×

திருப்பதி பத்மாவதி குழந்தைகள் இருதய மருத்துவமனையில் ஓராண்டில் 729 குழந்தைகளுக்கு இலவச அறுவை சிகிச்சை செய்து சாதனை

திருமலை : திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் குழந்தைகளுக்கான இருதய அறுவை சிகிச்சை மையம் திருப்பதியில் செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனை தொடங்கி ஒரு ஆண்டு நிறைவு விழா நேற்று நடைபெற்றது. இதில், செயல் அதிகாரி தர்மா பங்கேற்று நிருபர்களிடம் கூறியதாவது: குழந்தைகளுக்காக இருதய மருத்துவமனையை முதல்வர் ஜெகன்மோகன் கடந்தாண்டு  தொடங்கி வைத்தார். மருத்துவமனை தொடங்கப்பட்டு ஓராண்டில் 729 அறுவை சிகிச்சைகள் குழந்தைகளுக்கு செய்யப்பட்டுள்ளது. இதில், பிறந்த குழந்தை முதல் அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டு சாதனை படைக்கப்பட்டுள்ளது.  மருத்துவமனையில் செய்யப்பட்ட அறுவை சிகிச்சையில் 95 சதவீதம் வெற்றி பெற்றுள்ளது. நாட்டிலேயே குழந்தைகளுக்கு இருதய மருத்துவமனையில் முதல் 10 இடங்களுக்குள் மருத்துவமனை தொடங்கப்பட்ட ஓராண்டில் இடம் பெற்றுள்ளது. அறுவை சிகிச்சை செய்யும் குழந்தைகளுக்காக வெங்கடேஸ்வரா ஆபன அஸ்தம் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஒரு லட்ச ரூபாய் ஒரு குழந்தைக்கான அறுவை சிகிச்சைக்கு நன்கொடை வழங்கும் பக்தர்களின் குடும்பத்தில் 5 பேருக்கு ஏழுமலையான் கோயிலில் விஐபி தரிசனம் செய்து வைக்கப்படுகிறது. இதன் மூலமாக நன்கொடை அளித்த பக்தர்களுக்கும் குழந்தைக்கு அறுவை சிகிச்சை செய்ததற்கான மனதிருப்தியுடன் சுவாமி தரிசனம் செய்து வைக்கப்படுகிறது. அவ்வாறு 120 பேர் நன்கொடை வழங்கியுள்ளனர். மேலும், நன்கொடைகளை சுலபமாக்கும் விதமாக தேவஸ்தான இணையதளத்திலும் நன்கொடை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.இங்கு 3 ஆபரேஷன் தியேட்டர்கள், ஒரு கேத்லாக் ஆய்வகம், 40 ஐசியு படுக்கைளுடன் மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனையில் ஆரோக்கிய திட்டத்தின் மூலமாகவும், மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் மூலம் இலவசமாக குழந்தைகளுக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனையில்  ஆந்திரா மட்டுமின்றி நாட்டின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் பங்களாதேஷ் போன்ற வெளிநாடுகளில் இருந்தும் குழந்தைகளை அழைத்து வந்து வெற்றிகரமாக அறுவை சிகிச்சை செய்த மகிழ்ச்சியுடன் வெங்கடேஸ்வர சுவாமியின் அருளால் மீண்டும் அவரவர் ஊருக்கு சென்றுள்ளனர். இதற்காக, 13 டாக்டர்கள் கொண்ட மருத்துவர்களின் கூட்டு முயற்சியின் அடிப்படையில் இந்த முறையில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. அவசரமாக அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய குழந்தைகளுக்கு  24 மணிநேரமும் மருத்துவர்கள் உடனிருந்து அறுவை சிகிச்சை செய்து வருகின்றனர். குழந்தைகளின் உடல் ஆரோக்கியத்தை பொருத்து 2 முதல் 3 மாதங்களுக்குள் இருதய அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது. மேலும், பல்வேறு முன்னணி மருத்துவமனை உள்ள மருத்துவர்கள் தன்னார்வ சேவையின் கீழ் மருத்துவ சிகிச்சை அளிக்கும்படி தேவஸ்தானம் கேட்டு கொண்டதற்கிணங்க  பல முன்னணி மருத்துவமனைகளும் மருத்துவர்களும் இங்கு வந்து நோயாளிகளுக்கு இலவசமாக அறுவை  சிகிச்சை  செய்யவும் தாமாக முன்வந்துள்ளனர்.இதனால், நோயாளிகளுக்கு தரமான சிகிச்சை  அளிக்கவும் விரைவில் அறுவை சிகிச்சைகள் செய்ய முடியும். திருப்பதியில் உள்ள சுவிம்ஸ் மருத்துவமனை, பர்டு மற்றும் குழந்தைகள் இருதய மருத்துவமனை அனைத்தையும் ஒரே குடைக்குள் கொண்டு வரும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இதன் மூலம் மருத்துவமனைகளில் உள்ள மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் தேவைப்படும் நேரத்தில் அந்தந்த மருத்துவமனைகளுக்கு அவர்களின் சேவைகளை பயன்படுத்தி கொள்ளும் விதமாக பணிகள் நடைபெற்று வருகிறது. பர்டு மருத்துவமனையில் அதிநவீன தொழில்நுட்பத்தின் கூடிய சிடி ஸ்கேனர் மற்றும் எக்ஸ்ரே இயந்திரங்கள் உள்ளது. இங்கு தேவஸ்தான மருத்துவமனையில் சிகிச்சை பெற்று நோயாளிகளுக்கு மட்டுமின்றி வெளி நோயாளிகளுக்கும் இங்கு சிடி ஸ்கேன் குறைந்த செலவில் எடுக்கப்படுகிறது. எனவே, பொதுமக்கள் இதனை பயன்படுத்தி கொள்ள வேண்டும். இவ்வாறு, அவர் கூறினார். தொடர்ந்து, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும்  குழந்தைகளின் பெற்றோர்களிடம் பேசினார். அப்பொழுது, மருத்துவர்கள் சிறப்பாக சிகிச்சை அளிப்பதோடு இங்கு சுற்றுச்சூழலும் மிக தூய்மையாக இருப்பதாகவும், உணவும் இலவசமாக வழங்கப்படுவதாக செயல் அதிகாரி தர்மாவுக்கு நன்றி தெரிவித்தனர். சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனைக்கு பக்தர்கள் ₹160 கோடி நன்கொடைதலைமை செயல் அதிகார் தர்மா கூறுகையில், ‘குழந்தைகளுக்கான அனைத்து மருத்துவ சேவைகளுக்கும் சிகிச்சை அளிக்கும் விதமாக வெங்கடேஸ்வரா குழந்தைகள் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை ₹250 கோடியில் கட்டுமான பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. இன்னும், 2 ஆண்டுகளில் இந்த மருத்துவமனை பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும். இதற்காக, ₹1 கோடி நன்கொடை வழங்கும் பக்தர்களுக்கு ஏழுமலையான் கோயிலில் நடைபெறக்கூடிய உதய அஸ்தமன சேவையில் பங்கேற்க வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதனால், 160 பக்தர்கள் தலா ₹1 கோடி என ₹160 கோடி நன்கொடை வழங்கினர். மருத்துவமனை கட்டி முடிக்க தேவையான அனைத்து நிதியும் இத்திட்டத்தின் மூலம் கிடைப்பதோடு மருத்துவமனை நிர்வாக செலவும் பக்தர்களின் நன்கொடையின் மூலம் கிடைக்கும்’ என்றார்….

The post திருப்பதி பத்மாவதி குழந்தைகள் இருதய மருத்துவமனையில் ஓராண்டில் 729 குழந்தைகளுக்கு இலவச அறுவை சிகிச்சை செய்து சாதனை appeared first on Dinakaran.

Tags : Tirupati Padmavati Children's Cardiovascular Hospital ,Tirumalai ,Cardiovascular Surgery Centre for Children ,Tirupati ,Tirumalai Tirupati Devasthanam ,
× RELATED விசாகப்பட்டினத்தில் பரபரப்பு...