×

துயர் நீக்கி அருள் சேர்க்கும் லலிதாம்பிகை அம்மன்..!!

அனைத்து உயிர்களுக்கும் முதலான சக்தியே லலிதா பரமேஸ்வரி. இந்த அன்னையிலிருந்தே சகலமும் உண்டானது என்றும் அன்னையின் இந்த அருள் கோலத்தை வழிபட அனைத்து வரங்களும் கிடைக்கும் என்பது நம்பிக்கை. வசந்த நவராத்திரியின் ஒன்பது நாள்களும் லலிதா பரமேஸ்வரியின் திருவுருவப்படத்தை வைத்து வழிபடுவது மிகவும் சிறப்பு மிக்கது.

பிரமாண்ட புராணத்தில் லலிதா சகஸ்ரநாமமும் லலிதோபாக்யானம் என்னும் லலிதையின் சரிதமும் காணக்கிடைக்கின்றன. உலகில் அனைத்து உயிர்களும் தங்களுக்குத் துன்பம் நேர்கிறபோது தம் தாயையே முதலில் நாடும். தாய் நமக்கு உடல் ரீதியான ஆறுதல் வழங்குவாள். ஆனால், இந்த உலகில் அனைத்து ஜீவன்களுக்கும் ஆதித் தாயாக விளங்குபவள் லலிதா பரமேஸ்வரி.

அவளை நாடி அவள் அருளை வேண்டினால் அனைத்து வரங்களும் கிடைக்கும் என்பது நம்பிக்கை. ஒருமுறை அன்னையின் சந்நிதியில் முப்பத்து முக்கோடி தேவர்களும் சரண்புகுந்தனர். இவர்களைக் கண்ட அன்னை தாயுள்ளத்தோடு இங்குள்ளவர்க்கு மட்டுமல்லாமல் அகிலத்தில் உள்ள அனைவர்க்கும் அவர்களின் குறைகளைத் தீர்க்கக்கூடிய ஸ்தோத்திரம் ஒன்றைச் செய்யுங்கள் என்று தன் வடிவான வாக் தேவியரிடம் கூறினாள். அவர்கள் அன்னை லலிதா பரமேஸ்வரியைப் போற்றி அருளிய ஸ்லோகமே லலிதா சகஸ்ரநாமம்.

வளம் சேர்க்கும் லலிதாம்பிகையை வீட்டிலே வழிபட...

அன்னை லலிதாம்பிகையின் அல்லது ஏதேனும் ஒரு அம்பிகையின் படம் இருந்தால்  அதற்கு பூஜை செய்யலாம். அல்லது ஒரு கும்பம் வைத்து அதில் அன்னையை ஆவாஹனம் செய்து வழிபடலாம்.

தினமும் குளித்து முடித்து பூஜை அறையைத் தூய்மை செய்து அம்பிகையின் படத்துக்கு பூ சாத்தி லலிதா சகஸ்ரநாமம் படிக்க வேண்டும். ஒவ்வொரு ருதுக்காலத்துக்கும் தனித்துவமான மலர்கள் உண்டு. மல்லிகை, முல்லை ஆகியவையே வசந்த ருதுக்காலத்துக்கான மலர்கள். முடிந்தால் இந்த மலர்களால் அலங்கரித்து அர்ச்சனையும் செய்யலாம். லலிதா சகஸ்ரநாமம் படிக்கும்போது ஒவ்வொரு நாமத்துக்கும் குங்குமம் கொண்டு அன்னையை அர்ச்சிப்பது சிறப்பானதாகும்.

Tags : Lalitambika Amman ,
× RELATED முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்!