×

சென்னையில் டெங்கு கொசுக்களை அழிக்க தீவிரம் வீடுவீடாக களப்பணியாளர்கள் ஆய்வு: மழைக்காலம் நெருங்குவதால் நடவடிக்கை

சென்னை: மழைக்காலத்தில் ‘டெங்கு’ காய்ச்சல் பரவுவதும், பல உயிர்களை காவு வாங்குவதும் வழக்கமான ஒன்றாகவே ஆகிவிட்டது. கடந்த 19ம் நூற்றாண்டில் பரவ தொடங்கிய டெங்கு, இன்று 150க்கும் மேற்பட்ட நாடுகளில் பல அரசுகளை அலற வைக்கும் முக்கியமான நோயாக உள்ளது. டெங்கு காய்ச்சலால் ஏற்படும் உயிரிழப்புகளை தடுக்க, மக்கள் நல்வாழ்வு துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. டெங்கு பற்றிய பயமும், உயிரிழப்பும் முழுவதுமாக குறைய அரசின் முயற்சி மட்டுமே போதாது. மக்களுக்கும் இந்த நோய் குறித்த விழிப்புணர்வு ஏற்பட வேண்டும். சுகாதாரமற்ற சூழல்தான் டெங்கு பரவுவதற்கான அடிப்படை காரணம் என்பதை ஒவ்வொருவரும் உணர வேண்டும். டெங்கு ஒழிப்புக்கான அரசின் நடவடிக்கைக்கும் ஒத்துழைப்பு தர வேண்டும். அப்போதுதான் டெங்குவிடமிருந்து நம்மை தற்காத்துக் கொள்ள முடியும். ‘டெங்கு’ எனும் வைரஸ் கிருமியால் ஏற்படும் காய்ச்சல் என்பதால், இதற்கு ‘டெங்கு காய்ச்சல்’ என்று பெயர். டெங்கு என்ற ஸ்பானிய மொழிச்சொல்லுக்கு, ‘எலும்பு முறிவுக் காய்ச்சல்’ என்று பொருள். இந்த காய்ச்சலின் போது எலும்பு முறிவு ஏற்பட்டது போல, உடலில் கடுமையான வலி தோன்றும் என்பதால் இந்த பெயரில் அழைக்கிறார்கள். இதில் மொத்தம் நான்கு வகைகள் உள்ளன. ஒரு வகை வைரசால் டெங்கு உண்டாகி, குணமான பின்பு வாழ்நாளில் திரும்பவும் அதே வைரசால் பாதிப்பு ஏற்படாது. அதற்கான எதிர்ப்பு சக்தி உடலில் உருவாகி இருக்கும். அதே நேரத்தில், மற்ற வைரஸ் வகையால் டெங்கு ஏற்படலாம். கொசுவால் மட்டுமே டெங்கு பரவுகிறது. ‘ஏடிஸ் எஜிப்தி’ எனும் கொசுக்கள் நம்மை கடிக்கும்போது, டெங்கு உண்டாகிறது. கொசு கடித்த ஒரு வாரத்துக்குள் நோய் ஏற்படும். இது, தண்ணீர், காற்று மூலம் பரவாது. டெங்குவால் பாதிக்கப்பட்ட ஒருவரின் இருமல், தும்மல் போன்றவற்றாலும் மற்றவருக்கு பரவாது.தற்போது, சென்னையில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. மேலும் மழைநீர் வடிகால் பணிகள் முழுவீச்சில் நடந்து வருவதால் ஆங்காங்கே தோண்டப்பட்டுள்ள பள்ளங்களில் தண்ணீர் தேங்குகிறது. இதனால் கொசு உற்பத்தி அதிகரித்து வருகிறது. இதன் மூலம் டெங்கு காய்ச்சல் பரவக்கூடும் என்பதால், அதை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் சென்னை மாநகராட்சி தீவிரமாக களம் இறங்கியுள்ளது. கொசு ஒழிப்புப் பணிகளை மேற்கொள்ள 2,084 சிறு வட்டங்களாக பிரிக்கப்பட்டு 954 கொசு ஒழிப்பு நிரந்தர பணியாளர்கள், 2,317 ஒப்பந்த பணியாளர்கள் என மொத்தம் 3,271 பணியாளர்கள் மூலம் வீடு வீடாக கொசு ஒழிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 224 மருந்து தெளிப்பான்கள், 120 பவர் ஸ்ப்ரேயர்கள், பேட்டரி மூலம் இயங்கும் 300 ஸ்ப்ரேயர்கள், 229 கையினால் இயங்கும் புகைப்பரப்பும் இயந்திரங்கள், 8 சிறிய புகைப் பரப்பும் இயந்திரங்கள் மற்றும் 67 வாகனங்களில் பொருத்தப்பட்ட புகைப்பரப்பும் இயந்திரங்கள் கொண்டு கொசுக்களை கட்டுப்படுத்த பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.மேலும், மழைநீர் வடிகால்களில் கொசுப்புழுக்களை அழிக்க ஒரு வார்டிற்கு கொசுமருந்து தெளிப்பான்களுடன் இரண்டு பேர் என 200 வார்டுகளுக்கும் 400 பேர் பணி அமர்த்தப்பட்டுள்ளனர். 247 கி.மீ. நீர்வழித்தடங்களில் கொசு மருந்து தெளிக்க 128 பணியாளர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். இவர்கள் ஒரு குழுவிற்கு 3 பேர் என நீர்வழித்தடங்களில் நாளொன்றிற்கு ஒரு கி.மீ தூரத்திற்கு கொசு மருந்து தெளிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். குடிசைப் பகுதிகள், பூங்காக்கள் மற்றும் சாலைகள் ஆகிய பகுதிகளில் புகைப்பரப்பும் இயந்திரங்கள் கொண்டு கொசுப் புழுக்கள் அழிக்கப்பட்டு வருகின்றன. மாநகராட்சி பணியாளர்கள் மூலம் 10,97,632 வீடுகளில் மேற்கொள்ளப்பட்ட களஆய்வில் 9,117 வீடுகளில் கொசுப்புழு வளரிடங்கள் கண்டறியப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. * அலட்சியம் செய்தால் அபராதம்சென்னை மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது: சென்னையில் கடந்த ஆகஸ்ட் மாதம் 291 பேருக்கும், செப்டம்பர் மாதம் 309 பேருக்கும் டெங்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. எனவே, சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள திறந்த நிலையில் உள்ள கிணறுகள், மேல்நிலை நீர்தேக்கத் தொட்டிகள், கட்டுமானப் பணிகள் நடைபெறும் இடங்கள் மற்றும் காலிமனைகள் ஆகிய இடங்களில் மாநகராட்சி களப் பணியாளர்கள் மூலம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு கொசுப்புழு வளரும் இடங்கள் அழிக்கப்பட்டு வருகின்றன. தற்பொழுது மழை அவ்வப்பொழுது பெய்து வருவதால், பொதுமக்கள் தங்களின் வீடு மற்றும் சுற்றுப்புறத்தை தூய்மையாக பராமரிக்க வேண்டும். வீடுகளில் களஆய்வு மேற்கொள்ள மண்டல சுகாதார அலுவலரால் வழங்கப்பட்ட மாநகராட்சி அடையாள அட்டையுடன் வரும் மாநகராட்சி பணியாளர்களுக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இதில், அலட்சியாக இருக்கும் வீட்டு உரிமையாளர்கள் கள ஆய்வாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டால் அவர்கள் எச்சரிக்கப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. எனவே பொதுமக்கள் ஒத்துழைப்பு இல்லாவிட்டால் கொசுப் புழுக்களை ஒழிப்பது என்பது இயலாத காரியம். முழு ஒத்துழைப்பு அளித்தால் மட்டுமே கொசுப் புழுக்களை அழிக்க முடியும். அப்போது தான் டெங்கு போன்ற கொசுக்களால் ஏற்படும் நோய்கள் பரவுவதை தடுக்க முடியும். இவ்வாறு அவர்கள் கூறினர்….

The post சென்னையில் டெங்கு கொசுக்களை அழிக்க தீவிரம் வீடுவீடாக களப்பணியாளர்கள் ஆய்வு: மழைக்காலம் நெருங்குவதால் நடவடிக்கை appeared first on Dinakaran.

Tags : Chennai Field ,CHENNAI ,
× RELATED தொழில்நுட்ப கோளாறால் சென்னையில்...