைப்பு பணிகள் முடிக்கப்பட்டு விரைவில் பயன்பாட்டிற்கு வரும் என  பொதுப்பணித்துறை உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.* கட்டிடத்தின் அமைப்புபதிவு அலுவலக கட்டிடம் உயரமான கோபுரங்களால் சூழப்பட்ட இரண்டு மாடி கட்டிடம் ஆகும். மேற்கூரையை தாங்கி வலுவாக நிற்கும் தேக்கு மரக்கட்டைகள், பெரிய ஜன்னல்கள் அமைந்துள்ளன. உயரமான வளைவு நுழைவாயில் கொண்ட சதுரமான இரண்டு அடுக்கு அமைப்பு கட்டிடத்தின் மைய புள்ளியாக உள்ளது. பழைய பிஏஓ கட்டிடம் கலச மஹாலின் கிழக்கே ஒரு தனி நுழைவுவாயில் அமைக்கப்பட்டு இணைக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த கட்டிடத்தின் நுழைவாயில் மேற்கில் உள்ள பழைய நுழைவாயிலில் இருந்து மாறுபட்டு கடற்கரை நோக்கிய கிழக்கு பகுதியாக அமைந்தது.* கட்டிடத்தின் வரலாறுசேப்பாக்கம் அரண்மனை 1768 முதல் 1855 வரை ஆற்காடு நவாப்பின் இல்லமாக இருந்தது. நவாப் முகமது அலிகான் வாலாஜா செயின்ட் ஜார்ஜ் கோட்டை அரண்மனைக்குள் தனக்கென ஒரு அரண்மனையை கட்ட நினைத்தார். இட நெருக்கடி காரணமாக கோட்டைக்கு தெற்கே உள்ள சேப்பாக்கத்தில் 1764ம் ஆண்டு அரண்மனையை கட்டினார். இதனால் சேப்பாக்கம் அரண்மனையின் தெற்கு பகுதி கலச மஹால் என அழைக்கப்பட்டது. இந்த கட்டிடம் பிரிட்டிஷ் பொறியாளர்களான பால் பென்பீல்ட் மற்றும் ராபர்ட் சிஷோல்ம் ஆகியோரால் கட்டப்பட்டது. பின்பு நவாப்பின் கடனை அடைப்பதற்காக அரண்மனை ஏலத்திற்கு கொண்டு வரப்பட்டு இறுதியில் சென்னை அரசால் வாங்கப்பட்டது. பின்னர், இந்த கட்டிடம் வருவாய் வாரியம் மற்றும் பொதுப்பணித்துறை அலுவலகமாகவும், பதிவு அலுவலகமாக செயல்பட்டு வந்தது. நாளடைவில் கட்டிடம் சேதமடைய தொடங்கியது….

The post பாரம்பரிய முறையில் எழிலக பழைய பதிவு அலுவலக கட்டிடம் ரூ.23 கோடியில் புனரமைப்பு: விரைவில் பயன்பாட்டுக்கு வருகிறது appeared first on Dinakaran.

Tags : CHENNAI ,Chepakkam Ezhilakam ,Ezhilakam ,Dinakaran ,
× RELATED சென்னை கோயம்பேடு மேம்பாலத்தில் ஆண்...