×

ஆசிய கோப்பை மகளிர் டி20 7வது முறையாக இந்தியா சாம்பியன்: பைனலில் இலங்கையை வீழ்த்தி அசத்தல்

சில்ஹெட்: ஆசிய கோப்பை மகளிர் டி20 பைனலில் இலங்கையை 8 விக்கெட் வித்தியாசத்தில் எளிதாக வீழ்த்திய இந்தியா 7வது முறையாக கோப்பையை கைப்பற்றி சாதனை படைத்தது. வங்கதேசத்தில் நடந்த இந்த தொடரின் பைனலில் இந்தியா – இலங்கை அணிகள் நேற்று மோதின. டாஸ் வென்று பேட் செய்த இலங்கை அணி, இந்திய வீராங்கனைகளின் துல்லியமான பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து ஆட்டமிழந்து அணிவகுத்தனர். அந்த அணி 16 ஓவரில் 43 ரன்னுக்கு 9 விக்கெட் இழந்து திணறியது. இனோகா ரணவீரா – அசினி குலசூரியா ஜோடி கடைசி விக்கெட்டுக்கு ஆட்டமிழக்காமல் 22 ரன் சேர்க்க, இலங்கை 20 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 65 ரன் எடுத்தது. இனோகா 18 ரன், அசினி 6 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். ஒஷாதி ரணசிங்கே 13 ரன் எடுத்தார். இந்திய பந்துவீச்சில் ரேணுகா சிங் 3 ஓவரில் 1 மெய்டன் உள்பட 5 ரன் மட்டுமே விட்டுக்கொடுத்து 3 விக்கெட் கைப்பற்றினார். ராஜேஷ்வரி , ஸ்நேஹ் ராணா தலா 2  விக்கெட் வீழ்த்தினர். தீப்தி ஷர்மா, ஹேமலதா தயாளன் விக்கெட் எடுக்கா விட்டாலும் சிக்கனமாகப் பந்துவீசி உதவினர். இதைத் தொடர்ந்து, 20 ஓவரில் 66 ரன் எடுத்தால் வெற்றி என்ற மிக எளிய இலக்குடன் இந்தியா களமிறங்கியது. ஷபாலி 5, ஜெமீமா 2 ரன்னில் பெவிலியன் திரும்பி ஏமாற்றமளித்தனர்.எனினும், ஸ்மிரிதி மந்தனா – கேப்டன் ஹர்மன்பிரீத் இணைந்து பொறுப்புடன் விளையாடி வெற்றியை வசப்படுத்தினர். இந்தியா 8.3 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 71 ரன் எடுத்து  8 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வென்றது. மந்தனா 51 ரன் (25 பந்து, 6 பவுண்டரி, 3 சிக்சர்), ஹர்மன்பிரீத் 11 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். இந்திய அணி 7வது முறையாக மகளிர் ஆசிய கோப்பையை முத்தமிட்டு சாதனை படைத்தது. இதுவரை நடந்த 8 தொடர்களில் இந்தியா 7 முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது. பைனலின் சிறந்த வீராங்னையாக  ரேணுகா சிங், தொடரின் சிறந்த வீராங்கனையாக   தீப்தி ஷர்மா தேர்வு செய்யப்பட்டனர்….

The post ஆசிய கோப்பை மகளிர் டி20 7வது முறையாக இந்தியா சாம்பியன்: பைனலில் இலங்கையை வீழ்த்தி அசத்தல் appeared first on Dinakaran.

Tags : Asia Cup Women's T20 ,India ,Sri Lanka ,Sylhet ,Dinakaran ,
× RELATED நாகை – இலங்கை இடையே மே 19-ல் கப்பல் போக்குவரத்து தொடக்கம்